ஆனை முதுகினிலே - பல
அற்புதப் புத்தகங்கள்.
ஆனையின் மீதேறி - ஒருவன்
அமர்ந்து படித்திடுவான்.
இப்படி வாகனங்கள் - மேலே
ஏறிப் பலசிறுவர்
அப்படி இப்படியும் - சற்றே
ஆடிப் படித்திடுவார்.
அண்ணன் கதைபடிப்பான் - தம்பி
ஆசையாய்க் கேட்டிடுவான்.
சின்னஞ் சிறுவரிலே - சிலர்
சேர்ந்து படித்திடுவர்.
புல்லிலே ஓர்சிறுமி - சாய்ந்து
புத்தகம் தான்படிப்பாள்.
கல்லிலே ஓர்சிறுவன் - அமர்ந்து
கதைகள் படித்திடுவான்.
சிறுவர்க ளெல்லோரும் - உலகைத்
தெரிந்து கொள்வதற்கே
அறிவு நூல்களெல்லாம் - கதைபோல்
ஆனந்தம் ஊட்டிடுமே!
|