கடைசி நாள்
ரத்தின புரியின்
அரசனுக்கே
எத்தனை
மனைவியர்? அப்பப்பா!
மொத்தத் தொகையைச் சொல்லிடவா?
முன்னூற்
றறுபத் தைந்தாகும்!
மனைவியர் தனித்தனி வாழ்ந்திடவே
மாளிகை பலவும்
கட்டிவைத்தான்.
தினமும் ஒருத்தியின் மாளிகையில்,
திருப்தி
யாகச் சாப்பிடுவான்.
ஒவ்வொர் ஆண்டும் ஒருநாள்தான்
உண்பான்
ஒருத்தியின் மாளிகையில்.
இவ்விதம் சென்றன மூன்றாண்டு.
இனிமேல்
நான்காம் ஆண்டாகும்.
அந்த ஆண்டின் கடைசிதினம்
அரசனை
எந்த மனைவியுமே
வந்தே அழைக்கா திருந்ததனால்
வாட்டம்
கொண்டே அவனிருந்தான்.
|