பக்கம் எண் :

மலரும் உள்ளம்199

மாப்பிள்ளையும் பெண்ணும்

என்ன மாப்பிள்ளை? - இவர்
என்ன மாப்பிள்ளை?

கையில் கடி காரமில்லை,
   கடுக்கன் போட்ட காதுமில்லை.
பையில் ஒரு காசுமில்லை.
   பவுண்டன் பேனாக் கூடஇல்லை. (என்ன)

சரிகை வேட்டி கட்டவில்லை.
   சவ்வாதுப் பொட்டுமில்லை;
செருப்புக் கூடப் போடவில்லை.
   சிரித்துப் பேசத் தெரியவில்லை. (என்ன)

பள்ளிக் கூடம் போன தில்லை.
   படித்துப் பட்டம் பெற்றதில்லை.
மெள்ளக் கூட நடப்பதில்லை.
   வேலை எதுவும் செய்வதில்லை.

என்ன மாப்பிள்ளை? - இவர்
என்ன மாப்பிள்ளை?