வித்தைக் குரங்கு
ஒட்டுப் போட்ட சட்டை - அதை
உடம்பில் மாட்டிக் கொண்டு
குட்டிக் கரணம் போடும் - இந்தக்
குரங்கைப் பாராய், தம்பி.
குல்லாப் போட்ட குரங்கு - துள்ளிக்
கோலைத் தாண்டும் குரங்கு.
பல்லை இளித்துக் காட்டி - நம்மைப்
பழிக்கும் பொல்லாக் குரங்கு.
நாமம் போட்ட குரங்கு - நன்றாய்
நடனம் ஆடும் குரங்கு.
ராமா ராமா என்றால் - உற்று
நம்மைப் பார்க்கும் குரங்கு.
கூழைக் கும்பிடு போடும் - இது
கோல்எ டுத்தால் ஆடும்.
வாழைப் பழத்தைக் கொடுத்தால் - அதை
வாயில் அடக்கிக் கொள்ளும்.
|