பக்கம் எண் :

மலரும் உள்ளம்73

கவிமணித் தாத்தா

சின்னஞ் சிறிய பிள்ளைகள்
   சேர்ந்து பாடி மகிழவே
இன்ப மான கவிதைகள்
   இயற்றித் தந்த கவிமணி!

பள்ளி தோறும் பிள்ளைகள் 
   பாடிப் பாடித் தினமுமே
துள்ளிக் குதிக்கச் செய்திடும்
   தூய மனிதர் கவிமணி!

குழந்தை உள்ளம் குளிரவே
   கொஞ்சு கின்ற முறையிலே
பழகு தமிழில் பாடல்கள்
   பலவும் தந்த கவிமணி.

குருவி, காகம், கிளியெல்லாம்
   கூட்டி வந்து காட்டுவார். 
அருமையாகப் பாட்டிலே 
   அன்பு மிக்க கவிமணி!