பக்கம் எண் :

74மலரும் உள்ளம்

வண்ண வண்ண மலரையும் 
   வட்ட மான நிலவையும் 
கண்ணின் முன்னே நிறுத்துவார்
   கவிதை யாலே கவிமணி!

புல்லைத் தின்னும் பசுவினை,
   புலம்பு கின்ற குதிரையை,
நல்ல தோழன் நாயினை 
   நயந்து பாடும் கவிமணி!

மலரும், தொடுத்த மாலையும் 
   வாடிப் போகும், ஆயினும்,
"மலரும் மாலை யும்" என
   வாடி டாத நூலையே

எங்க ளுக்குத் தந்தவர்
   இன்பம் பொங்கச் செய்தவர்
தங்க மான கவிமணித் 
   தாத்தா வைநாம் போற்றுவோம்!