தேசியத்
தலைவர்கள்
லாஜபதிராய் பிரலாபம்
கண்ணிகள்
|
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே. |
1 |
வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? |
2 |
ஆசைக் குமரன் அருச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? |
3 |
அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமேனும் பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? |
4 |
வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? |
5 |
ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு.
|
6 |
சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு.
|
7 |
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம்
வெம்புலனை வென்றஎண்ணில் வீரருக்குந் தாய்நாடு. |
8 |
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு. |
9 |
கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு. |
10 |
கன்ன னிருந்த கருணைநிலம் தர்மனெனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு. |
11 |
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. |
12 |
வீமன் வளர்ந்த விறல் நாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம்.
|
13 |
சீக்கரெனு மெங்கள்விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு. |
14 |
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு. |
15 |
என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? |
16 |
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ? |
17 |
என்னை நினைந்தும் இரங்குவரோ? அல்லது
பின்னைத் துயர்களிலென் பேரும்மறந் திட்டாரோ? |
18 |
தொண்டுபட்டு வாடுமென்றன் தூய பெருநாட்டில்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். |
19 |
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். |
20 |