(மூன்றாம்
பகுதி - திருமணம்)
வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு
|
வில்லியனூர் மாவரசு,
மலர்க்குழல்
நாவரசு, நகைமுத்து ஆகியோர் மண
வழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்த
போது, மணவழகன் மகனான வேடப்ப
னின் உள்ளங் கவர்ந்து சென்றாள்
அன்றோநகைமுத்து?- இங்கு... |
|
புதுவை மணவழகன்
பொன்னின் பரிதி.
எதிரேறு முன்னர்
இனிய உணவருந்திப்
பட்டுக் கரை வேட்டி
கட்டி, நீள சட்டையிட்டுச்
சிட்டைமுண்டு மேல்துவளச்
சென்று கடைச்சாவி
ஓர் கையால் தூக்கி
ஒருகை குடையூன்றி
ஆரங்கே என்றழைத்தான்
தங்கம் அருகில் வந்தாள்,
ஆளும் கணக்கருமோ
அங்கு வந்து காத்திருப்பார்
வேலையொடு சென்று
கடைதிறக்க வேண்டுமன்றோ
பாடல் உரைகேட்கப்
பச்சைப் புலவரிடம்
வேடப்பன் சென்றுள்ளான்
வந்தவுடன், வில்லியனூர்
சின்னானிடம் அனுப்பித்
தீராத பற்றான
ஐந்நூறு ரூபாயை
அட்டியின்றி பெற்றுவரச்
சொல் என்று சொல்லி நின்றான்
தூய மணவழகன்,
'நல்லதத்தான்'என்று
நவின்றாள் எழில் தங்கம்!
காலிற் செருப்பணிந்து
கைக்குடையை மேல்விரித்து
மேலும் ஒரு தடவை
மெல்லிமுகம் தான் நோக்கிச்
சென்றான் மணவழகன்
செல்லும் அழகருந்தி
நின்றாள் திரும்பினாள்
நெஞ்சம் உருகித் தங்கம்!
கள்னலைக் கூவிக்
கடிதழைத்தாள்! சின்னவனாம்
பொன்னப்பன் மேல்முகத்தைப்
போட்டணைத்தாள். அன்னவர்க்குப்
பாங்காய் உடையுடுத்திப்
பள்ளிக் கனுப்பி வைத்தாள்
தாங்கா விருப்பால்
தலைப்பிள்ளை வேடப்பன்
இன்னும் வரவிலையே
என்றே எதிர்பார்த்தாள்.
பொன்மலைபோல் வந்திட்டான்
பூரிக்கின்றாள்தங்கம்!
'பச்சைப் புலவர்
பகர்ந்தவை என்' என்று
தச்சுக் கலைப்பொருளாம்
தங்கம் வினவிடவே
நல்லபுற நானூற்றில்
நான்கும், திருக்குறளில்
'கல்வி' ஒரு பத்தும்
கடுந்தோல் விலக்கிச்
சுளைசுளையாய், அம்மா
சுவைசுவையாய் உண்டேன்.
இளையேன் நான் செந்தமிழின்
இன்பத்தை என்னென்பேன்?
என்றுரைத்தான் வேடப்பன்.
'என்னப்பா வேடப்பா
உன் அப்பா சொல்லியதை
உற்றுக்கேள்' என்றாள் தாய்,
சின்னானை வில்லியனூர்
சென்றுநே ரிற்கண்டே
ஐந்நூறு ரூபாயை
அட்டியின்றி வாங்கிவா,
' என்று புகன்றார் தந்தை,
இப்போதே நீ செல்வாய்'
என்று தன் பிள்ளைக்கு
இயம்பினாள் தங்கம்.
அகமும் முகமும்
அலர்ந்தவனாய், "அம்மா
மிகவும் மகிழ்ச்சி" என்று
வேடப்பன் சென்றான்.
அமைய அவர்கட்கே
ஆனகறி எண்ணிச்
சமையலுக்குத்
தங்கம்சென் றாள். |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
|
அவள்
அண்டையில் அவன்
அறுசீர் விருத்தம்
|
தன்கடை மீதமர்ந்து
சரக்குகள் நிறுத்தி ருந்த
சின்னானை வணங்கி, என்ன
செய்திஎன் றினிது கேட்டுப்
பின்; அவன் 'அமர்க' என்னப்
பேசாமல் ஒருபால் குந்திப்
பன்மக்கள் அகன்ற பின்பு
வேடப்பன் பணத்தைக் கேட்டான்.
"இளகிப்போ யிற்றுநீவிர்
ஈந்திட்ட நல்ல வெல்லம்;
புளிநல்ல தாய் இருந்தால்
பொதிஐந்து வேண்டும் தம்பி
மிளகென்ன விலைகொடுப்பீர்?
வெந்தயம் இருப்பில் உண்டோ?
களிப்பாக்கு விலைஎவ்வாறு?
கழறுக என்றான் சின்னான்
இளகிய வெல்லம் மாற்றி
நல்லதாய் ஈவோம் இன்றே!
புளியோகை இருப்பி லில்லை
பொதிக்கொரு நூறு ரூபாய்
மிளகுக்கு விலை ஏறிற்று.
வெந்தயம் வரவே யில்லை!
களிப்பாக்கு நிறம்பழுப்புக்
கணிசமாய் இருப்பி லுண்டு!
சரக்கு வந்தெடுத்துப் போவீர்
தவணைக்குத் தருகின் றோமே!
இருக்கின்ற பற்றை மட்டும்
இன்றைக்குத் தீர்த்தால் போதும
வரத்திய சரக்குக் காக
வாணிகர் வந்து குந்தி
வரிக்கின்றார் கணக்கை' என்று
வேடப்பன் இனிது சொன்னான்.
ஐந்நூறு ரூபாய் எண்ணி
அளித்தனன் சின்னான்! யாவும்
இன்னொரு முறையும் எண்ணி
இடுப்பினில் வாரிக் கட்டிச்
சின்னானை வணங்கி' 'அண்ணா
சென்றுநான் வருவே' னென்று
முன்னுற நடந்தான் அந்த
மொய்குழல் வீட்டை நோக்கி!
மாவர சான தந்தை,
மலர்க்குழல் என்னும் அன்னை,
நாவர சான தம்பி,
உடன்வர நகைமுத் தென்னும்
பாவையும் விருந்தாய் வந்தாள்;
என்னுளந் தனில் படிந்தாள்;
ஓவியம் வல்லாள்; என்றன்
உருவையும் எழுதினாளே!
என்னையே தனி யிருந்து
நோக்குவாள்; யான் நோக் குங்கால்
தன்னுளம் எனக்கீ வாள்போல்
தாமரை முகம்க விழ்ந்து
புன்னகை புரிவாள் யானோர்
புறஞ்சென்றாள் அகந் துடிப்பாள்.
பின்னிய இரண்டுள்ளத்தின்
பெற்றியும் அறிந்தார் பெற்றோர்
வீட்டை விட்டகலுதற்கு
மெல்லியோ உள்ளம் நைந்தாள்!
மீட்டிய வண்டி தன்னில்
பலர்ஏறப் புறத்தில் குந்தி
வாட்டியபசிநோ யாளி
வட்டித்த சோற்றி லேகண்
நாட்டுதல் போல்என் மேல்கண்
நாட்டினாள் இணைத்தலின்றி!
தலைக்குழல் மேற்செவ் வந்தி!
தாமரை, முகமும் வாயும்!
மலைக்கின்ற மூக்கெள் ளின்பூ!
வாய்த்தசெங் காந்தள் அங்கை!
குலுக்கென இடைகு லுங்கச்
சிரித்தென்னைக் கொல்லு முல்லை!
மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற
வண்டியை மறந்தேனில்லை!
என்நிலை அறிய வில்லை
என்பெற்றோர் மங்கை நல்லாள்
தன்னிலை அறிய வில்லை
தனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார்
முன்நிலை வேறு நாங்கள்
முழுநீளக் குழந்தை அந்நாள்;
நன்னிலை காண வேண்டும்
நான் அவள், மணவறைக்குள்!
வேடப்பன் நகைமுத் தாளின்
நினைவோடு விரைந்து சென்றான்
வீடப்பு றத்தே தோன்ற
வீட்டுக்குப் பின்புறத்தில்
மாடப்பு றாவைக் கண்டான்
மாமர நிழ லின்கீழ்!
தேடக்கி டைத்த தேஎன்
செல்வமென்று அருகில் சென்றான
பழந்தமிழ்ச் சுவடித் தேனைப்
பருகுவான் எதிரிற் கண்டாள்
இழந்ததன் பெருஞ்செல் வத்தை!
இறந்தேன் நான் பிறந்தேன் என்றாள்
தழைத்தமா மரநி ழற்கீழ்
எனக்கென்றே தனித்தி ருந்தாய்
விழைந்த உன் பெற்றோர் மற்றோர்
வீட்டினில் நலமோ என்றான்.
'தந்தையார் புதுவை சென்றார்
தாயாரோ அன்னட வீட்டிற்
குந்தியே கதைவ ளர்ப்பார்
குப்பத்துப் பெருமாள் தாத்தா
வந்தனர் அவர் தாம் வீட்டு
வாயிலில் தூங்கு கின்றார்
செந்தமிழ்ப் பள்ளி சென்றார்
சிறியவர்!" ஆதலாலே
கருமணற் கடலோ ரத்தில்
பிறர்வரக் கண்ட நண்டு
விரைந்தோடு வதுபோல்ஓட
வேண்டிய தில்லை, சும்மா
இரும், மணம், காற்று, நிழல்
இவற்றிடை ஒன்று கேட்பேன்;
திருமணம் எந்நாள்? நாம்மேல்
செயத்தக்க தென்ன?' என்றாள்,
'நகைமுத்தை விரும்பு கின்றேன்
நாளைக்கே மணக்க வேண்டும்
வகைசெய்க அப்பா' என்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய் உன்பெற் றோர்பால்
நீசொன்னா லென்ன என்றான்
"மகளுக்கு நாணமில்லை
என்பார்கள்; மாட்டேன என்றாள்.,
இல்லத்துள் தாய் புகுந்தாள்
'எங்குள்ளாய் நல்லமுத்' தென்றே
செல்வியை அழைத்தாள்! மங்கை
திடுக்கிட்டு வீடு சென்றாள்
வில்லினின் றம்பு போல
வேடப்பன் கொல்லை நீக்கி
நல்லபிள் ளைபோல் வீட்டு
வாயிலுள் நடக்கலானான்.
மலரக்குழல் கண்டாள் 'ஓ!ஓ!
வேடப்பா வாவா என்றாள்.
'நலந்தானே அப்பா அம்மா?
நலந்தானே தம்பி தங்கை?
அலம்புக கைகால் வந்தே
அமரப்பா சாப்பிடப்பா
இலைப்போட்டா யிற்று வாவா
வேடப்பா' எனப்பகர்ந்தாள்.
தண்டலுக் காக வந்தேன்
அப்படி யேஇங் கும்மைக்
கண்டு போகத்தான் வந்தேன்
கடைக்கு நான் போகவேண்டும்
உண்டேபோ என்கின் றீர்கள்
உண்கின்றேன்' எனவே டப்பன்'
உண்டனன்: உண்ணக் கண்ட
நகைமுத்தோ உவப்பை உண்டாள்,
குப்பத்துப் பெருமாள் தாத்தா
குறட்டைவிட் டுறங்கினாரே!
எப்படிச் சென்றார்? நீயிங்
கிருந்தாயே நகைமுத் தாளே!
அப்படி அவர்சென் றாலும்
நீயன்றோ அழைக்க வேண்டும்
தப்புநீ செய்தாய்' என்று
தாய்மலர்க் குழலி சொன்னாள
இவ்வாறு சொல்லும் போதே
கொல்லையி லிருந்த தாத்தா
எவ்விடம் சென்று விட்டேன்
இங்குதான் இருக்கின்றேனே
செவ்வாழை தனில் இரண்டு
சிற்றணில் நெருங்கக் கண்டேன்
அவ்விரண் டகன்ற பின்னர்
வந்தேன்நான்' என்று வந்தார்
உணவினை முடித்த பின்னர்
'ஊருக்குச் செல்ல வேண்டும்
மணிஒன்றும் ஆயிற்'றென்று
மலர்க்குழ லிடத்திற் சொன்னான்.
"துணைக்குநான் வருவேன் தம்பி!
தூங்குவாய் சிறிது நேரம்
உணவுண்ட இளைப்புத் தீரும்
உணர்' என்றார் பெருமாள் தாத்தா.
'இளைப்பாறிச் செல்க தம்பி'
எனமலர்க் குழலும் சொன்னாள்
ஒளிமுத்து நகையோ, ஓடி
உயர்ந்தஓர் பட்டு மெத்தை
விளங்குறு மேல் விரிப்பு
வெள்ளுரைத் தலைய ணைகள்
மளமள வென்று வாரி
வந்தொரு புறத்தில் இட்டாள்
படுக்கையைத் திருத்தம் செய்து
வேடப்பன் படுத்தி ருந்தான்.
இடை இடை நகைமுத் தாளும்
இளநகை காட்டிச் செல்வாள்.
சுடுமுகத் தாத்தா வந்து
'தூங்கப்பா' என்று சொல்வார்
கடைவிழி திறந்த பாங்கில்
கண்மூடிக் கிடந்தான் பிள்ளை |
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
|
தந்தையார் இருவருக்கும் சண்டை
எண்சீர் விருத்தம்
|
மணவழகன், கடையினிலே
வணிக ரோடு,
வரவிருக்கும் சரக்குநிலை
ஆய்ந்து பார்த்துக்
கணக்கெடுத்துக் கொண்டிருந்தான்
அந்நே ரத்தில்,
கருப்பண்ணன் எனும்ஒருவன்
குறுக்கில் வந்து
'மணவழக ரே, ஆயி
ரத்தைந் நூறு மாவரசர்க் கேநீவிர்
தருதல் வேண்டும்
பணமுழுதும் வாங்கிவரச்
சொன்னார என்றான்!
பதைத்திட்டான் மணவழகன்
மானம் எண்ணி!
சீட்டேதும் தந்தாரோ?
உன்னிடத்தில்
செலுத்துவது சரியில்லை
அறியேன் உன்னை
கூட்டத்தின் நடுவினிலே
குறுக்கிட்டாயே
கூறுக நீ மாவரச
ரிடத்தில்' என்றான்.
'கேட்கின்றோம் கொடுத்தபணம்
எரிச்சல் என்ன?
கெட்டநினைப் புடையவர் நீர்'
என்று கூறி,
நீட்டினான் தன்னடையைக்
கருப்பண் ணன் தான்'!
நீருகுத்தான் மணவழகன்
இருகண்ணாலும்!
வந்திட்டான் மாவரசன்
எதிரில் நின்று
'வைகீழே என்பணத்தை'
என்று சொன்னான்
நொந்திட்டான் மணவழகன்
நொடியில் எண்ணி
நூற்றுக்கு முக்காலாம்
வட்டி போட்டுத்
தந்திட்டான்! மாவரசன்
பெற்றுக் கொண்டான்.
'தகாதவரின் நட்பாலே
மானம் போகும்'
இந்த மொழி சொன்னமண
வழகன் தன்னை
ஏசிமா வரசன்தான்,
ஏகலானான்.
'மாவரசன் தன்னைநான்
பணமா கேட்டேன்?
வைத்துவைப்பாய் என்றுரைத்தான்
வாங்கி வைத்தேன்.
யாவரொடும் பேசிநான்
இருக்கும் போதில்
எவனோவந் தெனைக்கேட்டான்
பணங்கொடென்று!
நோவ உரைத் திட்டானே
தீயன் என்னை!
நூறாயிரம் கொடுக்கல்
வாங்கல் உள்ளேன்:
நாவால்ஓர் வசைகேட்ட
தில்லை' என்று
நனிவருந்தி மணவழகன்
அழுதிருந்தான்.
மணவழகன் வழக்கறிஞ
னிடத்திற் சென்றான்.
மானக்கே டிதற்கென்ன
செய்வ தென்று
தணிவற்றுப் பதறினான்;
பொய் வழக்குத்
தான்தொடங்க வழக்கறிஞன்
சாற்றலானான்
இணங்கமறுத்த தவனாகி
நண்பர் பல்லோர்
இடமெல்லாம் இதைசொல்லி
வருந்த லானான்
துணைவியிடம் சொல்வதற்கு
வீடு வந்தான்
தொடர்பாக நடந்தவற்றைச்
சொல்லித் தீர்த்தான் |
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 ) |
எதிர்பாராத
இடைஞ்சல்
(அகவல்)
|
"நண்புளார் தீமை நாடினும்
அதனைப்
பண்புளார் பொறுப்பர்; பகையைக்கொள்ளார்
தாவுறும் உங்கள் தகைமையை அந்த
மாவர சாலோ மாற்ற முடியும்?
தீதுசெய் தார்க்கும் நன்மை செய்வர்
மூது ணர்ந்தவர் முனிவு செய்யார்
அத்தான் மறப்பீர்? அகம்நோ காதீர
என்று தேறுதல் இயம்பினாள் தங்கம்
மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான்.
தந்தை யாரிடம் சாற்றுகின்றான்;
'சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய்
மணிபத் தாகிற்று மாவர சில்லம்
அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்;
மலர்க்குழ லம்மையார் வற்புறுத்தியதால்
உண்டேன்; சற்றே உறங்கினேன் என்னுடன்
பெருமாள் தாத்தா வருவாரானார்.
மகன்சொல் கேட்ட மணவழ கன்தான்
முகங்கனலாக 'முட்டாள்! முட்டாள்!
செல்ல லாமோ தீயன்வீடு?
மதியார் வீடு மிதியார் நல்லார்!
பொல்லாப் பிள்ளை நில்லா தேஎதிர்
போபோ!' என்று புகலலானான்
தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து
'மாவர சின்று மதிப்பிலா வகையில்
நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி;
கடைக்குப் போயிரு கண்ணே' என்றாள்
அடக்க முடியாத் துன்பம்
படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே! |
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 ) |
பகை
நண்பாயிற்று
(பஃறொடை வெண்பா)
|
தாழ்வாரந் தன்னிலொரு
சாய்வுநாற் காலியிலே
வாழ்வில் ஒரு மாசு
வந்ததென எண்ணி
மணவழகன் சாய்ந்திருந்தான்.
மாற்றுயர்ந்த தங்கம்
துணைவனுக்கோர் ஆறுதலும்
சொல்லி அருகிருந்தாள்.
தங்கம் என்று கூவித்
தடியூன்றி அப்பெருமாள்
தாத்தாவர லானார்;
அகமகிழ்ந்தார் அவ்விருவர்.
சாய்ந்திருக்க நாற்காலி
தந்தார்; பருகப்பால்
ஈந்து, நலங் கேட்டே
எதிரில் அமர்ந்தார்கள
"வேடப்ப னோடுதான்
வில்லிய னூரினின்று
வாடகை வண்டியிலே
வந்தேன். கடைத்தெருவில்
வெண்காயம் என்ன
விலையென்று கேட்டுவந்தேன்
சுண்டைக்காய் வாங்கிவரச்
சொன்னாளென் பெண்டாட்டி.
வில்லிய னூரில்ஓர்
வேடிக்கை கண்டேன்உம்
செல்வனைப் பற்றிய
செய்தி அது சொல்லுகிறேன்:
'பத்து மணி இருக்கும்
பாவை நகைமுத்தாள்
புத்தகமும் கையுமாய்
வீட்டுப் புறத்தினிலே
உள்ளதொரு மாமரத்தின்
நிழலிலே உட்கார்ந்து
தெள்ளு தமிழில்
செலுத்திஇருந்தாள்கருத்தை!
வேடப்பன் வந்தான்
விளைந்தவற்றை என்சொல்வேன்?
'தேடக் கிடைத்தஎன்
செல்வமே' என்றான்.
மறைந்துநான் கேட்டிருந்தேன்
வஞ்சியின் பேச்சை!
'இறந்தேன் நான் இன்று
பிறந்தேன்' என்று புகன்றாள்
அன்பின் பெருக்கத்தை
அன்னவர்பால் நான்கண்டேன்
'என்று மணம் நடக்கும்?'
என்றுகேட்டாள்பாவை.
பெற்றோர்பால் நீநமது
பேரன்பைக் கூறிமணம்
இற்றைக்கே ஈடேற
ஏற்பாடு செய்' என்றாள்.
'நீதான் சொல்' என்றுரைத்தான்
வேடப்பன்! நேரிழையாள்,
'ஓதுவேன், நாணமில்லா
ஒண்டொடி என்பார்' என்றாள்.
இவ்வாறு பேசி
இருந்தார்கள் அன்னவற்றை
அவ்வாறே சொல்ல
அறியேன்! அதேநேரம்
வீட்டினின்று தாயழைத்தாள்
மெல்லி மறைந்தாளே
ஓட்ட மெடுத்தானே
வேடப்பன் உட்சென்றான்.
'வா' என்றழைத்தாள்
மலர்க்குழலி சோறிட்டாள்.
பாவையவள் வேடப்பன்
பார்க்க உலவியதும்,
மெத்தையைத் தூக்கிவந்து
தாழ விரித்ததுவும்,
முத்துச் சிரிப்பை
முகத்தில் பரப்பியதும்,
வேடப்பன் தூங்குவது
போலே விழிமூடி
ஆடுமயில் வந்தால்
அழகைப் பருகுவதும்,
எவ்வாறுரைப்பேன் காண்
யானோர் கவிஞனா?
இவ்வேளை இந்தநொடி
ஏற்பாடு செய்திடுக!
இன்றே செயத்தக்க
இன்பமணத் தைநாளைக்
கென்றால், துடிக்கும்
இளமைநிலை என்னவாகும்?"
என்றார் பெருமாள்.
இவையனைத்தும் கேட்டிருந்த
குன்றொத்த தோளானும்
தங்கக் கொடியும்
மயிர்கூச் செறிய
மகிழ்ச்சிக் கடலில்
உயிர்தோயத் தங்கள்
உடலை மறந்தே
கலகலென வேசிரித்தும்
கைகொட்டி ஆர்த்தும்
உலவியும் ஓடியும்
ஊமைஎன இருந்தும்
பேசத் தலைப்பட்டார்
எங்கள் பெரிய பிள்ளை
யின்காதல் நெஞ்சினிலே
வாழுகின்ற வஞ்சியை எம்
சொத்தெல்லாம் தந்தேனும்
தோதுசெய மாட்டோமோ?
கத்தினான் மாவரசன்
கண்டபடி ஏசிவிட்டான்.
என்பிள்ளை தன்மகள்மேல்
எண்ணம்வைத்தான் என்னில், அவன்
பொன்னடியை என் தலைமேல்
பூண மறுப்பேனா?
என் பிள்ளை உள்ளம், அவன்
ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம்
ஒன்றானால் எங்கள்
பகையும் ஒழியாதோ!
என்றான் மணவழகன்
ஏதுரைத்தாள் தங்கம்எனில்,
'இன்றேநீர் வில்லியனூர்
ஏகுகதாத்தா தாத்தா!
எங்கள் மகன் கருத்தை
எம்மிடம் சொன் னீர் அதுபோல்
திங்கள்முகத் தாள் கருத்தை
அன்னவர்பால் செப்பி
மணத்தை விரைவில்
மணமகன் வீட்டில்
பணச்செலவு நேர்ந்தாலும்
பாங்காய் நடத்த
உறுதிபெற்று வந்தால்எம்
உள்ளம் அமையும்
அறிவுடையீர் உம்மால்தான்
ஆகும்இது' என்றாள
சிற்றுண வுண்டு
சிவப்பேறக் காய்ச்சியபால்
பெற்றே பருகிப்
பெரியதொரு வண்டியிலே
ஏறினார் தாத்தார்
'இசைவார் அவர்' என்று
கூறிச்சென்றார் மகிழ்ச்சி கொண்டு, |
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
( 415 )
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
( 440 )
( 445 )
( 450 )
( 455 )
( 460 )
( 465 )
( 470 )
( 475 )
( 480 )
( 485 )
( 490 )
( 495 )
( 500 )
( 505 )
( 510 )
( 515 )
|
|
|
|