காட்சி
1
(மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாதிபதி
காங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்,)
பஃறொடை
வெண்பா
சேனாதிபதி ;
மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்!
மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா
நமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.
அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி
எனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்ப!
உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!
மந்திரி ;
ஒன்றுகேள் சேனைத் தலைவ! பகைப்புலம்
இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும்,
அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!
தரையினர் மெச்சும் சர்வ கலையினள்!
சேனாதிபதி ;
அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!
மந்திரி ;
நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்,
சேனாதிபதி ;
ஆடை, அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்,
அஞ்சுவதும் நானுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,
மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஓர்பகுதி!
ஆனமற் றோர்பகுதி ஆண்மைஎனப் புகல்வேன்!
எவ்வாறா னாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்!
செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி!
மந்திரி ;
(சிரித்துச் சொல்வான்)
மானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார்
ஆன அதனை அளித்ததெது? மீனக்
கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை
நடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்தி
வடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற்
கொடிது!' குறையுடைத்து! மேலும்அது கிடக்க;
மன்னன் இளமைந்தன் எட்டுவய துடையான்,
இன்னும் சிலநாளில் ஆட்சிஎனக் கென்பான்.
சேனாதிபதி ;
கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும்
நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புரத்தில்
வைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான். இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்!
மந்திரி ;
ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே!
சாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன் நீ!
உன்எண்ணம் என்னசொல்? நான்உனக் கொத்திருப்பேன்?
முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு!
சேனாதிபதி ;
ராசாங்க பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்; பின்
தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே
ஆட்சிசெய வேண்டும்என் ஆசையிது! காலத்தை
நீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்!
மந்திரி :
பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின் அமைப்பைஅதன்
மிக்க வலிமைதனைக் கண்டோர் வியக்கி்ன்றார்
தண்டோராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம்.
அண்டிவந்துதாம் திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.
சேனாதிபதி ;
தேவிலை! நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில்
ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா! |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 ) |
(சேனாதிபதி
அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி
வைக்கக்கருதிக் காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வி
யில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்
கிறான். கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்
கொண்டு உடன் வசிக்கிறார்.)
காளிமுத்து ;
என்னா கெழவா? பொடியனெங்கே? இங்கேவா!
கன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது?
மாடுவுளை மேய்க்கவுடு! மாந்தோப்பில் ஆடவுடு!
காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித் தராதே!
கிழவர் ;
மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும்
கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்!
மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ
ஒன்றும் வராமே உன்உத்தரவுப் போல்நடப்பேன்
காளிமுத்து ;
ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும்
ஓநாயில் லாதஇடம் ஓட்டு!
|
( 50 )
( 55 )
|
(கிழவர் ஓர் தனியிடத்தில்
சுதர்மனுக்கு
வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்.)
எண்சீர்
விருத்தம்
கிழவர் ;
விற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணை
விரைந்தேற்றித், தெறித்துப்பார்! தூணீ ரத்தில்,
பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப்
பழுதின்றிக் குறிபார்த்து, லட்சியத்தைப்
பற்றிவிடு! மற்றொன்று, மேலும் ஒன்று
படபடெனச் சரமாரி மொழி! சுதர்மா
நிற்கையில்நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத் தைப்போல்!
நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி கொள்நீ!
சுதர்மன் ;
கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்
கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு
மற்போரும், விற்போரும், வாளின் போரும்,
வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்!
நற்போத காசிரியப் பெரியீர், இங்கு
நானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்!
அற்புதமாம்! தங்களைநான் இன்னா ரென்றே
அறிந்ததில்லை; நீரும் அதைவிளக்கவில்லை.
கிழவர் ;
இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள
இச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப்
பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்த
பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன்
என்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை!
இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை
மின்னாத வானம்இனி மின்னும்! அன்பு
வெறிகாட்டத் தக்கநாள் தூரமில்லை!
|
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
|
|
| |