எதிர்பாரத
முத்தம்
இரண்டாம் பகுதி
முறையீடு
தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்
|
திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த -- குருமூர்த்தி
சீர்மாசிலாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கன், நிதிமிக்க -- ஊர்மதிக்கும்
நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம்! -- அன்னார்
அருளுவார்; "மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ள நாமறியோம்! சிந்தை -- உருகாதீர்!
அன்பே சிவமென்றறிந்தோன், அறியார்க்குத்
தின்புலால் யாகச் சிறுமைதனை -- நன்றுரைத்தான்!
ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!
தீதலால் வேறு தெரியாரோ! -- சோதியான்
சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்பதாகும் உணர்ந்திடுவீர் -- மெய்யன்பீர்,
பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! -- தீங்கு
வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்! -- வடவர்,
அழிவாம் குறுநெறியாதேனும், பழிக்குப்
பழிவாங்குதல் சைவப் பாங்குக்கு -- இழிவாம்!
வடநாட்டில் சைவம் வளர்ப்போம்! கொலையின்
நடமாட்டம் போகும்! நமனைக் -- கெடமாட்டும்
தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி! -- கேளீர்,
குமரகுருபரன் ஞான குருவாய்
நமை அடைந்தான் நன்றிந்த நாள்!
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
|
குருபரனுக்கருள் புரிந்தான்
|
கயிலாசபுரத்தில் நல்ல
சண்முகக் கவிராயர்க்கும்,
மயில்நிகர் சிவகாமிக்கும்
வாயிலாப் பிள்ளையாக
அயலர் நகைக்கும் வண்ணம்
குருபரன் அவதரித்தான்.
துயரினால் செந்தூர் எய்திக்
கந்தனைத் துதித்தார் பெற்றோர்.
நாற்பது நாளில் வாக்கு
நல்காயேல் எங்கள் ஆவி
தோற்பது திண்ணமென்று
சொல்லியங் கிருக்கும் போது,
வேற்படை முருகப் பிள்ளை
குருபரன் தூங்கும் வேளை,
சாற்றும்அவ் ஊமை நாவில்
சடாட்சரம் அருளிச் சென்றான்
|
( 30 )
( 35 )
( 40 )
|
அம்மையே அப்பா என்று
பெற்றோரை அவன் எழுப்பிச்
செம்மையே நடந்த தெல்லாம்
தெரிவித்தான்! சிந்தை நைந்து
கைம்மையாய் வாழ்வாள் நல்ல
கணவனைப் பெற்றதைப்போல்.
நம்மையே மகிழ வைத்தான்
நடமாடும் மயிலோன் என்றார்!
மைந்தனார் குருபரன்தான்
மாலவன் மருமகன் வாழும்
செந்தூரில் விசுவரூப
தரிசனம் செய்வானாகிக்
கந்தரின் கலிவெண்பாவாம்
கனிச்சாறு பொழியக் கேட்ட
அந்தஊர் மக்கள் யாரும்
அதிசயக் கடவில் வீழ்ந்தார்!
|
( 45 )
( 50 )
( 55 )
|
ஞானகுருவை நாடிச் சென்றான்
|
ஞானசற் குருவை நாடி
நற்கதி பெறுவதென்று
தானினைந்தேதன் தந்தை
தாயார்பால் விடையும் கேட்டான்
ஆனபெற்றோர் வருந்த
அவர்துயர் ஆற்றிச் சென்றான்,
கால்நிழல் போலகுமார
கவியெனும் தம்பியோடே.
மீனாக்ஷி அம்மன் பிள்ளைத்
தமிழ்பாட விரைந்து, தம்பி
தானதைக் குறிப்பெடுக்கத்
தமிழ்வளர் மதுரை நாடிப்
போனார்கள்; போகும் போது
திருமலை நாய்க்க மன்னன்
ஆனைகொண்டு எதிரில் வந்தே
குருபரன் அடியில் வீழ்ந்தான்.
|
( 60 )
( 65 )
( 70 )
|
என்னையும் பொருளாய் எண்ணி
எழுதரும் அங்கயற்கண்
அன்னை; என் கனவில் தோன்றி,
அடிகள்நும் வரவும், நீவிர்
சொன்னநற்றமிழும் பற்றிச்
சொன்னதால் வந்தேன் யானை
தன்னில்நீர் எழுந்தருள்க
தமிழுடன்! என்றான் மன்னன்.
தெய்வீகப்பாடல் தன்னைத்
திருவரங்கேற்று தற்கே.
எய்துமாறனைத்தும் மன்னன்
ஏற்பாடு செய்தான். தேவர்
துய்யநற் தமிழ்ச் சாராயம்
தூய்ந்திடக் காத்திருந்தார்,
கையில்வாத் தியங்கள் ஏந்திக்
கந்தவர்வர் கண்ணாய் நின்றார்.
|
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
|
அரங்கிடை அரசன் ஓர்பால்,
அறிஞர்கள் ஓர்பால், கேட்கத்
தெறிந்தவர், கலையில் வல்லோர்
செந்தமிழ் அன்பர் ஓர்பால்
இருந்தனர்! அரியணைமேல்
இருந்தனன் குருபரன்தான்!
வரும்சனம் தமிழருந்த
வட்டிக்க ஆரம்பித்தான்!
அப்போது கூடத்தின்கண்
அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்.
சிப்பெத்தை விரித்தெடுத்த
சீனத்துப் பொம்மை போன்றாள்.
ஒப்பியே ஓடி வந்தாள்
காற்சிலம் பொலிக்க! மன்னன்
கைப்பற்றி மடியில் வைத்தான்
கவிதையில் அவாவை வைத்தான்.
|
( 95 )
( 100 )
( 105 )
|
குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,
அமரராதியர் விருப்பம்
ஆம்படி செய்தான்; மற்றோர்
அமுதப்பாட்டு ஆரம்பித்தான்
அப்பாட்டுக்கு இப்பால் எங்கும்
சமானமொன்று இருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர்;
''தொடுக்கும் கடவுட் பழம் பாடல்
தொடையின் பயனே! நறைப்பழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறும்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர்! உனக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே! எறிதரங்கம்.
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள்ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர்ஓவியமே! மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடு தந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத்துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே!''
|
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 ) |
என்றந்தப் பாடல் சொன்னான்
குருபரன்; சிறுமி, கேட்டு
நன்று நன்றென இசைத்தாள்;
நற்றென அசைத்தாள்;
இன்னொரு முறையுங் கூற
இரந்தனன்! பிறகும் கேட்கப்
பின்னையும் குருபரன்தான்
தமிழ்க்கனி பிழியுங் காலை,
பாட்டுக்குப் பொருளாய் நின்ற
பராபரச் சிறுமி நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
கொஞ்சினாள், அரங்குதன்னில்!
ஏட்டினின்று எழுத்தோடோடி
இதயத்துள் சென்றதாலே,
கூட்டத்தில் இல்லை வந்த
குழந்தையாம் தொழும் சீமாட்டி!
|
( 145 )
( 150 )
( 155 )
|
முழுதுநூல் அரங்கேற்றிப்பின்
முடிமன்னன், குதிரை யானை,
பழுதிலாச் சிவிகை செம்பொன்
காணிக்கை பலவும் வைத்துத்
தொழுதனன். குருபரன்பின்,
துதிநூலும் நீதி நூலும்
எழுதிய அனைத்தும் தந்தே
சின்னாட்கள் இருந்து பின்னே,
தம்பியை இல்லம் போக்கித்
தான், சிராப்பள்ளி யோடு
செம்மைசேர் ஆனைக் காவும்
சென்று, பின் திருவாரூரில்
பைம்புனற் பழனத்தாரூர்
நான்மணி மாலை பாடி,
நம்மைவந்தடைந்த காலை
நாமொரு கேள்வி கேட்டோம்
''ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருள் கரணங்கள் நான்கும்
சிந்தையேயாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக,
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில், தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்'
ஆகுமித் திருவிருத்த
அனுபவப் பயனைக் கேட்க,
ஈகுவோன் கையிலொன்றும்
இல்லாமை போல் தவித்துத்
தேகமும் நடுங்கி நின்று
திருவடி சரணரம் என்றான்.
ஏகிப்பின் வருக என்றோம்;
சிதம்பரம் ஏகி உள்ளான்.
சென்றஅக் குருபரன்தான்
திரும்பி வந்திடுமோர் நாளும்
இன்றுதான், சிறிது நேரம்
இருந்திடில் காணக்கூடும்''
என்றுநல் தேசிகர்தாம்
இருநாய்கன்மாருங் கேட்க
நன்றுற மொழிந்தார் கேட்ட
நாய்கன்மார் காத்திருந்தார்.
|
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 ) |
சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்
|
புள்ளிருக்கும்வேளூர்ப் போய்ப்
புனைமுத்துக்குமரன் மீது
பிள்ளைநூல் பாடி, மன்றில்
பெம்மானை மும்மணிச் சொல்
தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும்
சிதம்பரச் செய்யுட்கோவை,
அம்மைக்கு இரட்டை மாலை
அருளினான் இருளொன்றில்லான்.
மூளும் அன்பால் பண்டார
மும்மணிக் கோவை கொண்டு
ஆளுடை ஞானாசானின்
அடிமலர் தொழுது பாடி,
நீளுறப் பரிசாய்ப் பெற்ற
நெடுநிதி அனைத்தும் வைத்து,
மீளவும் தொழும் சீடன்பால்
விளம்புவான் ஞானமூர்த்தி:
'அப்பனே, இதுகேள், இந்த
அரும்பொருள் அனைத்தும் கொண்டு
செப்பிடும் வடநாடேகிச்
சிவதருமங்கள் செய்க!
அப்பாங்கில் உள்ளாரெல்லாம்
அசைவர்கள், உயிர்வதைப்போர்;
தப்பிலாச் சைவம் சார்ந்தால்
அன்பிலே தழைத்து வாழ்வார்.
சைவநன் மடாலயங்கள்
தாபிக்க! கோயில் காண்க!
நைவார்க்குச் சிவபிரானின்
நாமத்தால் உணவு நல்கும்
சைவசத்திரங்கள் காண்க!
தடாகங்கள் பூந்தோட்டங்கள்
உய்வாக, உயிரின் வேந்தன்
உவப்புறச் செய்து மீள்க!"
என்று தேசிகனார் சொல்லி
இனிதாக ஆசி கூறி,
நன்றொரு துறவு காட்டிக்
காவியும் நல்கி, ஆங்கே
"இன்றொடு வட தேசந்தான்
எம்பிரான் இருக்கை யாகித்
தென்றமிழ் நாட்டினைப் போல்
சிறப்பெலாம் எய்த" என்றார்
மறைநாய்கன் மான நாய்கன்
வாய்மூடிக் காத்தி ருந்தார்
குறைவறு பரிசனங்கள்
கூட்டமாய்த் தொடர, அன்பால்
இறைவனாம் தேசிகன்தாள்
இறைஞ்சிய குருபரன்தான்,
பிறைசூடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.
|
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
|
இப்போதெப்படி நாய்கன்மார்கள்?
|
தேசிகர் சரிதம் சொன்னார்.
செவிசாய்த்தார் நாய்கன்மார்கள்
ஆசிகன் சொல்லக் கேட்டார்:
அப்போது குருபரந்தான்
தேசிகர் திருமுன் வந்து
சேர்ந்தது பார்த்திருந்தார்.
நேசத்தால் தேசிகர்தாம்
நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்.
வடநாட்டை நோக்கிச் சென்ற
வண்ணமும் பார்த்திருந்தார்.
உடன்சென்று வழியனுப்ப
ஒப்பினோர் தமையும் பார்த்தார்
கடன் ஆற்றத் தேசிகர்க்கும்
கைகளும்
குவித்தார். செல்ல
விடைகேட்டார் தேசிகர்தாம்
விடைதந்தார்; எனினும் அந்தோ!
அழுதிடு நாய்கன்மார்கள்
அழுதுகொண்டே மீண்டார்கள்!
எழுதிய ஓவியங்கள்
கலைந்தன எனப்பதைத்தார்!
பழுதிலா எம்கு டும்பப்
பரம்பரை 'ஆல்' இன்றோடு
விழுதொடு சாய்ந்ததென்று
விளம்பினார் உளம் பதைத்தே.
பொன்னையும் பாரான் புகழுரை வேண்டான்
தன்னலம் கருதித் தயங்கிட மாட்டான்
அமிழ்தினும் இனிதென ஆன்றோர் போற்றும்
தமிழ்மொழித் தொண்டே தவமெனத் தாங்கி
தாய்மொழிப் பண்பின் தனிமையைக் காக்கும்
வாய்மையே தன்னுடைய வாழ்வின் உயிர்ப்பென
முதுமையிற் புகுந்துள முரண்களை மாற்றி
புதுமையிற் பாடும் புரட்சிக் கவிஞன்
கெடுதலை யெல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்
விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரைக்கும்
கள்ளத் தனங்களைக் கடிந்திகழ் புலவன்
பாரதி அவர்களின் பக்தனாம்; நண்பன்
பாரதி தாசன் பல்லாண்டு வாழ்க!
--நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
வீரமறத் தமிழன்; நெஞ்சில்
விடுதலைக் கொள்கையாளன்!
பாரதியைக் காத்த புதுவைப்
பாவலன்! அன்பிற் பழுத்தோன்!
நேரமெலாம் தமிழர் ஆட்சி
நிலைபெற உழைப்போன்! உலகில்
பேரறிஞன்! என்றன் ஆசான்
பீடெலாம் பெற்று வாழ்க!
--கவிஞர்
கம்பதாசன்
தன்னலமுந் தன்குடும்பத் தின்னலமும் பேணாது
மன்னலமே யென்றும் மதித்தொழுகித்- தன்னினமாஞ்
செந்தமிழ் மக்கள் சிறந்தோங்க வாழ்வதற்கே
வந்தன்ன பாரதி தாசன்.
புரட்சிப்பா வேந்தனென்று போற்றும் புகழில்
முரட்சிக் கிடமின்றி முற்றி-வறட்சியால்
வாடி வருந்தினும் வண்டமிழைக் கைவிடான்
வீடினான் பாரதி தாசன்!
--மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர்
|
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
|
|
|
|