பக்கம் எண் :

பாண்டியன் பரிசு

இயல் 21


   { கிழவி, இவ்வாறு நடந்தவை கூறிநையும்போது
வீரப்பன் அக்குடிசை நோக்கி வந்தவன் இவை
களை ஒளிந்து கேட்டிருந்தான். உண்மை
உணர்ந்தான். }


வெளியினிலே பேழையொடு நின்றி ருந்த
வீரப்பன் இவற்றையெல்லாம் கேட்டி ருந்தான்:
களிகொண்டான்! தன்முதுகில் உள்ள பேழை
கதிர் நாடு கவின் அன்னம் உடைமை என்று
வெளிப்படுத்தத் தக்கதோர் பேழை என்று
விளங்கிற்றுத்! தன்மனைவி ஆத்தா, அங்குக்
கிளிமொழியாள் அன்னத்தைக் காப்பதற்கும்
கேடுதனை நீக்கற்கும் முயலுகின்ற

நிலையாவும் விளங்கிற்று! வீரப் பன்தான்
நீள்பேழை தனை ஆத்தா விடம்இப் போதே
குலையாமல் தந்திடவும் நினைத்தான்! நாட்டின்
கொந்தளிப்பில் பேழையினை அவள்காப் பாற்றும்
வலிஏது? பொறுத்திருப்பேன் எனமு டித்து
மற்றும் அவர் பேசுவதைக் கேட்டிருந்தான்!
தலைமீது கைவைத்துத் தாயே அப்பா
தனிவிட்டுச் சென்றீரோ இனிவாழ்வேனோ?










( 5 )





( 10 )




( 15 )
இயல் 22

   { அன்னத்தின் துன்பம்}

ஐயகோ என் ஆத்தா! வைய கத்தில்
அன்னைமடிந் தாளென்று சொன்ன சொல்லைத்
தையலென துளம்பொறுத்த துண்டு; பின்பு
தந்தையிறந் ததுபொறுத்ததுண்டு; மேலும்
துய்யகதிர் நாட்டுரிமை பேழை யோடு
தொலைந்ததையும் பொறுத்ததுண்டு; பொறாத தீமை
செய்துவந்தான் என்மாமன் என்றால் இந்தச்
சிறியஉளம் பெருந்துயரைப் பொறுப்ப துண்டோ?

உடன்பிறந்தா ளைவெட்டி, அன்னோள் ஆவி
ஒப்பானின் உடல் சாய்த்தே இப்பால் என்னைத்
தொடர்ந் தழிக்க எண்ணியவன் மாமன் என்றால்,
சுரந்தபால் இருந்தருந்திப் பரந்து லாவும்
நெடும் பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும்
நிறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக்
கிடந்துதவம் புநிகின்ற உலகில் இந்நாள்
"கேடிழைக்கும்உற" வெனும்சொல் கேட்ப தேயோ?

ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனி யெல்லாம்
கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
கண்மறைக்கும் சுரிகுழலை மேலொ துக்கி
மைப்புருவ விழிமீது விழிய மைத்து
மலர்வாயால் குளிர் தமிழால் கண்ணே என்று
செப்பிமுத்த மிட்டாளே! அன்புள் ளாளின்
செந்தாமரை முகத்தை மறப்போனோநான்?

இம்மாநி லம்புகழும் தந்தை, முந்தை
ஈட்டிவைத்த மாணிக்கம் கூட்டி அள்ளிக்
கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால்
கலையருள வேண்டித்தன் தலைவணங்கி
அம்மாஎ னக்கூவிக் கைம்மே லேந்தி
அருகமர்ந்து பருகஎன்று பாலும் தந்தே
"அ"ம்முதல் எழுத்தளித்தான்; அறிவோ அன்னோன்
அன்பான திருமுகத்தை எண்ணி வாடும்!

ஊராளும் தலைவனின் குற்றேவல் செய்வோன்
ஓட்டுவிக்கும் சிற்றாளின் கீழ்க்கி டக்கும்
ஓர்ஆளின், மகள், தன்னை உவந்து பெற்றோர்
உயிர் துறந்தால் உளந்துடிப்பாள் என்றால் இந்தப்
பாராளப் பெற்றாரை என்பெற் றாரை
பறிகொடுத்த என்னுயிரோ உடலில் நிற்கும்?
யாருமில்லை யான்பெற்ற பேரு பெற்றோர்;
இன்றைக்கோ என்போலக் கெட்டாரில்லை!






( 20 )






( 25 )




( 30 )





( 35 )





( 40 )




( 45 )





( 50 )




( 55 )
இயல் 23

   { பதுங்கியிருந்து கேட்டிருந்த வீரப்பன் போய்
விட்டான் நரிக்கண்ணனுக்கு முடி சூட்டுவதை
முரசறைகின்றான் ஒருவன்! }


எனத்துடித்தாள்! வீரப்பன் எடுத்தான் ஓட்டம்!
இங்கிருந்தால் அன்னத்தைத் தேடு வோரின்
சினத்தீயில் வெந்திடுதல் அன்றி, பேழை
சிறியநரிக் கண்ணனிடம் சேரு மென்று
நினைத்தானாய், யாருமிலா இடம்பு குந்தான்!
நீங்கியபின் முரசறைவோன். "நரிக்கண்ணர்தாம்
இனிக்கதிர் நாட்டுக்கரசாய் முடிபூண் கின்றார்
இந்நாள என்றான் இதனை இருவர் கேட்டார்.

அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான்
அழிவைத்தான்! விழிவைத்தான் உரிமை வேரில்!
குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில்! எங்கும்
கொலை, வைத்தான்! குறைவைத்தான் எண்ணா னாகி
வெடிவைத்தான் அறம் வளர்த்த இவ்வீட்டுக்கும்!
மின்னொளியே, தன் தலையில் உன்ன தான
"முடி"வைத்தான் முழுங்குகின்றான் அன்னோன் வாழ்வின்
முடிவைத்தான் முழுங்குகின்றான் முரசறைந்தே!

இந்நேரம் நரிக்கண்ணன் நன்னீ ராடி,
எழிலுடையும் இழைபலவும் பூண்டு வேழ
மன்னவனை எதிர்பார்த்துப், பொன்னில் மின்னும்
மணிமுடியை அணிவதற்குக் காத்தி ருப்பான்!
இந்நேரம், தான், இருக்கும் இடத்தினின்றே
எழிலரண்ம னைநோக்கித் தேரி லேறிப்
பின்எவரும் சூழ்ந்துவர வருவான் வேழன்!
பேரவையில், மகிழ்ச்சிகொள எவர்இருப்பார்?









( 60 )





( 65 )




( 70 )






( 75 )
இயல் 24

   { முரசறைதல் கேட்ட ஆத்தா அவனைத் தூற்றுங்கால்,
எதிரிகள் குடிசையைச் சூழ்ந்தார்கள்! அதே நேரத்
தில் வேலனும் பகைவரை எதிர்த்தான். }


என்றுரைத்தே ஆத்தாதன் எரிவை எல்லாம்
எடுத்துரைக்கும் நேரத்தில், குடியை நோக்கி
'அன்னம் அதில் தான்இருப்பாள் ஆத்தா என்னும்
அக்கிழவி யுடனிருப்பாள்'என்று கூவி
முன்வந்தார் சிலபகைவர் குடிசை நோக்கி!
முழங்கிற்றுக் குதிரைகளின் அடிஓ சைதான்!
பின்னொருவன் வருகின்றான், அவன்பேர் வேலன்!
பெருவாளும் குதிரையும் பாய்ந்தன பகைமேல்!

பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப்
பாய்ந்தனன்பல் ஆடுகட்குள் வேங்கை போலே!
கலங்கினர்வே ழவர்!பத்துப் பேர்மாண் டார்கள்!
கத்திசுழல் ஓசை,மறவர் முழக்கம்
- குலைநடுங்க வைத்தன! ஆத்தா தன், வேலன்
குரல் கேட்டாள், வேழவர்கள் அங்கு வந்த
நிலையுணர்ந்தாள், அன்னத்தை நோக்கி அங்கு
நிகழ்கின்ற போர் நோக்கம் நிகழ்த்திப் பின்னர்.






( 80 )




( 85 )





( 90 )
இயல் 25

   { வேலனும், பகைவரும் போர் நடத்துகையில்
அன்னம், ஆத்தா உருமாறி வெளிச்சென்றார்கள். }


அன்னத்தை ஆடவானாய் உருமாற் றிட்டாள்;
அன்றுபோல் தன்னுருவம் மாற்றிக் கொன்டாள்;
கன்னமறைக் குந்தாடி யுடைய தாத்தா,
கண்ணொத்த பையனொடு செல்வதைப்போல்
தன்மகனின் கணக்காயன் சீனி வாழும்
தனிவீட்டை நோக்கியே விரைந்து சென்றாள்;
'உன்மகனின் நிலைஎன்ன' என்றாள் அன்னம்
ஊர்மீட்கச் சாகட்டும் என்றாள் ஆத்தா!

'கண்ணெடுத்தும் பார்த்தோமா? கைவாளோடு
கடும்போரில் தனியாகக் கிடந்த சேயைப்
பெண்ணெடுத்து வளர்த்திட்டாள் அதனா லேதான்
பிள்ளைஉயிர் போவதையும் பெற்ற தாய்தான்
எண்ணவில்லை என்றுலகம் உனைப் பழிக்கும்!
என்னால்தான் இப்பழியென் றெனைப் பழிக்கும்!
மண்ணெடுத்துச் சுட்டிடு செங்கல்லோ, அன்றி,
மலைக்கல்லோ உன்னெஞ்சம்' என்றாள் அன்னம்.




( 95 )




( 100 )





( 105 )




( 110 )
இயல் 26

   { ஆத்தாவும் அன்னமும் சீனிக்கணக்காயன் வீடு
நோக்கிப் போனார்கள், எதிரில் வேலனின் துணை
வர் குதிரைமேல் ஏறிக்குடிசைநோக்கிப் போவதைக்
கண்டார்கள். }


"வேலவனைக் காப்பதற்கு நம்மா லாமா?
வீண்கவலை கொள்ளுவதில் ஆவதென்ன?
ஞாலத்தில் என்பிள்ளையின் திறத்தை
நானறியக் கணக்காயர் சொன்ன துண்டு!
சோலை அதோ! அதையடுத்த சிற்றூர் காண்பாய்!
தொடர்ந்துவா, விரைவாக" என்றாள் ஆத்தா,
நாளைந்து குதிரைகளில் வாள் பிடித்த
நல்லிளைஞர் எதிர்வருதல் இருவர் கண்டார்!

எங்கிருந்து வருகின்றீர்! என்றான் ஓர்சேய்
எழில்வேலன் அவ்விடத்தில் வேழவர்பால்
வெங்குருதிப் போர்செய்து கொண்டிருக்கும்
விழற்குடிசைப் புறமாக வந்தோம் என்று
தங்குதடை இல்லாமல் ஆத்தா சொன்னாள்!
தாவினார் இளைஞரெல்லாம் குதிரை ஏவி!
மங்கையிரு கைகொட்டி மகிழ்ந்தாள்; 'உன்றன்
மகன்முகமும் பார்த்தறியேன் ஆத்தா' என்றாள்.










( 115 )





( 120 )




( 125 )
இயல் 27

   { ஆலடியில் கணக்காயன் எதிரில் சென்று மாற்றுடை
களைகிறார்கள் பின் அனைவரும் மாற்றுருவத்
தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள். }


ஆலடியில் அமர்ந்திருந்த கணக்கா யர்பால்
ஆத்தாவும் மங்கையும்போய்ப் போர்த்திருந்த
மேலுடையும், தாம்விலக்கி, நின்று, செய்தி
விளக்கிடவே, கணக்காயர் கிளத்த லானார்;
வேலவனோ உமைக்காக்க அங்கு வந்தான்
வேழவரை எதிர்த்துப்போ ரிடவு மானான்
நாலைந்து பேர்இளைஞர் துணைக்கும் சென்றார்
நரிக்கண்ணன் தெரிந்து கொள்வான் இனிஎன் நோக்கம்

என்னையவன் சிறைப்படுத்த எண்ணு முன்னம்
யாமெல்லாம் மாற்றுருவத் தோடு சென்று
மன்னவனாம் வேழவனைத் தனியே கண்டு
மங்கைநிலை கூறுவது நல்ல தென்றார்!
நன்றென்றார் இருவருமே! உருவம் மாற்றி
நடந்தார்கள் மூவருமாய் அரண்ம னைக்குத்
தென்புறத்தே வேழவனார் தங்கியுள்ள
திருமன்று தனைநோக்கி மிகவிரைந்தே!




-



( 130 )





( 135 )




( 140 )
இயல் 28

   { வேழமன்னன் திருமன்றில் அமர்ந்து நரிக்குக் கதிர்
நாட்டைப் பட்டம் கட்டினேன் என்று மகிழ்ந்தான்.
அதை ஒரு முதியோர் மறுத்தார். }


ஒளிவிளக்குப் பத்தாயிரத்தின் நாப்பண்
உயிர்விளக்காய் வீற்றிருந்தான் வேழ மன்னன்!
தெளிவிளக்கும் அறிவுடைய அமைச்சன் தானும்,
சிறியபடைத் தலைவர்களும் சூழ்ந்தி ருந்தார்.
களிமிகுக்க வேழத்தான் உரைக்க லுற்றான்
கண்ணெதிரில் இருக்கின்ற தன்னாட் டார்பால்;
'குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக்
கொடுத்துவிட்டேன்; அவன்குறையை முடித்து விட்டேன்.

என்னருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம்
யான்புரியத் தக்கது புரிந்து விட்டேன்
தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில்
தான்பெறத்த குந்ததைத்தான் பெற்று விட்டான்!
பொன்முடியை அவன்தலையில் சூட்டும் போது
பொதுமக்கள் இந்நாட்டார் முகத்தி லெல்லாம்
துன்பத்தை நான்கண்டேன் ஏனோ' என்றான்
'சொல்வேன்' என்றொருமுதியோன் வணங்கிச் சொல்வான்:

"நரிக்கண்ணன் கதிர்நாட்டை அமைவ தற்கு
நல்லதொரு சூழ்ச்சியினைத் தேட லானான்;
எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே
ஏற்றினான் தங்கட்கு! நம்பி னீர்கள்
ஒருநாளும் தங்களைஅக் கதிரை வேலன்
உள்ளத்தால் பேச்சாலே இகழ்ந்ததில்லை!...
பெரும்படையும் கொண்டுவந்தீர்! நடந்தபோரில்
மறவர்நெறி பிழைத்ததுவும் அறமோ ஐயா?

இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே
ஈட்டியினைப் பின்வந்து கதிர்நாட் டான்மேல்
நரிக்கண்ணன் செலுத்தினான், நானும் கண்டேன்!
நகைத்ததுவான்! நாணிற்று நல்ல றந்தான்!
இருக்கட்டும்; பெருவேந்தே, அரசி யாரை
எதிர்பாரா வகையாக வஞ்சத் தாலே
பெருங்கொலைசெய் தான்அந்தோ! இப்பெண் ணாளைப்
பிறரறியா வகையில்நான் காத்தேன் அன்றே!

இவ்விளைய பூங்கொடியின் வேர றுக்க
என்னவெலாம் செய்கின்றான்! என்னைக் கொல்ல
ஒவ்வாத முறையெல்லாம் சூழு கின்றான்!
உங்களிடம் நீதிகேட் கின்றேன் என்று
செவ்விதழாள் அன்னத்தை முகிலின் மீண்ட
திங்களென மாற்றுருவம் களைந்து காட்டி
அவ்வகையே தானும்தன் உண்மை காட்டி
ஆத்தாஎன்பேர்; அரசின் பணிப்பெண என்றாள்.







( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )
இயல் 29

   { ஆத்தா, அன்னம் என அறிந்த வேழ மன்னன்
வியப்புற்றதோடு, பழிஎன் மேலல்ல என்றான்.}


வியப்புற்றான்; முகநிறையக் கண்தி றந்து
மெல்லியலை, ஆத்தாவைப் பார்த்தான்; மிக்க
துயருற்றான்: "ஒரு நாட்டைப் பிடித்த பின்னர்
தொடர்புடையார் தமைக்கொல்ல ஒப்பு வோனோ?
செயப்பட்ட போர்நடுவில் பகையை நானோ
பின்னிருந்து கொலைபுரியச் செய்வேன்?"என்று
வியர்த்திட்டான் உடலெல்லாம்! அந்தத் தீயன்
விளைத்திட்டான்: நானல்லேன் என்று சொன்னான்.

அப்போதே நானினைத்தேன்: கேள்வி யுற்றேன்.
அவற்றையெல்லாம் நரிக்கண்ணன் மறுத்துக்கூறித்
தப்பேதும் இல்லான்போல் ஆடல் செய்தான்.
கதிர்நாட்டின் தனியரசாய் நரிக்கண்ணற்கும்
இப்போது தான்முடியைச் சூட்டி வந்தேன்
என்செய்வேன் பழிசுமந்தேன் பழிசு மந்தேன்
எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி
யான்காப்பேன் அஞ்சாதீர் என்றான் மன்னன்.






( 185 )




( 190 )





( 195 )
இயல் 30

   { அன்னம் முதலியவரைக் காக்கும் வழியை அரசன்
ஆராய்ந்தான். }


பின்னும் அவன் அமைச்சனையே, நோக்கி, இந்தப்
பெண்ணரசி இனிஉய்யும் வண்ணம் யாது?
சின்னநடை நரிக்கண்ணண் இடம்விடுத்தால்
தீங்கிழைப்பான்; நல்லஉளப் பாங்கொன் றில்லான்;
அன்னையினைக் கொலைசெய்தான்: தந்தை தன்னை
அழித்திட்டான்; அன்னத்தை ஒழிப்ப தற்கும்
முன்னின்று காத்தானை ஆத்தா என்னும்
முதியாளைத் தீர்த்திடவும் குதியாநின்றான்.

கூறிகநின் கருத்தென்றான்; அமைச்சன் சொல்வான்;
கொடியோனைக் கதிர் நாட்டை ஆள வீட்டீர்!
சீறுகின்ற பாம்பக்குத் தவளை யூரல்
திருமுடியோ சூட்டுவது? பின்பு காண்பீர்!
வீறுடைய கதிரைவேல் மன்னன் ஈன்ற
வெண் நிலவு முகத்தாளின் எண்ணங்கேட்டு
நேறுநாட்டிளவரசை மணக்கச் செய்து
மேலுமொரு தீங்கின்றிக் காக்கவேண்டும்





( 200 )




( 205 )





( 210 )



( 214 )