பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை9

1. ஆராய்ச்சி
தளரா வளர் தெங்கு
செடியும் கொடியும் செந்நெற் கதிரும்
கவைக்கதிர் வரகும் கரும்பும் சோளமும்
தலையினால் காய்களைத் தருகின்ற தென்னையும்
புறக்காழ் கொண்ட புல்லின மாகும்.

ஆயினும் தென்னைக் கமைந்தநல் லுறுதி
கொம்பைக் தழுவும் கொடிளுக் கில்லை
வண்ணக் கொடிகள் வளரும், தளரும்!
தடித்த தென்னையோ தளர்வ தில்லை.

இதனை ஆராய்ந் தறிந்தநம் ஒளவையார்
தளராது நீண்டு வளர்ந்த தென்னையைத்
தளரா வளர்தெங் கென்று பாடினார்.

தருநூல் நுட்பம் தெரிந்தா லன்றோ
இவ்வாறு பாடுதற் கியலும்; எதையும்
செவ்வையாய்ச் செய்திடத் திறமை வேண்டுமே!
திரு வில்

குளிர்முகில் இழுத்திடும் குறுக்குக் கோடுகள்
வானவில் ஆகும். அந்த வானவில்,
நீர்முகில் அமைத்த நிறங்களின் நெருக்கம்!
அந்த நெருக்கம் அழகின் விளக்கம்!
கொடுமை செய்து கொல்லாத வில்லது.

சேரனும் சோழனும் தென்திசை வேந்தனும்
வல்வில் ஓரியும் வரலாற்று வீரரும்
ஏந்திய வில்லோ, எதிர்த்தோர் உயிரைக்
குடித்து முடித்தவில்! கொடிய கொலைவில்!