பக்கம் எண் :

Untitled Document
பாண்டியன் பரிசு

இயல் 91


 { வேலன், நீலனுடைய சூழ்ச்சியைக் கூறினான். }

என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன்
எழிலுடைய நீலியிடம் உளவறிந்தான்,
இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான்.
இதற்கிடையில் நீஇறந்தாய் என்ற பொய்யை
என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்,
இவையெல்லாம் இருக்கட்டும், பெண்இதழ்தான்
கன்னலின்சா றென்கின்றார் மெய்யா என்றான்
காணிர்என, உளங்கனிந்தாள்! நடக்கலுற்றாள்!

நானில்லை எனத்தெரிந்தால் நீரு மில்லை,
நடுத்தெருவில் பேழைதான் கிடக்கும்! நீலன்
தானிந்த நாட்டினையும்,எனையும் பெற்றுத்
தனியாட்சி நடத்தலாம் எனநினைத்தான்!
தேனில்லை எனில்நல்ல வண்டுமில்லை
செத்தொழிவேன் நீர்இறந்தால்! இதனை நீலன்
ஏனறிய வில்லை? இருக்கட்டும்!தென்றல்
இருவருக்கும் நடுச்செல்ல விடாதீர் என்றாள்.







( 5 )





( 10 )




( 15 )
Untitled Document
இயல் 92

  { அனைவரும் ஒன்று சேர்ந்தனர். }

வேழவனின் படைமறவர் காப்பளிக்க
விரைவாக எதிர்வந்தார்! கணக்காயர்தாம்
வாழ்கஎன வாழ்த்துரைத்த வண்ணம் வந்தார்
மற்றுமுள தோழர்களும் வந்து சேர்ந்தார்
பேழையினைக் கண்டார்கள் வேலனோடு!
பெடைஅன்னம் நடைகண்டு மகிழ்வு கொண்டார்!
தாழுமுழுத் துறவியவன் வந்தான்! ஆத்தா!
தள்ளாடி நடந்துவந்தாள்!நீலி வந்தாள்!

வெற்றியெல்லாம் நீர்அருளிச் செய்தீர் என்று
வேலன்தான் துறவியினை வணங்கி நின்றான்!
உற்றபெரு வாழ்வனைத்தும் நீவிர் தந்தீர்
ஒருபோதும் மறவேன்என்றுரைத்தாள் அன்னம்!
பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான்
பெருவியப்புக் கிடமில்லை என்று கூறி
ஒற்றுநரை முடிநீக்கி வீரப்பன்தன்
உருக்காட்டினான் யார்க்கும் உவகை யூட்டி!






( 20 )





( 25 )




( 30 )
Untitled Document
இயல் 93

  { முடிசூட்டு விழா அறிவிப்பு. }

தெருவெல்லாம் மறுநாளே முரசறைந்து
திருநாடு வேலர்க்குத் தரும் விழாவைப்
பெருநாடெல்லாம் உரைத்தார் வான்மறைத்துப்
பின்னிவைத்த வண்ணப்பந் தல்கள் நாட்டி
இருள்நாடா திருக்கும்வகை விளக்கும் இட்டார்
எழுதிவைத்த ஓவியங்கள் உயிர்பெற்றார்போல்
வருகாலிற் சிலம்பசைய மாதர் இல்லம்
மணியாக்கித் தணியாது மகிழ்ந்திருந்தார்!

அரசிருக்கைப் பெருங்கூடம் சிறக்க, ஆங்கே
அணிமடவார் மறவேந்தர் சூழ்ந்திருக்க
முரசெழுப்பக், கருவியெலாம் இசையெழுப்ப
முதுநாட்டுப் பெருமக்கள் புதுமை காண,
வரிசையொடு காத்திருக்க வேழ நாட்டு
மன்னவனும் வந்துநின்றே "அன்னம "வேலன
திருமணமும் இதுஎன்றான்! கதிர்நாட்டாட்சித்
திருமுடியும் இதுஎன்று புனைந்தான் நன்றே!





( 35 )




( 40 )





( 45 )
Untitled Document
இயல் 94

  { அன்னம் வேலன் மண வாழ்த்து. }

தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார் தமிழிசைக்குத்
தனிப்புலவர் வாழ்த்திசைத்தார், நகைமுகத்தின்
அமுதமொழி மங்கைமார் மலர்பொழிந்தே
அரசியார் அரசர்நனி வாழ்க என்றார்!
தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன்
தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும்
கமழ்கின்ற பெருங்கூட்டம் விட்டகன்றார்
கதிர்நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே!

மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை
மலர்ச்சோலை தான்புகுந்தே குடமெடுத்தே
அணித்தான குளிர்புனலை ஏந்தி, முல்லை
அடிவார்ப்பாள் போற்காட்டிக் கீழ்க்கண்ணாலே
தணிக்காத காதலொடும் அன்புள்ளானைத்
தான்பார்த்த படியிருந்தாள்! வேலன் தேடி
பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம்
பறக்குமுனம் பறந்தின்பம் பகிர்ந்தான் வாழி!




( 50 )




( 55 )





( 60 )



( 64 )