பக்கம் எண் :

கடல்மேற் குமிழிகள்

காட்சி 21


இடம்;     அரண்மனைத் தனியிடம்

நேரம்;
   முதிர்காலை

உறுப்பினர்;
புலித்திறல், வையத்திறல், மன்னி.


 

அகவல்

மன்னனும் மன்னியும் மைந்தனை "நில என்று
கூறித் தமது கொள்கையைக்
கூறு கின்றார் சீறும்உளத் தோடே!

கண்ணிகள்


"மணம்செய்து கொள்ளுதல் வேண்டும் -- உன்
மாமனின் பெண்ணை மணந்திட வேண்டும்;
இணங்கிட வேண்டும் இதற்கே -- நீ
ஏதும் தடைசொல்ல லாகாது கண்டாய்.
அணுகும்உன் அன்னையின் அண்ணன் -- பெற்ற
ஆரெழில் மங்கையை நீமணந் திட்டால்
வணங்குமிந் நானிலம் உன்னை" -- என்று
மன்னவன் சொல்ல, மறுத்துரைப்பான்சேய்:

"மணம்செய்து கொள்பவன் நானோ? -- அன்றி
மாநிலம் ஆளும்இம் மன்னவன் தானோ?
இணங்கிட வேண்டுமென் கின்றீர் -- எனில்
என்மன மோமணம் ஒப்பிடவில்லை;
அணங்கினை மாமனின் பெண்ணை -- எனை
அச்சுறுத்திப் பெறுமாறு புகன்றீர்!
வணங்குகின் றேன் தந்தை தாயே -- நான்
மணம்புரியேன என்று செம்மல் மறுத்தான்.

காவலர் தம்மை அழைத்தான் மன்னன்
"கட்டுக இங்கிவன் கைகளை" என்றான்.
"ஆவல் மறுத்ததி னாலே -- என்றன்
ஆணைக்குக் கீழ்ப்படி யாத தினாலே
காவற் சிறைக்கிவன் செல்க -- என்றன்
கட்டளை தன்னை மறுத்திடு வீரேல்
சாவது மெயயென்று சொன்னான் -- அந்தத்
தறுகண்ணர் செம்மலைச் சிறையினில் சேர்த்தார்.

வையத் திறல்சிறை சென்றான். பின்னர்
மன்னவன் தன்மனையாளிடம் சொல்வான்;
"பையனை விட்டுவைத் திட்டால் -- அந்தப்
பாவையைக் கூட்டி நடந்திடல் கூடும்
வையம் பழித்திடு முன்னே -- அவன்
மனது திரும்பிடும் என்று நினைத்தே
வெய்ய சிறைதன்னில் வைத்தேன -- என்று
வேந்தன் உரைத்தனன், மன்னி மகிழ்ந்தாள்.










( 5 )




( 10 )





( 15 )





( 20 )




( 25 )





( 30 )




( 35 )
காட்சி -22

இடம்; அரண்மனையில் வையத்திறல் அறை.

நேரம்; முன் மாலை.

உறுப்பினர்; அழகன், மன்னன், மன்னி.

அகவல்

அழகன், வையத்திறல் அறைக்குச் சென்றான்
முழுதும் ஆய்ந்த விழிகள் ஏமாந்தன
புலித்திறல் மன்னிபால் போனான்
நலிப்புடன் அவளிடம் நவிலலாயினனே.

கண்ணிகள்

"வையத் திறல்வந்த துண்டோ ? -- அன்னாய்
மற்றெங்குச் சென்றனன் சொல்வாய்
வெய்யில் கொதிக்கின்ற நேரம் -- அவன்
வேறெங்கும் சென்றிட மாட்டான்
துய்யவன் தன்னறை பார்த்தேன் - அங்கும்
தோன்றலை நான்காண வில்லை;
எய்தநல் அம்பினைப் போலே -- உடன்
இங்குவந்தேன என்று சொன்னான்.

"ஆண்டாள் மகள்மீதில் அன்பால் -- என்றன்
அண்ணணின் பெண்ணை மறுத்தான்
பூண்டான் பெரும்பழி தன்னை! -- மனம்
புண்படச் செய்ததினாலே
ஈண்டு சிறைப்படலானான் -- அவன்
எண்ணம் திருந்திட வேண்டும்
யாண்டும் இதைச்சொல்ல வேண்டாம் -- இது
என் ஆணை" என்றனள் மன்னி.

"இப்பிழை செய்திட வில்லை -- நெஞ்சம்
ஏந்திழை மேல்வைத்த தில்லை
செப்புவது துண்மைஎன் தாயே -- அவன்
சிறையிடை வாழ்வது முறையோ ?
கற்பது தான் அவன் நோக்கம் -- பின்னர்
கடிமணம் செய்வது நோக்கம்
மெய்ப்படவேஉரைக் கின்றேன் -- அவன்
மீளும் வகைசெய்க" என்றான்.

மன்னன் அவ்விடம் வந்தான் -- அந்த
மன்னவன் மைந்தனின் நண்பன்
பின்னும் உரைந்திட லானான் -- "உன்றன்
பிள்ளையின் மேற்பிழை யில்லை
மின்னொளி மேற்கருத் தில்லை -- அவன்
வெஞ்சிறை வாழ்வது நன்றோ"
என்றுரைத் தேநின்ற போது -- மன்னன்
"என் அழகாஇது கேட்பாய்;

அன்னவன் உள்ளக் கிடக்கை -- நானும்
ஆய்ந்திட வேண்டும்; அதற்குள்
உன்மொழி நம்பிட மாட்டேன் -- அவன்
உற்ற சிறைமீட்க மாட்டேன்;
இன்ன நிகழ்ச்சிகள் யாவும் -- நீயே
எங்கும் உரைத்திட வேண்டாம
என்றான் புலித்திறல் மன்னன் -- 'சரி'
என்றுரைத் தான்அழகன்தான்.















( 40 )




( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )
காட்சி 23

இடம்; சிறைக்கூடம்.

நேரம்; முன்னிரவு

உறுப்பினர்; வேல்விழி, சிறைக்காவல்காரன், செக்கான்.

அகவல்

சிறையில் வையத் திறல் இருக் கின்றான்
காவற் காரன் கடிது சென்று,
"மின்னொளி பார்க்க வேண்டு மென்றாள
என்று சொன்னான் "இட்டுவா இட்டுவா"
என்றான் இளங்கோ! "வேல்விழி'! யாளவள்
முகமலர் மறைய முக்காடிட்டு
விரைந்தாள்! இரும்பு வேலிப் புறத்தே
இருக்கும் செம்மல் இருவிழி மலர்ந்தே
மின்னொளி! மின்னொளி! விளையாடும் மயிலே!
உன்மேல் வைத்த காதல் உளவறிந்து
மன்னவன் என்னைச் சிறையில் வைத்தான்!
என்றன் உயிரே வாவா" என்றனன்.
"மின்னொளி அன்றுநான் வேல்விழி அன்றோ
மன்னியின் அண்ணன் மகள்நான் அன்றோ
என்னை மணந்துகொள என்றாள்.
மன்னவன் மகனின் உள்ளம் எரிந்ததே

கண்ணிகள்

"என்னெதிர் நிற்கவும் வேண்டாம் -- இங்
கேதும் புகன்றிட வேண்டாம்
உன்னை மணந்திட மாட்டேன் -- நீ

ஒட்டாரம் செய்திட வேண்டாம்
மின்னொளி என்னுயிர என்றான் -- வந்த
வேல்விழி ஓடி மறைந்தாள்.










( 80 )




( 85 )




( 90 )




( 95 )








( 100 )
காட்சி 24

இடம்: சிறைக்கூடம்

நேரம்: இரவு

உறுப்பினர்: புலித்திறல். வையத்திறல், அழகன்

அகவல்

சிவையத் திறலை மன்னன் அணுகினான்.
சிறையின் கதவு திறக்கப் பட்டது.
புலித்திறல் புகுந்தான் புதல்வனைப் பற்றி
வலிதில் இழுத்து மண்ணிற் சாய்த்துச்
சாட்டையாற் கைகள் சலிக்க அடித்தான்.
"ஆட்படும் இனத்தின் அணங்கை மணப்பதா?
வாட்படை மன்னரின் மாண்பைக் குறைப்பதா?
மின்னொளி தன்னை வெறுப்ப தாகவும்
வேல்விழ் தன்னை விரும்புவ தாகவும்
விளம்பும் வரைக்கும் மீள மாட்டாய
என்று கூறி, மன்னன் ஏகினான்.
அழகன் உணவுடன் அங்கு வந்தான்.
குருதிப் பெருக்கில் கொற்ற வன்மகன்
கிடந்தது கண்டு நடுங்கி, "அன்பனே,
எவரால் நேர்ந்த இன்னல்? ஐயோ?'
என்று பதறினான். இளங்கோ, "அழகனே,
வேல்விழி தன்னை வெறுத்ததால் என்னைத்
தந்தை சாட்டையால் அடித்தார என்றான்.
அழகன் அவ்வுரை கேட்டே
அழல்படு நெஞ்சுடன் சென்றான் அயலிலே.












( 105 )




( 110 )




( 115 )




( 120 )
காட்சி 25

இடம்: திறல் நாட்டின் நகர்ப்புறம்.

நேரம்: நள்ளிரவு.

உறுப்பினர்: பெருநாட்டின் ஒற்றர், அழகன்.

அகவல்

அனல்பட்டுத் தாண்டுவோன் போலும் அழகன்
பெருநாட்டின் ஒற்றர் எதிரில்
விரைந்தோடி நின்றான் விளம்புகின்றானே.

பஃறொடை வெண்பா

"பெருநாட்டான் பெற்ற பெருந்திருவை அன்றி
ஒருநாட்டு மங்கையையும் நான்மணக்க ஒப்பேனே"
என்றுரைத்தான் மன்னன்மகன். என்ன பிழையிதிலே?
அன்றே சிறைவைத்தான் ஆணழகை அவ்வரசன்
காட்டுமலை யன்மகளைக் கட்டிக்கொள் என்று சொல்லிச்
சாட்டையினால் சாகப் புடைக்கின்றான் தன்கையால்!
செங்குருதிச் சேற்றில் சிறையில் மடிகின்றான்!
எங்கிதனைச் சொல்வேன் இரக்கம் உமக்கிலையோ?
அஞ்சல் எழுதிவிட்டான் ஆட்களையும் போகவிட்டான்!
வஞ்சியொடும் அந்த மலைவேந்தன் வந்திடுவான்
ஏழெட்டு நாளிலந்த ஏந்திழையைத் தான்மணந்து
வாழட்டும் அல்லதவன் மாயட்டும் என்கின்றான்.
"பெண்ணில் பெருந்திருவை யான்மணப்பேன் அல்லாது
மண்ணில் மறைந்திடுவேன் என்கின்றான் மன்னன் மகன்
என்றே முடித்தான் அழகன்! -- இதுகேட்டு
நின்றிருந்த ஒற்றர் நெடுமூச் செறிந்தவராய்
"இங்கிதனை யாரிடத்தும் சொல்லாதே; நாளைக்கே
அங்குள்ள எங்கள் அரசர் பெரும்படைதான்
பொங்கும் கடல்போற் புறப்பட்டு வந்துவிடும்
மங்காத நெஞ்சத்து வையத் திறல்மீள்வான்
அன்றே பெருந்திருவை அன்னோன் மணந்திடலாம்
இன்றே இதோ நாங்கள் செல்கின்றோம என்றுரைத்தே
தம்குதிரை மேலேறித் தட்டினார்
அங்கே மகிழ்ந்திருந்தான் அன்று.















( 125 )




( 130 )




( 135 )




( 140 )




( 145 )
காட்சி 26

இடம்: ஏரிக்கரை

நேரம்: காலை.

உறுப்பினர்: மண்ணெடுப்போர், அழகன்,

அகவல்

ஏரி தூர்க்குமண் எடுப்பார் பல்லோர்
ஆங்கே அழகன் சென்றுதன்
தாங்காத் துயரம் சாற்றினான் மிகவே.

எண்சீர் விருத்தம்

"ஏரியிலே மண்ணெடுத்துக் கரைஉயர்த்தும்
தோழர்களே இப்பெரிய நாட்டின் ஆணி
வேரினிலே பெருநெற்றி வியர்வை நீரை
விட்டுவளர்த் திடுகின்ற நாட்டு மக்காள்!
ஊரினிலே தெருவினிலே வீட்டில் எங்கும்
உம்உழைப்பைப் பொன்னெழுத்தால் காண்பதன்றி
ஆரிங்கே உழைத்தார்கள் அரசன் என்போன்
அரசியொடு பொன்னூசல் ஆடு கின்றான்.

சடுகுடுவென்றேநெய்வீர் கந்தை யில்லை
தார்வேந்தன் கட்டுவது சரிகை வேட்டி
கடல்நடுவில் முத்தெடுப்பீர் கஞ்சி யில்லை
கடனறியா வேந்துக்கு முத்துத் தொங்கல்
மடுப்புனலும் செங்குருதிப் புனலும் வார்த்து
வளவயலில் களைஎடுத்துக் காத்த செந்நெல்
அடுக்களையில் கண்டீரோ! அரசன் வீட்டில்
ஆன்நெய்யில் சீரகச்சம்பாமிதக்கும்!

எவன்படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை
எவன்காத்தான்? காக்கின்றான்? காப்பான்? கேளீர்!
தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தை போலும்
தரை, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்ததலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணுறங்கிக்
கவிழ்ந்திடஓர் ஈச்சம்பாய் இல்லை; தங்கக்
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்!

சிற்றூரில் ஆயிரம்பேர், செழுந கர்க்குள்
திகழ்பன்னூ றாயிரம்பேர் விழுக்கா டாக
முற்றுமுள நாட்டிலுறு மக்கள், எண்ண
முடியாத தொகையினர்கள், அவர்கள் எல்லாம்
கொற்றவரின், பார்ப்பனரின் விரல்விட் டெண்ணும்
குடும்பங்கள் இடும்பணிக்குத் தலைவ ணங்கிக்
குற்றேவல் செயப்பிறந்தார் என்றார்; மற்றும்
கொழுக்கட்டை யாய்ப்பிறந்தோம் நாங்கள் என்றார்.

மின்னொளிமேல் மன்னன்மகன் எண்ணம் வைத்தான்;
மின்னொளியோ நம்மவரின் பெண்ணே அந்த
மின்னொளிதான் மிகத்தாழ்ந்த சாதிப் பெண்ணாம்!
மின்னொளியைத் தன்மைந்தன் எண்ணும் போதே
மன்னனெனும் தன்சாதிக் கிழிவா யிற்றாம்!
மன்னன்மகன் சிறையினிலே வைக்கப் பட்டான்.
தன்சாதிக் குமிழிகளை நிலைஎன்கின்றான்
தடங்கடலின் மக்களினம் தாழ்வென் கின்றான்

மக்களிலே தாழ்வுயர்வே இல்லை என்று
மன்னன்மகன் எண்ணுவதும் பிழையாம் அன்றோ?
கக்குமுடற் குருதியிலே சேய்மி தக்கக்
கைச்சாட்டை ஓயுமட்டும் அடித்தான் மன்னன்.
மிக்குயர்ந்த சாதிகீழ்ச் சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க் கில்லை.
பொய்க்கூற்றே சாதிஎனல், ஆரியச் சொல்
புறநஞ்சு! பொன்விலங்கு; பகையின் ஈட்டி

"கடற்குமிழி உடைத்திடுக சாதி வீழ்க
கடல்மக்க ளிடைவேந்தர் மறைந்து போகக்
குடியரசு தழைக" என அழகன் சொல்லிக்
கொடிவழியைத் தாண்டிஅயற் புறத்தே சென்றான்.
"நெடிதுழைப்போர் மேடழித்தே உணர்ச்சி என்னும்
நீர்மட்டம் கண்டார்கள்; உழைத்த நாளுக்
கடைகூலி காற்பொன்னே! மாதந் தோறும்!
ஆள்வாருக் கறுபதினாயிரம்பொன என்றார்.










( 150 )







( 155 )





( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )
காட்சி 27

இடம்: அரண்மனையில் காவலறை.

நேரம்: காலை.

உறுப்பினர்: செம்மறித்திறல், பொன்னி,
காவற்காரர். படைமறவர், மன்னன்.
அகவல்

உணவு வட்டில் ஒருகையில் மறுகையில்
குடிநீர்ச் செம்பும் கொண்டு. காவல்
அறையில் பொன்னியை அணுகினான் ஒருவன்.
நிறை நிலாமுகம் நிலத்திற் கவிழக்
கருங்குழல் அவிழக் கண்நீர் உகுக்க
இருளிற் கிடந்த பொன்னி எழுந்தாள்.
"செம்மறித் திறல்நான என்ற தீங்குரல்,
மெல்லெனப் பொன்னி காதில் விழுந்ததே.
அவள்அவன் அணைப்பும் பிணைப்பும் ஆனார்
உள்ளம் இரண்டும் உலகை மறந்தன.

வாயிலோர் "அழகன் வராதேன் வெளியில்
போயினான் என்ன புரிந்தான் இன்னும்?':
என்றனர்; ஐயம் எய்தினர், ஒருவன்
அறைக்குள், ஒருகண் அரைமுகம் சாய்த்தான்;
இரண்டுடல் ஒன்றிலொன் நிறுகுதல் கண்டான்;
அவன்பதைத் தோடினான் அரச னிடத்தில்!
அரசன்' மறவர் ஒருசில ரோடு
விரைவில் வந்தான், "வெளியில் வருவீர்
இருவரும என்று பெருங்குரல் பாய்ச்சினான்.
அழகன் உடையில் அங்குச் செம்மறி
மழமழ வென்று வந்து நின்று
கொழகொழ வென்று சிலசொற் கூறினான்
முக்காடு நீங்கி முடியரசன் கண்டான்
செம்ம றித்திறல் செழுமலர் முகத்தை!
இவனைக் கட்டி இழுத்துச் செல்க
சிறைக்கென்று!' மன்னன் செப்பினான்; மறவர்
அவ்வாறு பிணித்தே அழைத்துச் சென்றனர்.

காவலிற் பொன்னியைக்
கண்ணால் வெதுப்பிப்.
"புலைச்சி மகனைப் புணர்ந்த புலைச்சி
கொலைக்குக் காத்திரு" என்று
நிலத்தடி எனவேந்து நேர்நடந்தானே.











( 210 )




( 215 )





( 220 )




( 225 )




( 230 )





( 235 )
காட்சி 28

இடம்: அரண்மனைவாயில், தெருக்கள், தொழிற்சாலை.

நேரம்: காலை முதல் இரவு வரைக்கும்.

உறுப்பினர்: அழகன்! தோழிமார், தெருவினர்,
         தொழிற்சாலையினர்.

இணைக்குறள் ஆசிரியப்பா

தூய்மொழி என்னும் தோழி, அரண்மனை
வாயிலில் நின்றாள். அவளை,
அழகன் அணுகிக் கூறுகிறான்:
'நாமெல்லாம் தாழ்ந்தவர், தாமெலாம் உயர்ந்தவர்
என்று மன்னர் இயம்பினார் அன்றோ?
நம்மில் ஒருத்தியை அம்மன்னன் மகன்
மணக்க நினைத்தான் என்று
சிறையில் வைத்ததும் தெரிந்தாய் அன்றோ?

மன்னியின் தங்கையாம் பொன்னி செம்மறியை
மணக்க நினைத்ததால் மாளப் போவதை
அறிவாயன்றோ?
செம்மறித் திறலும் சிறையில் உள்ளான்
அம்மங்கைதனை அணுகியதாலே
கண்டாய் அன்றோ?
தன்மா னத்தைத் தமிழர் இழப்பதா?
பொன்னே தரினும் மன்னன் அரண்மனை
வாயிலை மிதிப்பதும் தீயதே'
என்றான் அழகன்.
புருவம் நெற்றி ஏற இருவிழி
எரியைச் சொரிய 'என்போன் றார்க்கும்
இங்கென்ன வேலை?' என்றே
அங்கிருப் போரை அணுகினாள் விரைந்தே!
சிலநாழிகையில்,
தோழிமார் அரண்மனை துறந்தனர்.
பணிப்பெண் டிர்கள் பறந்தனர்.
காவலர் போயினர்.
பாவலர் எட்டியும் பாரோம் என்றனர்.
மெய்காப் பாளரும் வீடு திரும்பினர்.
அடுக்களை ஆக்குநர் இல்லை.

அரண்மனை இவ்வாறாகத்
தெருவெலாம் தெருவின் வீடெலாம், வீட்டின்
விருந்தினர் பொருந்தினோர் வருந்த லானார்.
பிறப்பில் தாழ்ந்தது பெருமக்கள் கூட்டமா?
பிறப்பில் உயர்ந்தச் சிறிய கூட்டமா?
என்றே ஆர்த்தார்த்து எழுந்தனர் --
ஆலைத் தொழிலினர் அங்கொரு பாங்கில்
'கூலிக் கென்றே ஞாலத்திற் பிறந்தோம்
கோலைத் தாங்கியே பிறந்தனர் கொற்றவர்'
என்றனர்; மன்னன் வீழ்க!
என்றனர். பார்ப்பனர் வீழ்க!
என்று கூவினர்.
மனத்தாங் கல்கள் வளர்ந்தன!
இனத்தின் எழுச்சி நாடெலாம் எழுந்ததே.










( 240 )




( 245 )





( 250 )




( 255 )




( 260 )




( 265 )





( 270 )




( 275 )




( 280 )
காட்சி 29

இடம்:    அரண்மனைக் கூடம்.

நேரம்:    காலை

உறுப்பினர்: புலித்திறல், மன்னி, பார்ப்பனர், அழகன்.

இணைக்குறள் ஆசிரியப்பா

'யாமிட்ட சோறிகறி எப்படி' என்று
நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர்.
'நன்று மிகவும்' என்றான் மன்னன்.
மேலும் மன்னன் விளம்புவான்;

'தாழ்ந்தவர் தம்மில் ஒன்று சேர்ந்தனர்;
உயர்ந்தவர்நாமும் ஒன்றுசேர்ந்தோம
என்றான் -- பார்ப்பனர்.
'இப்படி விடுவதும் ஏற்ற தல்ல
தாழ்ந்தார் போக்கைத் தடுக்க வேண்டும்.
அவர்களின் நன்மைக் காகவே!
அவர்மேல் படையை அனுப்ப வேண்டும்.
அவர்கள் நன்மை கருதியே!
அரண்மனை வேலையை அவர்கள் மறுத்தது
குற்றமன்றோ?
பொறுக்க லாமோ? ஒறுக்க வேண்டும்
அவர் நன்மைக்கே!
அவர்களில்
ஓரா யிரம்பேர் ஒழிந்துபோ கட்டுமே?
மற்றவர், வழிக்கு வருவா ரன்றோ?
திருத்த வேண்டும், திருந்துவர்;
மக்களைத் திறுத்தல் மன்னன் கடமை.
மனுநூல் நாட்டில் வழங்க வேண்டுமே?
அதற்குப்
பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி
ஆளவேண்டும்.

விளைபொருள் விற்பவர் வேண்டும்
வளவயல் உழவும், குளச்சே றெடுக்கவும்,
இரும்ப டிக்கவும், கரும்பு நடவும்,
உப்புக் காய்ச்சவும், தப்ப டிக்கவும்,
சுவர்எ ழுப்பவும், உவர்மண் எடுக்கவும்,
பருப்புப் புடைக்கவும், செருப்புத் தைக்கவும்
மாடு மேய்க்கவும், ஆடு காக்கவும்,
வழிகள் அமைக்கவும், கழிவடை சுமக்கவும்,
திருவடி தொழுதுநம் பெருமை காக்கவும்,
வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்,
நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே"
என்றனர்.

"படைத் தலைவரைக் கடிதில் அழைப்பிக்க"
என்றான் மன்னன்.
குதித்தோடினான் ஒரு குள்ளப் பார்ப்பான்.
பாரப்ப னர்பால் பகர்வான் மன்னன்
"அரண்மனை வேலைகள் அனைத்தும் நீவிர்
பார்த்திட வேண்டும், பணியா ளர்கள்
வரும் வரைக்கும என்ன,
"அடடா! செருப்புத் துடைப்பது முதல்
அடுப்புத் தொழில்வரை நடத்துவோம என்றனர்.
பார்ப்பன ஆடவர் பார்ப்பனப் பெண்டிர்
அனைவரும் பணிசெய அரண்மனை வந்தனர்,
மன்னனும் மன்னியும் மகிழ்ந்திருந்தனர்;
அழகன் வந்தான்.

"எங்கு வந்தாய்?" என எரிந்தான் மன்னன்.
"செம்மறித் திறலும் சேல்விழிப் பொன்னியும்
பொன்னூசல் ஆடிப் பொழுது போக்கு கின்றார்;
வையத் திறலோ
மாசுடை நீக்கித் தேசுடை அணிவான்;
ஏனெனில்,
ஆண்டாளானதன் அன்பு மாமி
மாப்பிள்ளை பார்க்க வருகின் றாளாம
என்றான்.

மன்னி அழுதாள், மன்னவன் சீறி,
"இவர்கள் சிறையினின்றெப்படி வந்தனர்?"
என்று கேட்டான்.
"காவலர் எவரும் காணேன் அங்கே"
என்றான் அழகன்
"எப்படி வரலாம், இவர்கள்?" என்று
மன்னன் கேட்டான்.

"அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள்
வாளைக் கையில் வைத்திருக் கின்றனர
என்றான் அழகன்.

பார்ப்பனர் தம்மைக் கூப்பிட்டு மன்னன்,
"வையத் திறலை, மறியை, வஞ்சியைக்
கடுஞ்சிறை வைத்துக் காவலிருங்கள்;
என்றன் ஆணைஇது" வெனக் கூறினான்.
"புல்லேந்து கையில் வில்லேந்து வோம்யாம
என்று பார்ப்பனர் இயம்பினர்.
"மகிழ்ச்சி" என்றான் மன்னன்.
"ஆயினும்,
மல்லேந்து மன்னர்க்குச் செல்வாக்கில்லையே!
எப்படி அதுசெய ஏலும்?" என்றனர்.
அழகன் சிரித்தான்.
நன்றென மன்னன் இஞ்சி
தின்ற குரங்குபோல் திகைத்தான் குந்தியே.











( 285 )





( 290 )




( 295 )




( 300 )




( 305 )





( 310 )




( 315 )




( 320 )





( 325 )




( 330 )





( 335 )




( 340 )





( 345 )





( 350 )





( 355 )




( 370 )




( 375 )
காட்சி 30

இடம்;     அரண்மனை.

நேரம்;    காலை

உறுப்பினர்; படைத்தலைவன், மன்னன்.

அகவல்

தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை
ஆங்கெதிர் பார்த்தது அமர்ந் திருந்தான் அரசன்.

அன்னவன் வந்து வணங் கினான்
தன் ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே

அறுசீர் விருத்தம்

"விரைந்துசெல்! மானம் காப்பாய்
அரண்மனை வேலைக் காரர்
புரி்ந்தனர் தீமை விட்டுப்
போயினார் காவ லர்கள்
பிரிந்தனர் சிறை திறந்து
பெயர்ந்தனர் குற்றஞ் செய்தோர்!
விரைந்துசெல் பணியாளர்கள்
வேண்டும்இப் போதே" என்றான்

மேலுமே உரைப்பான் மன்னன்;
"வெந்திறல் மறவர் தம்மை
வேலொடு தெருவி லெல்லாம்!
நிறுத்திவைத் திடுதல் வேண்டும்
வாலசைத் திடுவார் தம்மை
மண்ணிடைப் புதைக்க வேண்டும்!
தோலினை உரிப்பாய் நம்மைத்
தூற்றுவார் தம்மை" என்றான்.

படைத்தலை வன்பு கல்வான்
"படைச்சார்ந்த மறவர் எல்லாம்
கடைச்சாதி என்று நாமே
கழறிய துண்டோ?" என்றான்
விடுத்தஇவ் வினாவைக் கேட்ட
வேந்தனும், "ஆம் ஆம்!" என்றான்
"கெடுத்தனிர் அரசே அந்தக்
கீழ்மக்கள் வருந்தினார்கள்.

ஆயினும் அவர்கட் கான
ஆறுதல் கூறு கின்றேன்;
போயினி நீங்கள் சொன்ன
செயலினைப் புரிய வேண்டும்;
நாயினும் தாழ்ந்தா ரேனும்
நாட்டினிற் பெருங்கூட் டத்தார்!
பாயுமேல் மக்கள் வெள்ளம்
நம்மாள்வார் பறக்க வேண்டும்.''

உயர்சாதிப் படைத்தலைவன்
இங்ஙனம் உரைத்துச் சென்றான்.
துயர்பாதி அச்சம் பாதி
தொடர்ந்திடத் தூக்க மென்னும்
அயலுல கடைந்தான் மன்னன்
உணவுண் ணான் அவன் விருப்பம்!
கயல்மீனும் சோறும் பார்ப்பார்
கட்டாய உணவாய்க் கொண்டார்!

















( 380 )




( 385 )





( 390 )




( 395 )





( 400 )





( 405 )




( 410 )





( 415 )