சுதரிசன் தொலைத்தான்! அன்னோன்
கூத்திமார் இரண்டு பேரும்
'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
என்றுபக் கத்தில் குந்தி
சுதரிசன் புகழை யெல்லாம்
சொல்லிடத் தொடங்கினார்கள்.
புதுத்தொல்லை யதனில் மங்கை
புழுவாகத் துடிக்கலானாள்.
அழகுள்ள ஆளாம் எங்கும்
அவன்போலே அகப்ப டாதாம்!
ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
ஒருநூறா யிரமும் உண்டாம்
ஒழுகுமாம் காதில் தேனாய்
ஒருபாட்டுப் பாடி விட்டால்!
எழுதினால் ஓவியத்தை
எல்லாரும் மயங்குவாராம்!
நடுப்பகல் உணவாயிற்று!
நங்கைக்குக் கதை யுரைக்க
எடுத்தனர் பேச்சை நங்கை
'தப்புவ தெவ்வா' ரென்று
துடித்தனள். 'எனக்குக் தூக்கம்
வருகின்ற' தென்று கூறிப்
படுத்தனள்; கண்கள் மூடிப்
பகற்போதைக் கழித்து விட்டாள்.
'பகலெல்லாம் கணவருக்குப்
பலபல வேலை யுண்டு
முகங்காட்டிப் போவ தற்கும்
முடியாதா இரவில்' என்று
நகம்பார்த்துத் தலைகுனிந்து
நங்கையாள் நலிவாள்! அந்த
அகம்கெட்ட மாதர் வந்தே
'சாப்பிட அழைக்க லானார்!'
உணவுண்டாள் நங்கை, அங்கே
ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
முணுமுணு என்று பேசி
இருந்திட்ட இருமாதர்கள்
அணுகினார் நங்கையண்டை!
அதனையும் பொறுத்திருந்தாள்!
தணல்நிகர் சுதரிசன்சிங்க்
தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்
எதிரினில் சுதரி சன்சிங்க்
உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
புதுமலர் முகமேன் வாடிப்
போனது? சுப்பம்மா, சொல்!
குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
குந்திக்கொண் டிருக்கின் றாயே?
அதை உரை' என்றான், நங்கை
'அவர்எங்கே' என்று கேட்டாள்.
'திம்மனைச் சிங்கம் வந்தா
விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
செம்மையாய் இருப்பாய்' என்றான்
இதற்குள்ளே தெருவை நோக்கி
அம்மங்கை முருகி சென்றாள்
அவள்பின்னே குப்பும் போனாள்
'உம்' என்றாள்; திகைத்தாள் நங்கை!
சுதரிசன் உளமகிழ்ந்தே.
'நங்கையே இதனைக் கேட்பாய்
நானுன்றன் கணவனுக்கே
இங்குநல் உத்தியோகம்
ஏற்பாடு் செய்து தந்தேன்;
பொங்கிடும் என்னாசைக்குப்
புகலிடம் நீதான்; என்னைச்
செங்கையால் தொடு; மறுத்தால்
செத்துப்போ வதுமெய்' என்றான்.
'நான்எதிர் பார்த்த வண்ணம்
நடந்தது; நங்கைமாரும்
யான்இங்குத் தனித்திருக்க
ஏற்பாடு செய்து போனார்
ஏன்என்று கேட்பாரில்லை
இருக்கட்டும என்று வஞ்சி
தேன்ஒத்த மொழியால் அந்தத்
தீயன்பால் கூறுகின்றாள்;
"கொண்டவர்க் குத்தி யோகம்
கோட்டையில் வாங்கித் தந்தீர்
அண்டமே புரண்டிட் டாலும்
அதனையான் மறக்க மாட்டேன்.
அண்டையில் வந்துட் கார்ந்தீர்;
அடுக்காத நினைவு கொண்டீர்;
வண்கையால் "தொடு" மறுத்தால்
சாவது மெய்யே என்றீர்.
"உலகில்நான் விரும்பும் பண்டம்
ஒன்றுதான்; அந்தச் செம்மல்
தலைமிசை ஆணை யிட்டுச்
சாற்றுவேன் எனது கற்பு
நிலைகெட்ட பின்னர் இந்த
நீணில வாழ்வை வேண்டேன் மலையும் தூளாகும் நல்ல
மானிகள் உளந்துடித்தால்!
''கொண்டஎண் ணத்தை மாற்றிக்
கொள்ளுவீர்; நரியும், யானைக்
கண்டத்தை விரும்பும்; கைக்கு
வாரவிடில் மறந்து வாழும்;
கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்;
குறைவிலா அறிவு வாய்ந்தோர்''
என்றனள், சதரி சன்சிங்க்,
ஏதொன்றும் சொல்லானாகி
`நன்றுநீ சொன்னாய் பெண்ணே
நான்உன்றன் உளம்சோதித்தேன்
இன்றிங்கு நடந்தவற்றைத்
திம்மன்பால் இயம்ப வேண்டாம்'
என்றனன், கொஞ்சி னான்; 'போய்
வருகின்றேன்' என்றெழுந்தான்.
இருளினில் நடந்து போனான்
எரிமலைப் பெருமூச் சோடு!
இருளினை உளமாய்க் கொண்ட
இருமாதர் உள்ளே வந்தார்
அருளினால் கூறுகின்றாள்
சுப்பம்மா அம்மா தர்க்கே.''
ஒருபோதும் இனிநீர் இந்த
உயர்விலாச் செயல்செய்யாதீர்
ஆயிரம் வந்திட் டாலும்
அடாதது செயாதீர்; ஆவி
போயினும் தீயார் நட்பிற்
பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
தாயினும் நல்லார் என்று
நான்நினைத் திருந்தேன். தாழ்வை
வாயினால் சொல்லிக் காட்ட
வரவில்லை என்னே என்னை!
கண்ணகி என்னும் இந்தக்
தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டிருப்பீர்;
அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
பெரும்பண்பே உமக்கும் வேண்டும்
எண்ணமேன் இவ்வாறானீர்?
திருந்துங்கள்! என்று சொன்னாள்.
''யாம்என்ன செய்து விட்டோம்?
எம்மிடம் நீதான் என்ன
தீமையைக் கண்டு விட்டாய்!
தெரிவிப்பாய் தெருவிற் சென்றோம்
சாமிக்குத் தெரியும் எங்கள்
தன்மைநீ அறிய மாட்டாய்
ஏமுருகியே இதென்ன
வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.
'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
தெருவிற்குச் சென்றால் என்ன?
பங்கமோ இதுதான்? மேலும்
பயந்துவிட்டாயா? சிங்கு
தங்கமாயிற்றே! சிங்கு
தறுதலை அல்ல பெண்ணே
எங்களை இகழ்ந்த தென்ன'
என்றனள் முருகி என்பாள்.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
|