பக்கம் எண் :

அவள் உலக அறவியில் உள்ளாள்

உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு
விலக அறவிடேல் என்னை-இலகணையின்
மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே
இன்பம் சுமக்கும் இனிது.


( 175 )
தமிழ்நாட்டின் அருமை பெருமை

நோயென்றால் ஓடுவதும் நோயின்றேல் ஒட்டுவதும்
நாயென்றால் பின்னோடும் நாய்ச்செயலே-தீயேம்யாம்
அன்புற் றிருந்தறம் செய்தோமே? ஈன்றாளா
இன்பத் தமிழ்த்தாய் எமை?
( 85 )


என் விண்ணப்பம் காண்!

கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம்! உன்னடியில்
இட்டழவே இங்குற்றேன் என்னெனில்-ஒட்டாரக்
காரிதனைக் கைக்கெள்க காற்றாய் பறக்குமுன்
தேரிதனைச் செய்க விரைந்து.

( 170 )

உதயன் தேரேறி விரைவாய்ச் சென்றான்

ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள்
மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப்-போற்பாரோர்
தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள்
தங்கோமான் என்பன; தாம்.



( 180 )
மணிமேகலையை உதயன் மறித்தான்

உலக அறவி உலவு நிலவை
விலக விடாது மறித்து-நிலமீது
செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம
வெப்புக் குடம்படல் வேண்டு.



இன்பம் துறப்பது கட்டாயமா?

ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர்
மானித்துறவு மறந்தாய்-நான்நீ
இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம்
துறப்பது கட்டாயமா சொல்?
( 185 )


மணிமேகலை கூறுவாள்

என்றுதையன் சொல்ல எதிர் வணங்கி ஐயாவே
ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க-என்றும்
இடும்பை மலையென எள்ளென நேரும்
இடும்பைஇவ் யாக்கை அன்றோ?

( 190 )

மும்மைத் தமிழ் காண்க

பொன்னெனப் பூவெனப் போரென நேரென
என்னென சொல்லினும் இன்னலின்-முன்வலைஎன்
றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார்
சான்றோர்க; மும்மைத் தமிழ்.


( 195 )
வள்ளுவன் சொல் ஓர்க

'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'என்றே-ஓதினார்
வள்ளுவர்; அன்னாரின் வாய்மை யதனையோ
எள்ளுவர் எய்தார் நலம்.



( 200 )
மணிமேகலை உருமாறினாள்

ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும்
தீது செயக்கூடும் என்றுட்போய்-மாதான
காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற்
போயகன்றாள் கைக்கலமும் பூண்டு.



உதயன் ஏமாற்றம்

இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான்
பின்னும் அவளைப் பெறாதகலேன்-என்றங்கே
நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய்
நன்றிருந்தான் நாட்டான் மகன்.
( 205 )


மணிமேகலை தொண்டு

நிலையத்தில் நல்லுணவு வந்து நீட்ட
மலையத் தனையளவு மண்ட-அலைபோல்
வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக்
கெறிவார்கள் எண்ணற் றவர்

( 210 )

அவள் பறித்த அறம்

இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால்
கடுகையில் தன்கை கடுக-மடமடென
அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள்
கள்ளி மணிமே கலை


( 215 )
என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள்

தான்கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம்
தான்கொண் டிருப்பதே நன்றென்பாள்-ஏன்றவர்கள்
தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும்
தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து.



( 220 )
ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும்நேரம்

ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகழி
வாய்ந்தன ஆக்கி வறியோரின்-ஏந்துகை
காணாத நேரமதன் கண்துயிலும் நேரமென்றாள்
வாணாள்வா ணாளாக்குகின்ற மான்.



ஊருக்குத் தாய்

தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின்
அருகில் முதியோர் அழிந்தார்-திரியுறுப்பர்
வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற
தாயூட்டி னாற்போலும் சார்ந்து.
( 225 )


சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார்

வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே
ஈந்த முதலீகைக் கெட்டாநாள்-தேர்ந்த
கொலை கண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த
நிலைகண்டாள் நெஞ்சுவந்தாள்.

( 230 )

எல்லோரும் திருந்தினார்கள்

சோறும் மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி
ஊறு பிறர்க்கொருவர் உன்னாத-வாறு
முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில்
சிறைகண்டார் தீங்குகண்டார் யார்?


( 235 )
நாட்டு நிலையறிதல்

நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து
காட்டுக் குயிலைக் கடிதழைத்துச்-சூட்டும்
முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான்
குடியரசும் சொன்னாள் குறை.



( 240 )
அரசன் மேகலை நேர்பாடு

முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே?
குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம்-இறைகேட்க;
மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச்
சாணி அறிவும் உயிர்.