மணிமேகலை வெண்பா மாண்டானா மைந்தன்!
மாண்டானா மைந்தவனவன் மற்றென்பின் மாநிலத்தை ஆண்டனா அஃதும் இலையேஎன்-றீண்டிய கண்ணீர் உகுத்துக் கதறினான் ஆங்கும்ஓர் எண்ணத்துள் ஆழ்ந்தான் இறை.
காஞ்சனன் தூயவன்
இப்படியோர் போற்றும் அறத்தின் இளையாளை அப்படியா செய்திறந்தான் அன்புமகன்-எப்படிநாம் கண்டாலும் காஞ்சனன் நெஞ்சாலும் கைவாளின் தொண்டாலும் தூயனே ஆம்!
( 5 )
உரிய தண்டனையை உதயன் பெற்றான்
வழிவந்த கன்றைத்தேர் வாட்டியதால் மன்னன் வழிவந்த சேயை மடித்தான்-வழிவந்த யான்பெற்ற மைந்தனவன் காமத்தால் காஞ்சனனால் தான்பெற்ற தண்டம் தகும்.
( 10 )
மணிமேகலையைச் சிறையில் இடுக மகனுடலுக்கு இறுதிக் கடன் நடக்க
துறவோர் அருளிய தொல்லறநூற் சீர்த்தி இறவாது காத்தல் எனது-மறவாக் கடன்! மேகலைசிறை காண்கவே மைந்தன் உடன்மேவ உற்ற கடன்.
( 15 )
அம்மா உன்னையும் சிறையிட வந்தோம்
மன்னனை வாழ்த்தியே மாமுனிவர் சென்றனர் அன்னம் நிகர்த்தானை அங்கிருந்தோர்-தன்னம் தனிக்கண்டு சாற்றுவார், அன்னாய் சிறைக்கே உனைக்கொண்டு போவதும் உண்டு.
( 20 )
சிறையில் உனக்கென்ன குறைச்சல்?
இறையும் உனக்கீந்த இன்னல் மிகுந்த சிறையும் திருக்கோயி லாகும்-நிறையும் படியாரை அச்சிறையில் பார்ப்பின்எம் அம்மைக் கடியார் அலால்மற்றி யார்?
ஊண் இட்ட உண்மை மறப்பாரோ?
மாணிட்ட மாதர்க் கரசேஇவ் வையத்தார்க் கூணிட்ட உன்னை மறந்தவர்கள்-காணின் இறந்தவர்கள் என்க அருள்சேர்ந்த நின்தாள் பிறந்தார் பெறத்தக்க பேறு.
( 25 )
அரசுக்கு எதிர்ப்பு
என்றார் மணிமே கலையைச் சிறைக்கழைத்துச் சென்றார் இதையறிந்தோர் சீறியே-ஒன்றாய் விடிவீரெம் தாயையே காவலரே நின்றால் படுவீரென் றார்கள் பரிந்து.
( 30 )
மணிமேகலை மக்களுக்கு அறங் கூறினாள்
ஏவலரென் றெண்ணீரோ என்னைச் சிறைப்படுத்தல் காவலரின் கண்ணளையாம் காணீரோ-தீவழியே நண்ணலும் ஏற்குமோ மக்காள் நலிவுசெய எண்ணமும் ஏற்காதென் றாள்.
( 35 )
மணிமேகலை சிறையில் சேர்க்கப்பட்டாள்
ஊர்ச்சா வடியைச் சிறையாக்கி ஒன்றவே நீர்ச்சாலும் கூழ்க்கலமும் நேர்வைத்துக்-கூர்ச்சுடர் வேல் வைத்தாரை வைத்துமணி மேகலையை உள்ளடைத்து வைத்தார்கை யோடுகொண்டு வந்து.
( 40 )
சிறையிலும் மக்கள் சீற்றம்
காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணகியின் பெண்ணாளை நீவிரித்துன் பப்படுத்தல் நேர்த்திஎன்று-தாவிச் சிறைகாப்போர் வேலும் சிதைத்தும்மை வைத்து முறைகாப்போர் எங்கென்றார் மொய்த்து.
கூறினோருக்கு மணிமேகலையின் ஆறுதல்
வம்பிட்ட மக்களின் முன்வந்து மாதரசி கும்பிட்டுக் குற்றம் இதுவென்றாள்-வெம்புற்றே அம்மாநின் றாவதென்ன அம்மன்னன் தீயனென்றே சும்மாநின் றார்மெய் துடித்து.
( 45 )
மணிமேகலைக்குச் சாப்பாடு வந்தது
நின்றிருந்தார் மக்கள் நினைவு பலிக்கவில்லை என்றிருந்தார் மாதின் எதிர்வணங்கிச்-சென்றிருந்தார் ஈப்பாடு தாரோனின் ஏற்பாட்டாற் சிற்சிலர் சாப்பாடுதாம் கொணர்ந்தார் தாய்க்கு.
( 50 )
சிறைப் பணியாளர் கூற்று
கேழ்வரகின் கூழ்கொடுக்கச் சொன்னார்; கெடுவார்கள்! வாழ்வரசுக் கீய மனம்வருமா-தாழ்விலராய் வாழையிலும் யாம்உனக்கு முப்பழம் பாற்சோறும் வாழையிலை போட்டிட்டோம் வந்து.
( 55 )
இனி வேண்டாம் கூழே போதும்
என்று சிறைப்பணி யாளர் இயம்பினார் ஒன்று மணிமே கலையுரைப்பாள்-இன்று கொடுத்தீர்! இனிஎனக்குக் கூழ்போதும் என்றாள் வடுத்தீர்ந்த மங்கைநல் லாள்.
( 60 )
தெருவார் தருவார்
பாலடிசில் நெய்யடிசில் பத்துக் கறியோடும் காலையிலும் மாலையிலும் கன்னிக்கே-சாலத் தெருவார் தருவார் சிறையாளர் கொண்டு தருவார் திருவார் தமிழ்க்கு.
சிறை பணியாளரைச் சீர்த்தி கேட்டாள்
இறைவிநற் சீர்த்திதான் ஏவலரைக் கூவிச் சிறையினில் மேகலையின் செய்தி-அறைகென்னக் கேழ்வரகை ஒன்றிரண் டாக்கிக் கிளரிய கூழ்தருவோம் கொள்வாள்என் றார்.
( 65 )
சிறையில் மணிமேகலையைப் பார்த்தாள் சீர்த்தி
ஒருநாள் சிறைகாணல் உற்றனள் சீர்த்தி திருநாள் திருக்கச்சிக் கோயில்-இருநாளும் உண்டாலும் தீரா உளுத்தவடை உண்டாள்கற் கண்டு மணிமே கலை.
( 70 )
சீர்த்தி மன்னனிடம் ஓடினாள்
நிறைந்திருந்த நெஞ்சின் மணிமே கலையை மறைந்திருந்து கண்டஅம் மன்னி-பறந்தோடி மங்கட்டும் என்னேல் மணாளா அவள்என்பால் தங்கட்டும் என்றாள் தனித்து.
( 75 )
உன்சார்பில் மணிமேகலை இருக்கட்டும்
சிக்கிச் சிறைவலையில் தீங்குபடும் அப்பசுங்கி ளிக்கிச் சிறைநீக்கம் தக்கதே-புக்கில் இருந்தால் இருக்கட்டும் என்றான்தன் காதல் மருந்தால் பிழைக்கின்ற மன்.
( 80 )
கொடியவளுக்குக் கூழும் கொடாதீர்
அரண்மனையில் ஓர்பால் அடைத்தாள் சிறையில் திலண்முகில் கூந்தல் திருவைப்-புரண்டழவே கூழும் கொட தீர் கொடியவட்கென் றாள்தன்கீழ் வாழும் பலர்க்கரசி மற்று.
ஒன்றும் மணிமேகலைக்குக் கொடோம் என்றவர்கள் எல்லாம் கொடுத்து வந்தார்கள்
ஒன்றும் கொடோமென் றொரு தட்டில் பண்ணியங்கள் அன்றும் கொடுத்தார் அதன்பின்னும்-என்றும் குளநீரும் சோறும் குறையாது தந்தார் இளநீரும் வேளைக் கிரண்டு.
( 85 )
'மணிமேகலை செத்து விட்டாளா?' என்று சீர்ச்சி கேட்டாள்!
இட்டினியும் காக்க இருப்பாரை மன்னிதான் பட்டினியாற் செத்தாளா பாவை? என்று-கிட்டி வினாவினாள் உள்ளாள்என் றோதலும் சிங்கக் கனாவினாள் உள்அஞ்சி னாள்.
( 90 )
பணிப்பெண்களின் மேல் ஐயப்பட்ட சீர்த்தி தன்மனமொத்த பாங்கிமாரிடம் சொன்னாள்
மனமொத்த தன்பாங்கி மாரை அவள்சாவை இனமொத்துக் காப்பீர்கள் என்றாள் புனலற்ற நாவுக்குத் தேன்வார்க்கும் நல்லமணி மேகலையின் சாவுக்குத் தாளா துலகு.
( 95 )
பாங்கிமார் மடியில் கட்டிவந்து கொடுப்பார்கள்
நொடியும் மறவாமல் நூறு கறிகள் மடியும் தெரியாமல் மாதர்-அடிசிலொடு கொல்லையால் வந்து கொடுப்பார் அரசியிடம் இல்லையே என்பார் இனிது.
( 100 )
சாவாள் என்று எண்ணினேன்! அவள் மணலிற் பிடுங்கிய வள்ளிக் கிழங்கு
உணற்கிழந்து சாவாள்என் றெண்ணினேன் ஓங்கும் மணற்கிழங்கு போலும்அவள் வாழ்ந்தாள்-தணற்பிழம்பில் பொற்பைக்காண் பேன்எனில் வையம் பெறாதிவள் கற்பைக்காண் பேன்என்றாள் காய்ந்து.
பூக்காரி மகனை அழைத்து மணிமேகலையின் கற்பைக் கெடுத்துவிடு என்றாள் சீர்த்தி! அவன் பட்டாடை கேட்டான்
பூக்காரி பெற்றஒரு பொன்னனைக் கற்பழிக்கும் தீக்காரி யத்தில்நீ செல்லென்றாள்-நாக்குநீர்ச் சொட்டோடு தூயசீர் மன்னியே வேண்டுமே பட்டாடை என்றான் பணிந்து.
( 105 )
கடுக்கன் வேண்டும் என்றாள்
காதுக்கும் கல்லிழைத்த நல்ல கடுக்கன்இப் போதுக்குத் தந்திட்டாற் போதும் என்றான்-மாது மணிமே கலையின் மனம்பறிக்கச் சீர்த்தி அணிஎன் றளி்தாள் அவை.
( 110 )
பொன்னன் உடுத்துக் கொண்டு எழுந்தான்; விழுந்தான்
காலுக்குத் தோற்செருப்புக் கையில் விரித்தகுடை மேலுக்குக் காண விளக்கொருகை-ஏல எழுந்தான் இரவிலே வேட்டி தடுக்க விழுந்தான் விலைபோகா மாடு.
( 115 )
மணிமேகலை இல்லை, பிச்சைக்காரனைப் பார்த்தான் பொன்னன்
ஆசைவைத்தேன் உன்மேலென் றேநுழைந்த அப்பொன்னன் மீசைவைத்த ஓராளை உட்கண்டான்-ஓசையின்றிச் சீர்த்தியிடம் ஓடிவந்தான் செய்தி தெரிவித்தான் பார்த்ததுபொய்; பார்போய்என் றாள்.
( 120 )
ஆண் பிள்ளை தான் என்று பொன்னன் ஓடி வந்தான்
காட்டுக்குப் பாய்கின்ற கால்வாய் நிகர்பொன்னன் வீட்டுக்குள் ஓடி விடலைகண்டே-ஓட்டம் பிடித்தான் பிடித்தால் பிடிகாணாப் பையன்! கடித்தாள் அரசிதன் கை.
அரசிக்குப் பெண்ணாகப் பொன்னனுக்குப் ஆணாகத் தோற்றமளித்தாள் மணிமேகலை
தான்கண்டாள் தையலையே அவ்வறைக்குள்! பொன்னனவன் தான்கண்டான் ஆடவனைக்! கண்டிருவர்-மேனடந்தார் கண்டுமலைத் தேன் என்றான் காட்டுப்பூக் காரிமகன் கண்டுமலைத் தேன்என்றாள் காம்பு.
( 125 )
எனக்கு அமிழ்து மணிமேகலையே!
உண்ணாமல் வாழ்கின்றாள்! உற்றொருவன் கற்பழியப் பண்ணாமல் மாற்றுருவம் பற்றுகின்றாள்-தண்ணார் தமிழன்றோ சாருநெறி தன்னலமே எண்ணாள் அமிழ்தன்றோ அன்னாள் எனக்கு.
( 130 )
என் மகனை மணிமேகலை கொல்லவில்லை!
என்மகனைக் கொன்றாள் இவளென்றால் அம்முனிவர் நன்மகளைக் கொண்டாட நாணுவரே-தன்மகனாய்த் தன்மகளாய்த் தந்தையாய் இவ்வுலகைக் காணுகின்ற பொன்மகளே என்றன் புகல்.
( 135 )
மணிமேகலையைக் கொல்லுவது அறமா?
பண்டு துறந்ேதார் குறைபாடு பட்டவரைக் கண்டு நிறைபாடு காண்பார்போல்-தொண்டுதவம் என்பாளை வீழ்த்தல் இளநீர்க்காய் ஈன்தென்னை மென்பாளை வீழ்த்தல்என் றாள்.
( 140 )
சீர்த்தி வாய்மை கண்டாள்!
அறமா மணிமே கலையை அழித்தல் அறமா அதுமா நிலமாள்-திறமா எனஅறி வைந்திலும் எய்தினாள் ஆறாம் மனஅறிவில் வாய்மை கண்டாள்.
பூவை விலக்கி மணிமேகலையின் பொன்னடியைப் பூணேனா?
சாவை விலக்கித் தமிழ்த்தொண்டு செய்யேனா பூவை விலக்கியவன் பொன்னடியைத்-தேவைஎனப் பூணேனா என்தலையில் பூவாய் பொழியும் அறம் காணேனா பற்றுக் கடந்து.
( 145 )
மணிமேகலை எதிரில் சீர்த்தி
கலையுணர்ந்த மேலோரும் காணற் கரிய நிலையுணர்ந்த சீர்த்தி நிறைபால்-முலையாவின் கன்றேபோல் சென்று மணிமே கலையின்முன் நின்றே அழுதாள் நெடிது.
( 150 )
சீர்த்தியின் விண்ணப்பம்
ஒறுத்தோம் சிறையினில் உய்த்தோம் இடவும் மறுத்தோம் இடரெலாம் வைத்தோம்-பொறுத்தருள்க தீயைச் சிறுவீடு சேரினும் தீவைத்த சேயைத் தழுவும்தாய் கை.
( 155 )
நான்தான் தவறு செய்தேன் என்றாள் மேகலை
முந்தா தடங்கி மொழிந்திட்ட சீர்த்திக்குச் செந்தா மரைவாய் திறந்தாள்முன்-வந்தது நான்செய் தவறு பொறுத்ததாம் நல்லோய்நீ தான்செய்த தென்ன தவறு.
( 160 )
மகன் செத்தது உனக்குத் துன்பம்! என்னைச் சிறையில் வைத்தது எனக்கு மகிழ்ச்சி
உன்னழகைப் பாரில் உரித்துக்கொண் டேபிறந்த பின்னழகும் முன்னழகும் பெற்றமகன்-என்னழகால் செத்தது துன்பம் உனக்குச்! சிறையில்எனை வைத்தது மாமகிழ்ச்சி எற்கு.
அரசனிடம் அரசி
இலவை இதழ்என்னும் மன்னி மறுவில் நிலவைச் சிறைவைத்தல் நேர்மை-அலவென்று காவலன்பால் சொன்னாள் கடிது கருங்குயிலின் கூவலன்பால் ஒப்பினான் கோன்.
( 165 )
மணிமேகலையை விடுதலை செய்தார்கள்
அணங்கின் அடிமலர் மன்னவன் மன்னி வணங்கி அரண்மனை வாயில்-பிணங்கி இருந்த தமிழருக் கீந்தார் சிறையில் இருந்த தமிழை எடுத்து.
( 170 )
சிறைமீண்ட செல்விக்கு வரவேற்பு
நீர்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார் யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்-வேர்க்கே அறவொன்று வேண்டும் அதற்குத் தமிழின் நெறிஒன்று வேண்டுமென் றார்.
( 175 )
தமிழில்லார் அறிவில்லார்!
அத்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குத் குந்தக் குடிசை குடிக்கக்கூழ்-கந்தை அடையவிடாரே அறிவின் இடையார் அடைவிப்பார் முற்றுணர்ந் தார்.
( 180 )
தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும்
கடையர் அறிவிலார் இடையர் சிறிதே உடையர்; தலையார் உணர்ந்தார்-தடையின்றி வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க் குள்ளத் துணர்வு வரும்
இல்லாரை எள்ளுவர் (இன்னிசை வெண்பா)
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை எள்ளுவர் இல்லாதார் என்று.
( 185 )
மணிமேகலை உலக அறவிக்குச் சென்றிருந்தாள்
என்று கலத்தோடும் ஏற்ற உணவோடும் நன்று மணிமே கலைநடந்து-சென்றிருந்தாள் தாம்புகார் ஆயின் தழைவிலைஎன் றன்றோர்வாழ் பூம்புகார் மன்றம் புனைந்து.
( 190 )
மேகலை காஞ்சி சென்றாள்
அறவணரும் அன்னம் சுதமதியும் காஞ்சி உறஇருக்கும் செய்தி உணர்ந்த-அறமா மணிமே கலைதான் மணிக்கல மென்னும் அணிமேவச் சென்றிட்டாள் அங்கு,
( 195 )
மன்னனின் விண்ணப்பம்
அரசனும் மற்றும் அலுவலர் தாமும் வரிசையின் வந்து வணங்கித்-திருவார் அறவணரே அம்மையே காஞ்சியின் அல்லல் அறவருள வேண்டுமென்றார் ஆங்கு.
( 200 )
மற்றும் வேண்டுகோள்
மழையில்லை கஞ்சி வளமில்லை எம்மேற் பிழையில்லை எங்கும் பெரிதும்-தழைந்துள்ள பஞ்சம் அகற்ற அருட்பஞ்சமா என்றுரைத்தான் நெஞ்சு துடித்தரசன் நின்று.
அறவணர் ஆறுதல்
மன்னர் நிறைகொற்றம் வாழ்கவே காஞ்சிதான் நன்னர் நலமடைதல் திண்ணமே-என்னும் நிலைக்கும் நினைப்புடையோம் மாது மணிமே கலைக்கும் நினைப்புண்டு காண்.
( 205 )
மேலும் அறவணர்
சாற்று கவிகை அரசர்மனத் தாழ்வெல்லாம் மற்றும் மணிமே கலைஎன்று-போற்றும் அடிகள் உரைத்தார்! அவளும் உரைத்தாள் மிடிகள் விலகிடும் என்று.
( 210 )
மேலும் மணிமேகலை சொன்னாள்
மேலும் விளம்புவாள்; வேந்தேநீ வாழ்கநின் கோலும் கிடப்பக் கொடியோர்க்கு- மேவம் கிடப்ப்க் கிடைநெல் ஒருபால் குவிந்து கிடப்பதேன் என்றாள் கிளி.
( 215 )
மற்றும் மணிமேகலை
உள்ளார் இசைவேண்டி இல்லார்க் குதவுவர் உள்ளார் கடனென் றிலார்க்குதவ-உள்ளுக! உள்ளார் உடைமைஎனல் இல்லார் இழந்ததே பள்ளநீர் பாய்ந்தநீ ராம்.
மேலும் மணிமேகலை
இனமென எண்ணி இடுக! இடாரேல் மனமெனும் மங்கை தனது-தனிமை பொறாது மறுபுலம் போதலும் உண்டு உறாதார்க் குதவலும் உண்டு. மணிமேகலை காஞ்சியிலே அடிவைத்தால் பஞ்சம் பறந்தது! கல்லார்க்குக் கலவி அருளும் புலவரைப்போல் இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செலிவிக்கே ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் தேரும் திருவிழா வும்.
( 220 ) ( 225 )
காஞ்சிக்குத் தேரும் திருவாழாவும்
கல்லார்க்குக் கல்வி அருளும் புலவரைப்போல் இல்லார்க்குச் சோறுகறி இட்டாள்மேல்-செல்விக்கே ஆரும் புகழ்வைத் தளித்ததே காஞ்சிக்குத் தேரும் திருவிழா வும்.
( 230 )
மணிமேகலையே சோறுகறியாக்கத் தொடங்கிவிட்டாள்!
ஈயப் பெரும்பானை இட்டுச்சோ றாக்குவோர் ஒயப் பொருள்கள் உதவுவார்-தூயமணி மேகலையும் சோறாக்கி வெஞ்சனம்செய் வாள்பிஞ்சுப் பாகலையும் சென்று பறித்து்
தனக்கு வரும் புகழையும் மற்றவர்க்குப் பயன்படுத்தும் செய்கை அரியது!
உள்ளவர் தத்தமக் குள்ளது போகமற் றுள்ளதை இல்லார்க் குதவுகின்ற-உள்ளம் அரிதன்று; பெற்றபுகழ் மற்றவர்க் காக்கல் அரிதென் றறவணர் சொன் னார்.
மழை பெய்த்து காஞ்சியில்
அழையாது வந்தஎம் அம்மைகால் வைக்கப் பிழையாது யாமும் பிழைத்தோம்-மழையா மழையும் மழைத்தது வாழ்கின்றோம் என்றார் தழையாது காஞ்சியார் தாம்.
( 240 )
காஞ்சி மன்னன் வணங்கி வழியனுப்பினான்
அறவணர் ஆய்ந்த சுதமதி யோடும் உறவண மேகலை ஓவம்-புறவணம் கால்வைத்தாள் அக்கால் தலைவைத்தான் நன்றி என்றான் கோல்வைத்த காஞ்சியின் கோ
( 245 )
மணிமேகலை போகக்கண்ட மங்கைமார் வாழ்த்தினார்கள்
முன்னாலே சோறின்றி முட்டுண்டோம் அம்மையே உன்னாலே உள்ளோம் என்றேவாழ்த்திப்-பொன்னாலே பூணிட்ட செவ்வுலக்கைப் பாட்டுப் புதுக்கினார் நாணிட்டு நங்கையினைக் கண்டு.
( 250 )
உழவர் வாழ்த்தினார்கள்
பல்வாளை மேயும் பழனத்தைத் தாண்டியே செல்வாளை எங்கள் சிறுமையினைக்-கொல்வாள் நினையாமை வாழ்வோமா என்றார்கள் நீரார் சினையாமைச் செய்யுழவர் சேர்ந்து.
( 255 )
தையலார் சாப்பிட்டுப்போகக் கெஞ்சினார்கள்
மின்னுக்கும் நல்லறத்து வேளுக்கும் முன்நடக்கும் பொன்னுக்குப் பூவெடுத்தார் போலெடுத்த-முன்கைகள் கூப்பிட்டு வாழ்த்திய கோதைமார் கெஞ்சினார் சாப்பிட்டுப் போம்படியோ தாழ்ந்து.
மற்றும் பலர் வாழ்த்தினார்கள்
கல்லாமை நீக்கிக் கடும்பசிக்கு நீர்ச்சோறும் இல்லாமை நீக்கினீர் என்றுரைத்துப்- பல்லோர்தம் போரடித்த நெல்லைஎலாம் பொன்னாக்கிப் போகவரத் தேரடித்துக் கொண்டிருந்தார் சென்று.
( 260 )
மற்றும் மக்கள் வாழ்த்து
கண்பொங்கக் கையெடுத்தால் காலெடுக்கும் செல்வரிடம் வெண்பொங்கல் வாங்கி விலாப்புடைக்க-உண்கென்றாய் உள்ளளவும் ஊருக் குழைத்தவளே வாழ்கென்றார் எள்ளளவும் யாம்மறவோம் என்று.
( 265 )
மற்றும் பலர்
என்றும் அறியா எமைஈன்ற தாய்போலும் ஒன்றும் எதிர்பாரா தூர்க்.குழைத்தாய்-இன்றே எமைவிட் டகன்றாலும் எம்முள்நீ உள்ள சுமைவிட் டகலாதென் றார்.
( 270 )