பக்கம் எண் :

368கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1698 மண்ணை ஒருநாள் ஒருகுயவன்
     மயக்கிப் பிசையும் வேளையிலே
திண்ணை யருகு சென்றிருந்தேன்
     செய்யுந் தொழிலும் கண்டிருந்தேன்;
‘அண்ணா மெல்ல மெல்ல’ என -
     அமைந்து அழுகைக் குரல்கேட்டேன்,
கண்ணிற் காணா நாவாலே
     களிமண் கரைவது எனவுணர்ந்தேன்.
29

1699 ஊனார் உடலம் இதுவீழின்
     உண்டாம் வாழ்வின் நிலையறிய
ஆனா ஆசை மிகவேஎன்
     ஆன்மா வினையான் வேண்டிநின்றேன்;
நானா வுலகும் நெடுநாளாய்
     நாடி யலைந்து வந்ததுதான்
‘யானே சொர்க்கம் நரகமெலாம்’
     என்றே கூறி நின்றதுவே.
30

1700 வழியிற் குண்டு குழிவெட்டி,
     வலையுங் கட்டி, மதுவுண்டு,
விழவோர் வீதியும் அந்நாளே
     விதித்து வைத்து, என் கேடெல்லாம்,
அழியாப் பாவம் அதனாலே
     ஆன விளைவென்று அறைவாயோ?
தெளியாது உலகில் என்றென்றும்
     திகைத்து மறுகி நின்றேனே!
31

1701 இற்ற மண்ணால் மனிதனையும்
     எழுப்பி ஈடன் ஆளவிட்டுச்
சுற்றும் அரவும் அவ்விடத்தே
     சூதாய்ப் பதுங்க வைத்தவனே
முற்றும் பாவி எனஅவன்தன்
     முகத்தில் கரியைப் பூசியஅக்
குற்றம் நீங்க மன்னிப்புக்
     கொடுத்து நீயும் பெறுவாயே.
32