பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு365

Untitled Document
1686 போற்றும் இலங்கை அசோகவனம்
     போன இடமும் எவ்விடமோ?
சீற்ற அரக்கர் கோனும், அவன்
     செங்கை வாளும் எங்கேயோ?
ஏற்றும் திராட்சைக் கொடியின்னும்
     இனிய மதுவைத் தந்திடுமே;
ஆற்றங் கரைப்பூஞ் சோலைமணம்
     அல்லும் பகலும் வீசிடுமே.
17

1687 பாயும் வாய்க்கால் அருகிலெழும்
     பசிய கோரை அழகினைப்பார்;
சாயும் வேளை மெதுவாகச்
     சாய்நீ, அப்பா! சொல்கின்றேன்;
ஆயின் இதுவும் முன்னாளோர்
     அழகின் செல்வி அனுதினமும்
நேய மாக நெய்பூசி
     நீட்டி வளர்த்த பூங்குழலே.
18

1688 மண்ணில் மறையும் முடிமன்னர்
     வாழ்வும் அரிய வாழ்வாமோ?
கண்ணிற் காணாச் சொர்க்கமுமோர்
     கனவே யன்றி நனவாமோ?
நண்ணும் உன்கைப் பொருளதனை
     நம்பி யிருநீ, நண்ணாதது
எண்ணி யெண்ணி எந்நாளும்
     ஏங்கி யலைவது ஏன்? ஐயா!
19

1689 இன்றைக் கின்றைக் கென்றோயாது
     இரவும் பகலும் உழைத்திடுவீர்;
அன்றி நாளைக் காமெனவே
     அலுப்பில் லாது முயன்றிடுவீர்;
ஒன்று சொல்வன் உண்மைமொழி
     உறுதி யாகக் கொள்வீரே;
என்றும் மூடர் நன்மையுமக்கு
     இங்கும் இல்லை அங்குமில்லை.
20