பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு273

Untitled Document

    நாலுகை யானை நடந்து கின்றேன்'
என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று
எண்ணாது டம்பம் எடுத்துரைப்பது போல்,

1165   'இரவு பகலும் இடைவி டாமல்
பற்பல வருஷம் படித்து பீ.எல்.,
எம்.எல். பட்டம் எல்லாம் பெற்று
வந்திடும் பெரிய வக்கீல் மாரும்,
யாங்க ளில்லையேல் என்செய் வார்?' எனப்

1170   புத்தி யிலாது புலம்பித் திரியும்
குமஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக்
குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!

1175   'இன்ன படியென்று எழுதிவிட்ட
சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன்,
விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்;
வருகிற வழியாய் வந்து எனைக் கண்டால்
சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்

1180   தருவேன்' என்று சற்றும்வாய் கூசாது
உரைக்கும் அந்த உத்தம புருஷன்
நிறையா வயிற்றை நிறைத்திடக் கடலைத்
திறந்து விட்டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்

1185   கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும்
சாக்ஷிப் படிகளும் சமன்ஸீப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிஷன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்

1190   வாறண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி,
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட ஆளும் நீரோ? ஐயா!