ஆரஞ்சிப் பழத்தையும் தம்பி-நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு
நீர்சுண்டி இருக்கவும் கூடும்-அது
நிறையப் புளிக்கவும் கூடும்
ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி-உனக்கு
உகந்ததென்றால் அதை வாங்கு
பாரெங்கும் ஏமாற்று வேலை-மிகப்
பரவிக்கிடக்கின்றது தம்பி!
அழுகிய பழத்தையும் தம்பி-அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுப்பார்
புழுக்கள் இருப்பதுண்டு தம்பி-உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி-உள்
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே-வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி
அழுத்தினாலும்தெரியாது-அதை
அறுத்துக் காட்டச்சொல் தம்பி.
நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார்-அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி
துய்ய பயறுகளில் எல்லாம்-கல்
துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்
மையற்ற வெண்ணெயென் றுரைப்பார்-அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி
ஐயப்பட வேண்டும் இவற்றில்-மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு.
வகுத்து வகுத்துசொல் வார்கள்-அதன்
வயணத்தை ஆராய வேண்டும்
பகுத்தறி வழியாச் சொத்தாம்-அதை
பாழாக்கக் கூடாது தம்பி
நகைத்திட எதையும்செய் யாதே-மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
தகத்தகப் புகழினைத் தேடு-நீ
தமிழரின் வழியினில் வந்தாய்.
|
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
|