பக்கம் எண் :

காதல்

தொழுதெழுவாள்

உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி
மண்டிடும் காதற் கண்ணன்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன். என்மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்

அறைவாயில் உட்பு குந்தேன்
அத்தான், தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனி இதழ் நெடிதுறிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக்கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்சணைமேல்
நலியாதுட்கார வைத்தான்.





( 5 )





( 10 )




( 15 )

கமழ்தேய்வு பூசி வேண்டிக்
கனிவோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடையால் துடைத்தே
தமிழ், அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,

தென்றலும் போதா தென்று
சிவிறி கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப்பொழு தாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி;

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்.
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால்து டைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி.




( 20 )





( 25 )




( 30 )





( 35 )



மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றாற்கு
மறம்குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மறைகுன்ற நேரும் அன்றோ?

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்! பின்
இரவுபோ யிற்றே கோழி,
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ணரும்பு

உயிர்போன்றான் துயில்க ளைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.
அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
'அழித்தது வறுமை அன்னாய்
உதவுக' என்று நைந்தார்.
'பிழைத்தது மழைஎன் அத்தான்
பெய்'என்றேன் குடிகட் கெல்லாம்
மழைத்தது மழைக்கை செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.


( 40 )




( 45 )





( 50 )





( 55 )




( 60 )




( 65 )




( 70 )

சொல்லும் செயலும்

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
             {சொல்வதென்றால்...}

முல்லைவிலை என்ன என்றான்.
இல்லைஎன்று நான்சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்.
             {சொல்வதென்றால்...}

பின்னலைப்பின்னே கரும்பாம்பென்றான் - உடன்
பேதைதுடித்தேன் அணைத்துநின்றான்
கன்னல்என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்றுதின்றான்.
             {சொல்வதென்றால்...}

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லைஎன்றேன்.
குளிர்முகத்தில் முகம்அணைத்தான்.
             
{சொல்வதென்றால்...}



( 75 )





( 80 )





( 85 )





( 90 )

இருவர் ஒற்றுமை

எனக்கும் உன்மேல் - விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
             {எனக்கும் உன்மேல்...}

எனக்கு நீதுணை அன்றோ -    இங்
குனக்கு நான்துணை அன்றோ - அத்தான்
             {எனக்கும் உன்மேல்...}

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன் செயல்        இனிக்கும்
தனித்தல் உனக்கும் எனக்கும் -   நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
             {எனக்கும் உன்மேல்...}

விழி தனிலுன              தழகே - என்
அழ கிலுனது              விழியே
தொழுத பிறகுன்            தழுவல் - நான்
தழுவிப் பிறகுன்            தொழுதல் - அத்தான்
             {எனக்கும் உன்மேல்...}

நீ உடல்! உயிர்             நானே - நாம்
நிறை மணமலர்             தேனே
ஓய்விலை நமதன்பும் - இங்கு
ஒழியவிலை பேரின்பம் - அத்தான்
             {எனக்கும் உன்மேல்...}





( 95 )





( 100 )





( 105 )





( 110 )

பந்துபட்ட தோள்

கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்திரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர்துடித்திட லானேன்.

வடக்குத் தெருவெளி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.



( 115 )




( 120 )





( 125 )


"வளர்ப்பு மயில்களின் ஆடல் -தோட்ட
மரங்கள், மலர்க்கிளை கூட்டம்.
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில

தோழி இவ்வா றுரைக்குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்ன இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை" வென்று சொன்னான்.


( 130 )




( 135 )





( 140 )

தன்மான உலகு

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று
வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்
என்மா னத்தை ஈவேன; என்று
மறுத்து, நான்வரும் வரைபொறுத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
என்வீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே
என்னை அத்தான் என்றழைத்தாள்.

( 145 )




( 150 )




( 155 )

என்னை அத்தான் என்றழைத்தாள்.
"ஏன்!" எனில் அதட்டலென் றெண்ணு வாளோ!
"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ!
"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்
பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
"காத்திருக் கின்றேன், கட்டழ கே" என
உண்மை கூறினேன் உவப்படைந்தாள்.
ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.

என்னை அத்தான் என்றழைத்தாள்
காத்திருப்பது கழறினேன், உவந்தாள்.
ஒரு நொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!


( 160 )




( 165 )





( 170 )

மெய்யன்பு

மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கிருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்.
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத்தோடும்.

விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சொன்றாள்.
கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்.

உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்துவிட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசுண்ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்




( 175 )






( 180 )




( 185 )

தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்பதுண்டோ?
தேடிச்சென்றேன்வானம் பாடி தன்னைச்
"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய் - தேனைச்
சொட்டுகின்ற இதழாளே, பிழைபொறுப்பாய்;
பிள்ளைபெற வேண்டாமே, உனைநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே ஆவேன என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய என்றே.

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏதோ
மனக்கசப்பு வரல் இயற்கை. தினையை நீதான்
பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி ரென்றேன்.
எனைநோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள்
இல்லைஎனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;
எனக்கும்இனி உயிரில்லை என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீது
செங்காந்தள் மலர்போலும் அவள்கை கண்டேன்
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்
படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்
பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே



( 190 )




( 195 )





( 200 )





( 205 )




( 210 )

பெற்றோர் இன்பம்

கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும், பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கச் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.

"கேட்டான் நண்பன், சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பாற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகா லிஅவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்: அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி. அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன. விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே ஒன்றும் இல்லை"
என்று கூறினான் ஏழை ஏகாலி.




( 215 )




( 220 )




( 225 )




( 230 )




( 235 )




( 240 )

அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலைவியைத் தழுவலாயிற்று.

"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.




( 245 )





( 250 )

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்
நல்லி ஓர்புதுமை நவிலலு ற்றாள்.
"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள், சந்தைக்கு வந்துசேர்ந்தார்கள்,
ஆடவர் பற்பலர் அழகுப்போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது. பின்அது மீளவில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின,
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம் - இவைகள் அகத்தில் நேர்ந்தவை

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான், தெருக் குறட்டில்
காத்திருந்தேன்; அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின் 'எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும் மொழியை நான்மு டிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக் கூற
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.



( 255 )




( 260 )




( 265 )





( 270 )




( 275 )




( 280 )


'நல்லியே நல்லியே நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது.
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர, எம்
வாழ்வுக்கு - உரிய வண்மை பெற்றோம்;
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ' என் றுரைத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்,
'மறைபோற் சுமந்த என் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல வழிகள்
உலவு மீன்போல் ஒளிவீ சினவோ;
நான்மேட் கும்பேறு பெற்றிலேன்' என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!





( 285 )




( 290 )





( 295 )




( 300 )

பணமும் மணமும்

அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்
ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்
பேசிப் பிரிவார்ந பிறரறியா மற்கடி
தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்
வளர்ந்து வருகையீலே, மஞ்சினி, தன் மைந்தன்
குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்
ஆளி சிரித்தே அவனிடத்தில் - 'கேளண்ணா
தத்தை விதவைப்பெண் சம்மதமா?' என்றுரைத்தான்.
'மெத்த விசேட' மெனச்சொல்லி மஞ்சினி தான் - ஒத்துரைத்தான்.

'சாதியிலே நான்மட்டம் சம்மதமா?' என்றே
ஓதினான் ஆளி. 'ஒருபோதும் - காதில்நான்
மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை
இட்டந்தான்' என்றுரைத்தான் மஞ்சினி - 'கிட்டியே
ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்
செய்வாயா?' என்றாளி செப்பினான் - 'ஐயோ என்
உத்தேசம் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்
சொன்னேன்' என உரைத்தான் மஞ்சினி சொன்னதும்
பின் ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்தேரம்
வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை;




( 305 )




( 310 )





( 315 )




( 320 )



கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்
பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும்
குணமில்லை, என்றிருத்தல் கண்டு - திணறியே
'வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூறு - கூடிவரும்
மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்
நாளமைப்போம்' என்றந்த ஆளி நவிலவே
தோளலுத்த மஞ்சினி, "ஆளியண்ணா - கேளிதை
இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை
சிந்திப்போம் பின என்று செப்பினான் - "எந்த
வருடத்தி லே? எந்த வாரத்தில்? எந்தத்
தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ என்றான் ஆளிதான்!
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான் :- "பச்சையாய்த்
தாலி யறுத்தவளைத் தாலிகட்டினால்ஊரார்
கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா மேலும்
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது
முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும்
முத்தன் அங்குவந்தான் "முகூர்த்தநாள் நாளைக்கே.
தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த
இருந்த சொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும் விரிவாக
இல்லை மணந்துகொள என்றுரைத்தான் ஆளி! அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல
கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்
தனியாய் இராதே - "தடைஏன் - இனி" என்றான்
முந்திமணம் ஆயிற்றாம். பாங்கு முறியவில்லை.
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!

( 325 )




( 330 )




( 335 )




( 340 )




( 345 )




( 350 )


திருமணம்

மாதிவள் இலைஎனில் வாழ்தல் இலைஎனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!

புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்
துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!

( 355 )





( 360 )


என்தின வறிந்து தன்செங் காந்தள்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு
மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!
மலம்மூ டத்தான் மலர்பறித் தேன்எனில்
குளிர்மலர்ச் சோலை கோலென்அழாதா?

திருமண மின்றிச் செத்தான் அந்தச்
சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது
புரோகி தன்புரட் டுநூல்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!


( 365 )




( 370 )





( 375 )