பக்கம் எண் :

ஏற்றப் பாட்டு

முற்பகல்

ஓங்கு கதிர் வா வா -- நீ
[ஒன்றுடனே] வாழி
மாங் கனியும் நீதான் -- அந்த
வானம் என்னும் தோப்பில்!
நீங்கும் பனி என்றே -- இங்கு
நீ சிரித்து வந்தாய்!
நாங்கள் மறப் போமோ -- நீ
(நாலுடனே) வாழி
ஐந் துடனே -- வாழி -- நீ
அள்ளி வைத்த தங்கம்!

முந்திய ?கருக்கல்? -- எந்த
மூலை யிலும் இல்லை.
சந்து பொந்தில் எங்கும் -- உன்
தங்க வெய்யில் கண்டோம்.
இந்த நன்மை செய்தாய் -- நீ
எட்டுடனே வாழி!

            திராவிட நாடு வாழ்த்து

இன்பம் உள்ள நாடு -- தம்பி
இத் திராவி டந்தான்
உன்னி வாழ்த்து வோமே -- தம்பி
ஒன்பதுடன் வாழி

            திராவிட நாட்டின் சிறப்பு

நன்மை யுள்ள நாடு -- தம்பி
நாவலந் தீ வுக்குள்

தென்னை வளம் சேரும் -- நல்ல
தெற்கு வள நாடு.

கன்னி முதல் வங்கம் -- இரு
கடல் கிழக்கு மேற்கு.

சின்ன தல்ல தம்பி -- நம்
திராவிட நன் னாடு!

முன்ன ரசர் நாடு -- நல்ல
மூன் றரசர் நாடு

மன்னர் வில்எ டுத்தால் -- பனி
வட மலைந டுங்கும்.

பாண்டி யன்பேர் சொன்னால் -- இந்தப்
பார் நடுங்கும் தம்பி
ஆண்டி ருந்த சேரன் -- அவன்
ஆரி யரை வென்றான்,

மாண்ட துண்டு சோழன் -- அவன்
மா நிலத்தைக் காத்தான்.

மாண்டு விட்டால் என்ன -- அவன்
வழி வந்தவர் நாமே!

இருப துடன் ஒன்றே -- வளம்
எக்க ளிக்கும் நாட்டில்

எரு தடிப்ப தாலே -- தம்பி
என்ன பயன் என்று
பொருந்த யானை கட்டி -- நெல்
போர் அடித்தல் உண்டு.

கரும்பு தரும் சாறோ -- தம்பி
கா விரியின் ஆறு!

முப் பழமும் தேனும் -- நல்ல
முந்தி ரிப்ப ருப்பும்,

எப்பொ ழுதும் காணும் -- தம்பி
இருப துடன் ஆறு

கப்பல் கொண்டு போகும் -- இங்குக்
காணும் சரக் கெல்லாம்,

சிப்ப மாகச் சாயும் -- பல
சீமைச் சரக் கெல்லாம்

கெட்டி முத்துச் சாயும் -- நம்
கீழ்க் கடலில் தம்பி.

முட்டில் லாத நாடு -- தம்பி
முப்பதுடன் வாழி!

வெட்டும்இட மெல்லாம் -- நாம்
வேண்டிய பொன் கிட்டும்

எட்டுத் திசை பாடும் -- நம்
இன்பத் திரு நாட்டை!

நாக ரிக நாடு; -- நம்
நல்ல பெரு நாடு!

தோகை மயில் ஆடும் -- பூந்
தோட் டங்களில் எல்லாம்.

வேக வைக்கும் கோடை -- அதை
விழுந் தவிக்கும் தென்றல்

வாழ் கறவை மாடு -- தம்பி
மாம லையின் ஈடு!

சந்த னத்துச் சோலை -- அதைச்
சார்ந்து நிற்கும் குன்றம்

அந்தப் ?பொதிகை? போல் -- தம்பி
ஆருங் கண்ட தில்லை

சிந்தருவி உண்டு -- தம்பி
தெங் கிளநீர் போலே!
நந்து புனல் ஆறு -- தம்பி
நாற்ப துடன் வாழி!

காவிரி நல்வைகை -- பல
கண் கவரும் பொய்கை

பூ விரியும் சோலை -- நல்ல
பொன் கொழிக்கும் நன்செய்;

யாவும் உண்டு கண்டாய் -- தம்பி
இத் திராவி டத்தில்

தேவை எல்லாம் சாயும் -- நம்
தெற்கு வள நாட்டில்.




( 5 )




( 10 )





( 15 )







( 20 )









( 25 )






( 30 )






( 35 )






( 40 )






( 45 )






( 50 )






( 55 )







( 60 )







( 65 )






( 70 )







( 75 )






( 80 )






( 85 )




            திராவிடர்கலை ஒழுக்கம்

குற்ற மற்ற கொள்கை -- தம்பி
கொண்ட திந்த நாடு

கற்ற வருக் கெல்லாம் -- தம்பி
கல்வி தந்த நாடு.

வெற்றி மற வர்கள் -- தம்பி
வேல் மறவர் நாடு.

மற்ற வரும் வாழத் -- தம்பி
வழி வகுத்த நாடு.

இங்கு வள்ளு வன் தான்
ஈரடியும் தந்தான் -- தம்பி

ஆரும் அறம் கண்டோம் -- தம்பி
ஐம்ப துடன் வாழி!

சீருடை நாடு -- தம்பி
திராவிட நன் னாடு

பேருடைய நாடு -- தம்பி
பெருந் திராவி டந்தான்.

ஓர் கடவுள் உண்டு -- தம்பி
உண்மை கண்ட நாட்டில்

பேரும் அதற் கில்லை -- தம்பி
பெண்டும் அதற் கில்லை

தேரும் அதற் கில்லை -- தம்பி
சேயும் அதற் கில்லை

ஆரும் அதன் மக்கள் -- அது
அத்த னைக்கும் வித்து!

உள்ளதொரு தெய்வம் -- அதற்
குருவ மில்லை தம்பி.

அள்ளி வைத்த ஆப்பீ -- தம்பி
அதிர் கடவுள் இல்லை.

குள்ள மில்லை தெய்வம் -- அது
கோயில் களில் இல்லை.

தெள்ளு பொடி பூசும் -- தம்பி
சிவன் கடவு ளல்ல.
அறுப துடன் ஒன்று தம்பி
அரி கடவுள் அல்ல --

அறு முகனும் அல்ல -- தம்பி
ஐங் கையனும் அல்ல.

அறு சமயம் சொல்லும் -- தம்பி
அது கடவுள் அல்ல.

பிற மதத்தில் இல்லை -- அந்தப்
பெரிய பொருள் தம்பி.

திராவி டர்கள் முன்னே -- தம்பி
தெரிந் துணர்ந்த உண்மை.

ஒரு மதமும் வேண்டாம் -- தம்பி
உண்மை யுடை யார்க்கே.

பெரு மதங்கள் என்னும் -- அந்தப்
பேய் பிடிக்க வேண்டா.

திருட்டுக் குரு மாரின் -- கெட்ட
செயலை ஒப்ப வேண்டாம்!

காணிக் கைகள் கொட்டி -- நீ
கண் கலங்க வேண்டாம்!

ஏணி ஏற்ற மாட்டார் -- தம்பி
எழுப துடன வாழி!

தோணி யினில் ஏற்றி -- நல்ல
சொர்க்கம் சேர்க்க மாட்டார்.

நாண மற்ற பேச்சை -- நீ
நம்ப வேண்டாம் தம்பி.

சாதி யில்லை தம்பி -- மக்கள்
தாழ் வுயர்வும் இல்லை.

தீத கற்ற வந்த -- நம்
திருக் குறளைப் பாராய்.

நீதி பொது தம்பி -- இந்த
நீணி லத்தில் யார்க்கும்.

மாத ருக்கும் நீதி -- ஆண்
மக்க ளுக்கும் ஒன்றே

பச்சை விளக் காகும் -- உன்
பகுத் தறிவு தம்பி

பச்சை விளக் காலே -- நல்ல
பாதை பிடி தம்பி!

அச்ச மில்லை தம்பி -- நல்ல
அறம் இருக்கும் போது!

எச்ச ரிக்கை கண்டாய் -- தம்பி
எண்ப துடன் வாழி!

வள்ளு வரின் நூலே -- நல்ல
வழி யளிக்கும் தம்பி!

குள்ளர் வழிச் சென்று -- நீ குழியில் விழ வேண்டாம்.

உள்ள இனத் தார்கள் -- உளம்
ஒன்று பட வேண்டும்.

தள்ளுக பொ றாமை -- ஒரு
தாய் வயிற்று மக்கள்,

நீக்குக பே ராசை -- தம்பி
நிகர் எவரும் ஆவார்.

போக்கு சினம் தீச்சொல் -- நீ
பொன் அறத்தை வாழ்த்து.

சேர்க்கும் அறம் உன்னை -- ஒரு
தீங்கும் அற்ற வாழ்வில்!

ஊர்க் குழைக்க வேண்டும் -- நீ
உண்மை யுடன் தம்பி!

நாட்டுக் குழை தம்பி -- இந்த
நானி லத்தை எண்ணி!

வீட்டுக் குழை தம்பி -- இந்த
மீதிப் பெயர் எண்ணி!

தேட்டம் பொது தம்பி -- இந்தச்
சீமை பொது தம்பி!

தோட்டம் பொது தம்பி --
தொண்ணூ றோடி ரண்டே

கண் அடித்தேத அழைக்கும் -- ஒரு
கட்டழகி தன்னை

எண்ணம் ஒத்திருந்தால் -- நீ
ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பண்ணி வைப்பதாக -- வரும்
பார்ப்பு மணம் வேண்டாம்.

கண்மணியும் நீயும் -- நல்ல
காதல் மணம் கொள்வீர்

திராவிடத்தை மீட்பீர் -- நம்
செந்தமிழை மீட்பீர்.

திராவிடர்கள் ஒன்றாய் -- தம்பி
சேர்ந்துழைக்க வேண்டும்.


குறிப்புரை:

கதிர்-சூரியன். ஓங்கு-கடல்மேல் எழுகின்ற. உன்னி-
நினைத்து. நாவலந்தீவு-இந்தியா. கன்னி-கன்னியாகுமரி,
வங்கம்-வங்காளம். மூன்றரசர்-சேர, சோழ, பாண்டியர். பனி
வடமலை-இமயமலை. பார்-உலகம். முப்பழம்-மா, பலா,
வாழை, குன்றம்-மலை. நந்து புனல்-பெருகுகின்ற நீர். மறவர்-
வீரர். அறம்-தருமம். சேய்-பிள்ளை. ஆப்பீ-சாணி. தெள்ளு
பொடி-திருநீறு. நிகர் எவரும்-எவரும் சமானம். தேட்டம்-
சொத்து. பார்ப்பு-பார்ப்பனன். மாற்றார்-பகைவர்.


திராவிடத்தில் மாற்றார் -- தமைச்
சேர விட வேண்டாம்.
ஒரே உறுதி கொள்வாய் -- தம்பி
ஒரு நூறுடன்) வாழி.






( 90 )








( 95 )








( 100 )








( 105 )






( 110 )







( 115 )






( 120 )






( 125 )








( 130 )






( 135 )







( 140 )






( 145 )







( 150 )






( 155 )







( 160 )






( 165 )






( 170 )






( 175 )







( 180 )






( 185 )







( 190 )







( 195 )




( 200 )






( 205 )
பிற்பகல்

            மாலை

உச்சி குடை சாய்ந்தான் -- கதிர்
ஒன்றுடனே வாழி!

மச்சு வேய்ந்திருந்தான் -- அந்த
மாற்றுயர்ந்த பொன்னன்

மெச்சு தடி பெண்ணே -- அந்த
வெய்யி லையும் வையம்.

வைச்ச புள்ளி மாறான் -- அவன்
மாலை மாற்றப் போவான்.

            ஒழுக்கம்

நல்லொழுக்கம் ஒன்றே -- பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்

புல் ஒழுக்கம் தீமை -- பெண்ணே
பொய் உரைத்தல் தீமை!

இல் லறமே பெண்ணே -- இங்கு
நல் லறமென் பார்கள்

கல்யுவிடை யோரே -- பெண்ணே
கண்ணுடைய ராவார்.

நன்றி மறவாதே -- பெண்ணே
நற்பொறுமை வேண்டும்

இன்சொல் இனிதாகும் -- பெண்ணே
இன்னல் செய்ய வேண்டாம்

உன்னருமை நாட்டின் -- பெண்ணே
உண்மை நிலை காண்பாய்.

இந்நிலத்தின் தொண்டில் -- நீ
ஈடுபட வேண்டும்;

பத்துடனே மூன்று -- நீ்
பகுத்தறிவைப் போற்று!

நத்தியிரு பெண்ணே -- நீ
நல்ல வரை என்றும்!

சொத்து வரும் என்று -- நீ
தோது தவறாதே.

முத்து வரும் என்று -- நீ
முறை தவற வேண்டாம்.

கனியத் தமிழ் பாடு -- பெண்ணே
கச்சேரி செய்யாதே.
சினிமாவிற் சேர்ந்து -- நீ
தீமை யடையாதே!

தனித்து வரும்போது -- கெட்ட
தறுதலை கண் வைத்தால்,

இனிக்க நலம் கூறு --பெண்ணே
இல்லாவிடில் தாக்கு.

இருபதுடன் ஒன்றே -- பெண்ணே
இத்திரா விடத்தில்.

அரிசிமட்டும் இல்லை -- பெண்ணே
ஆட்சி மட்டும் உண்டு.

இரிசன் மகன் முத்தை -- பெண்ணே
."இந்தி படி" என்றான்.








( 210 )








( 215 )







( 220 )






( 225 )







( 230 )






( 235 )






( 240 )





( 245 )







( 250 )
பிற்பகல்


வரிசை கெட்ட மூளி -- அவன்
வைத்தது தான் சட்டம்!

இருபதுடன் ஐந்தே -- நம்
இனிய தமிழ்த் தாயைக

கருவறுத்துப் போடும் -- ஒரு
கத்தியடி இந்தி.

அரிய செயல் ஒன்று -- பெண்ணே
ஆளுபவர் செய்தார்.

ஒருவருக்கும் கள்ளைப் -- பெண்ணே
ஒழிக்கச் சட்டம் செய்தார்!

கள்ளை விட்ட பேர்க்குப் -- பெண்ணே
கைப் பணமும் மீதி

முள் விலக்கி னார்கள் -- பெண்ணே
முப்பதுடன் வாழி!

கள்ளை விட்டுக் கையில் பெண்ணே
காசு மீத்தச் செய்தார்.

கள்ளக் கடை போட்டார் -- அதைக்
கழற்ற வழி செய்தார்;

ஆள வந்தார் உண்டு -- பெண்ணே
ஐயோ பெரும் மண்டு

நாளும் கையில் மட்டும் -- பெண்ணே.
நல்ல வருமானம்!

ஆளுக்கென்ன பஞ்சம் -- பெண்ணே
அடிமடியில் லஞ்சம்!

தோளிலே மிடுக்காம் -- அவர்
தொழுவதோ வடக்காம்!

கெண்டை விழி யாளே -- அடி
கிள்ளை மொழி யாளே!

கொண்டையிலே பூவும் -- உன்
கோணை நெடு வாக்கும்,

தண்டையிலே பாட்டும் -- உன்
தாழ் அடியில் கூத்தும்,

கண்டவுடன் காதல் -- நான்
கொண்டே னேஉன் மீதில்.

நாற்ப துடன் ஒன்று -- பெண்ணே நான் உனக்கு மாமன்.

நேற்று வந்து போனாய் -- அடி
நீல மயில் போலே

மாற்று யர்ந்த பொன்னே -- அடி
மாணிக்கமே கேளாய்

சோற்றை மறந் தேனே -- அடி
தூக்க மில்லை மானே!

உன் நினைப்புத் தானே -- அடி
ஊற் றெடுத்த தேனே!

என்னைக் கொல்லு தேடி --அடி
ஏதுக் கிந்த மோடி?

சின்ன வய தாளே -- அடி
சிரித்த முகத் தாளே;

அன்ன நடை யாளே -- நல்ல
அச்ச இடை யாளே!

துள்ளு வதென் ஆசை -- அடி
துடித்த தடி மீசை.

அள்ளுவ தென் காதல் -- அடி
ஐம்பதுடன் வாழி!

தள்ளத் தகு மோடி -- நான்
தாய்க்குத் தலைப் பிள்ளை

நொள்ளை யல்ல பெண்ணே -- நான்
நொண்டி யல்ல பெண்ணே

வருத்தம் இல்லை பெண்ணே -- என்
மாமிக் கும்என் மேலே

கருத்து உண்டு மாமன் -- என்னைக்
கட்டிக் கொள்ளச் சொல்வான்

சிரிப்பு மலர் வாயால் -- அடி
தெரிவி ஒரு பேச்சே

கருத்தை உரை கொஞ்சம் -- பெண்ணே
கல்லடி உன் நெஞ்சம்.





( 255 )







( 260 )





( 265 )







( 270 )






( 275 )







( 280 )






( 285 )







( 290 )






( 295 )







( 300 )






( 305 )






( 310 )






( 315 )
பிற்பகல்


பார் இரண்டு சிட்டு -- பெண்ணே
பழகும் ஒன்றுபட்டு.

யார் தடுக்கக் கூடும் -- பெண்ணே
ஐம்ப துடன் எட்டு

பீர்க்க மலர் பூக்கும் -- அடி
பின் பொழுதும் கண்டாய்.

ஆர்க்கு தடி வண்டும் -- பெண்ணே
அறுப துடன் வாழி!

விரிந்ததடி முல்லை -- அடி
வீசி யது தென்றல்

சரிந்த தடி பெண்ணே -- மலர்
தங்கப் பொடி எங்கும்.

எரிந்த தடி மேனி -- பெண்ணே
இனிப் பொறுக்க மாட்டேன்.

புரிந்த னைஇந் நேரம் -- அடி
பொல்லாத ஒட் டாரம்.

பூட்டி வைத்த வீட்டின் -- அடி
பொல்லாத ஒட் டாரம்.
புது விளக்கும் நீயே.

மாட்டி வைத்த கூட்டில் -- அடி
மணிக் கிளியும் நீயே.

போட்டு வைத்த சம்பா -- இனிப்
பொங்கி டும்முன் னாலே

கூட்டி வைத்த வீட்டின் -- நல்ல
குடும்ப விளக் காவாய்.

கூண்டு வண்டி கட்டி -- நாம்
கூடலூர் அடைந்தால்,

பாண்டி யன்கு டும்பம் -- என்று
பார்த்து மகிழ் வார்கள்.

தாண்டு நடை போட்டு -- நாம்
தக தகென்று போனால்

மாண்ட நெடுஞ் சோழன் -- அவன்
வளர் குடும்பம் என்பார்

தையல் என்றன் வீட்டில் -- நீ
சமையல் செய்யும் போதுன்
கை யழகு பார்த்து -- நான்
களித் திடுவேன் பெண்ணே

கையில் விளக் கேந்தி -- நீ
கடைசி அறை போவாய்.

பொய் யல்லவே பெண்ணே -- மிகப்
பூரிக்கும் என் மேனி

எழுப துடன் ஏழு -- பெண்ணே
இளமை மாறிப் போகும்

அழகு மாறிப் போகும் -- நீ
அறிந்து நட பெண்ணே

குழந்தை குட்டி பெற்று -- நாம்
குறை தவிர்க்க வேண்டும்.

பிழிந்த பழச் சாறே -- அடி
பேச்சும் உண்டோ வேறே

தங்கக் கதிர் மேற்கில் -- மெல்லத்
தவழ்ந்ததடி பெண்ணே.

மங்கிற்றடி வெய்யில் -- அதோ
மகிழ்ந்த தடி அல்லி.

தங்கும் தாமரைப்பூ -- மானே
தளர்ந்ததடி மேனி,

பொற்கிற் றடி காதல் -- அடி
பூவை யேஉன் மீதில்!

எண்ப துடன் ஐந்தே -- பெண்ணே
எருதுகளின் கூட்டம்.

கண் மகிழ்ந்து பெண்ணே -- அவை
கழனி விட்டுப் போகும்.

பெண் மயிலே என்னை -- நீ
பெருமை படச் செய்வாய்.

உண்மையிலே நானே -- உன்
ஊழி யம்செய் வேனே.

பட்ட தடி உன்கை -- பெண்ணே
பலித்த தடி வாழ்வு.

தொட்டது துலங்கும் -- இனித்
தொண்ணூ றுடன் வாழி!

இட்டது நீ சட்டம் -- என்
இன்பப் பெரு மாட்டி.

விட்டுப் பிரி யாதே -- எந்த
வேளையிலும் மாதே

ஆறு தலைச் செய்வாய் -- என்
அண்டை யிலி ருந்தே.

மாறி டுமோ கண்ணே -- நம்
வாழ்க் கையிலே எண்ணம்?

மாறும்படி செய்வார் -- இவ்
வையகத்தில் இல்லை.
ஊறு தடி அன்பும் -- பெண்ணே
ஏங் கிடுதே இன்பம்.

தேங்கி யது நீலம் -- அந்தச்
செங்க திரின் மேலே.

பூக்கும் மண முல்லை -- இனிப்
போகு மடி மாலை

வாய்க்க விளக் கேற்றி -- நகர்
மாத ரும்ம கிழ்ந்தார்

நோக் கியது வையம் -- பெண்ணே
நூறுடனே வாழி!

---------------------------------------------------------------
குறிப்பு:- உச்சிகுடை-சூரியன். சாய்ந்தான்-மேற்கில் சாயத்
தலைப்பட்டுவிட்டான். மச்சு வேய்ந்துவிட்டான்-மேற்
கூரை போட்டிருந்தான் இதுவரைக்கும். பொன்னன்-
மாற்றுயர்ந்த பொன்கதிரையுடைய சூரியன். மாலை
மாற்ற-மாலைப்பொழுதை மாற்றி இரவை உண்டாக்க
ஆர்க்குதடி-முழங்குகின்றதடி.

---------------------------------------------------------------

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாவேந்தராக
விளங்குபவர் பாரதிதாசனார்; புரட்சிக்
கவிஞர், புத்துலகச் சிற்பி, சீர்திருத்தக்கவிஞர்,
சிந்தனைச் செம்மல் என பல்லோராலும் பாராட்டப்படுபவர்.
தமிழ்க்கவிதை வானில் இரு சுடராகவும்
ஒளி வீசியவர். சமுதாயத்தில் மண்டிக்கிடந்த சாதி
சமயக் கொடுமைகள் உயர்ந்தோர் -- தாழ்ந்தோர்,
ஆண்டான் -- அடிமை என்ற ஏற்றத்தாழ்வுகள் ஆகிய
தீமைகளைச் சுட்டெரிப்பதில் பகலவனாகவும்,
இயற்கை, அழகு, காதல் நெஞ்சம் போன்ற இனியன
வற்றைப் பாடுவதில் குளிர் நிலவாகவும் திகழ்ந்தவர்.

            -- சிலம்பொலி சு செல்லப்பன்




( 320 )






( 325 )







( 330 )






( 335 )





( 340 )







( 345 )






( 350 )







( 355 )






( 360 )







( 365 )






( 370 )







( 375 )





( 380 )






( 385 )






( 390 )






( 395 )







( 400 )






( 405 )















( 410 )



( 415 )