பக்கம் எண் :

சுயமரியாதைச் சுடர்

கடவுள் மறைந்தார்

மனைமக்கள் தூங்கினர் நள்ளிரவில் விடைபெற்று
   வழிநடைத் தொல்லை இன்றி
மாபெரிய "நினைவென்ற உலகத்தை" அணுகினேன்.
   வந்தார்என் எதிரில் ஒருவர்.

எனைஅவரும் நோக்கியே "நான் கடவுள் நான் கடவுள
   என்று பலமுறை கூறினார்.
"இல்லைஎன் பார்கள்சிலர் உண்டென்று சிலர்சொல்வர்
   எனக்கில்லை கடவுள் கவலை"

எனவுரைத் தேன். அவர், "எழுப்புசுவர் உண்டெனில்
   எழுபியவன் ஒருவனுண்டே
இவ்வுலகு கண்டுநீ நானும்உண்டென அறிக"
   என்றுரைத்தார். அவரை நான்,

"கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?
   காட்டுவீர என்ற வுடனே
கடவுளைக் காண்கிலேன்! அறிவியக் கப்புலமை
   கண்டஎன் அன்னை நாடே!





( 5 )





( 10 )





( 15 )
கடவுளுக்கு வால் உண்டு

காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,
   கருங்குரங் கின்வா லிலே
கட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற
   கழுதைதான் ஊச லாட

வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே
   வெறிகொண்ட சாதி யென்னும்
வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி
   மேதினி கலங்கும் வண்ணம்

வாணங்கொ ளுத்துகின் றான்என் பதும்வயிறு
   வளர்க்கும்ஆத் திகர்கருத்து.
மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும்
   வாலையடி யோடறுத்தால்

சேணேறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும்
   தீராத சாதி சமயத்
தீயும்வி ழுந்தொழியும் எனல்என் கருத்தாகும்
   திருவார்ந்த என்றன் நாடே.



( 20 )






( 25 )





( 30 )
மாதர்கள் விரதபலன்

பழங்கால அறைக்குளே பதினைந்து திருடர்கள்
   பதுங்கிடவும் வசதி யுண்டு
பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
   பதிந்திடவும் வசதி யுண்டு.

முழங்கள்பதி னெட்டிலே மாற்றமில் லாவிடினும்
   முன்றானை மாற்ற முண்டு.
முடுகிவரும் நோய்க்கெல்லாம் கடவுளினை வேண்டியே
   முடிவடைய மார்க்க முண்டு.

தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும்
   தொகைகேட்கும் ஆட்கள் வேண்டும்.
தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
   சுவருண்டு வீட்டில் இந்த

ஒழுங்கெலாம் நம்மாதர் வாரத்தின் ஏழுநாள்
   உயர்விரதம் மேற்கொள் வதால்
உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்டு
   உணர்ந்த என் அன்னை நாடே!


( 35 )





( 40 )






( 45 )

மலையிலிருந்து சோபனக் கட்டிலில்

சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்
   சுப்பனைக் காண லானேன்.
"தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே"
   என்றுநான் சொன்ன வுடனே

கோபித்த மாப்பிள்ளை "மதம் என்னல் மலையுச்சி
   நான் அதில் கொய்யாப் பழம்
கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்
   கோட்டமே" என்று சொன்னான்.

தாபித்த அந்நிலையில் அம்மாப்பி ளைக்குநான்
   தக்கமொழி சொல்லி அவனைத்
தள்ளினேன். மலையுச்சி மீதே யிருந்தவன்
   தன்புதுப் பெண்டாட்டியின்

சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன்.
   துயரமும் மனம கிழ்வும்
சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன்
   தூயஎன் அன்னை நாடே!

( 50 )





( 55 )





( 60 )



அந்தச் சுதந்திரம்
எந்த நாளும் உண்டு

மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்
   மறிக்கின்ற இந்து மதமும்,
மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்
   வாள்தூக்கும் மகமதி யமும்,

வாடவரு ணாச்சிரம மடமைக் கொழுந்தினை
   "மகாத்மீயம என்னும் நிலையும்
வழிபறிக் கும்தொல்லை இன்றியே "பொதுமக்கள்
   மதிப்பைப் பறித்தெறிந்து,

பாடின்றி வாழ்த்திட நினைத்திடும் பாதகப்
   பார்ப்பனர், குருக்கள் தரகர்,
பரலோகம் காட்டுவார என்கிற பேதமையும்
   பகைமிஞ்சு கடவுள் வெறியும்,

ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற
   அவ்வுரிமை நாளும் இங்கே
அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட
   அழகுசெந் தமிழ்வையமே!
( 65 )





( 70 )





( 75 )





( 80 )
பெண் குரங்குக்குக் கல்யாணம்

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி
   "பெண்வேண்டும் மகனுக கெனப்
"பெற்றபெண் ணைக்கொடேன் வளர்க்கின்ற பெணணுண்டு
   பேச்செலாம் கீச சென்றனன்.

"இருந்தால் அதற்கென்ன" என்னவே, எனதுபெண்
   "இரட்டைவால் அல்ல" என்றான்,
ஏழையண் ணாசாமி "மகிழ்ச்சிதான்' என்றனன்.
   "என்றன்பெண் கால்வரைக்கும்

கருங்கூந்தல் உணடென்ன ஏழையண் ணாசாமி
   கடிதுமண நாள்கு றித்தான்,
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
   கழுதையா? அல்ல, அதுதான்

பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவாற்
   பெட்டைக் கருங்கு ரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
   பெரியஎன் அன்னை நாடே!



( 85 )








( 90 )





( 95 )
கோயிலுக்கு

ஏசுநாதர் ஏன் வரவில்லை?

தலை, காது, மூக்கு, கழுத்துக், கை, மார்பு, விரல்.
   தாள், என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமிழைத்தநகை,
   தையலர்கள் அணியாமலும்,

விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
   வேண்டுமென்றே பாதிரி
விடுத்த ஓரு சேதியால் விஷமென்று கோயிலை
   வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பே யன்றி
   நீள்இமைகள், உதடு, நாக்கு
நிறைய நகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
   நிலைக்கண்ணா டியும்உண்டென

இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
   எல்லாரும் வந்துசேர்ந்தார்;
ஏசுநாதர்மட்டும் அங்குவர வில்லையே,
   இனிய பாரததேசமே!


( 100 )





( 105 )






( 110 )

கற்பின் சோதனை

கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
   கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
   கணவனின் வைப்பாட்டியும்

ஒப்பியே வந்தார்கள், கண்ணம்மை நோக்கினாள்
   " உடன் இப்பெண் யார் " என் றனள்
"உன்சக்க ளத்திதான என்றனன், கண்ணம்மை
   உணவுக்கு வழிகேட்டனள்.

"இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
   இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
   ஈந்துவா உணவெ"ன் றனன்.

அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை ஆயினும்
   அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
   அழகுசேர் அன்னை நாடே?

( 115 )





( 120 )





( 125 )



தலையுண்டு! செருப்புண்டு!

நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
   நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள்ள வும், தீ வளர்க்கவும் காற்றுதனை
   நெடுவெளியை அடைவ தற்கும்

பலருக்கு உரிமைஏன்? பறிபோக லாகுமோ
   பணக்காரர் நன்மையெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
   பறித்துத் தொலைத்து விட்டால்

நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
   நஞ்சுண்டு சாகட்டுமே!
நற்காற்று, வானம், நீர், அனல், பொது வடைந்ததால்
   நன்செயும் பொதுவே எனத்

தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
   தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப்பேஉண்டு
   தகைகொண்ட அன்னை நிலமே!
( 130 )





( 135 )





( 140 )





( 145 )
எண்ணத்தின் தொடக்கம்

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
   கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
   கொல்வித்த தமிழர் நெஞ்சும்,

படியேறும் சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
   பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
   பண்புசேர் தமிழர் நெஞ்சம்

கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
   கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
   கொலையுண்ட தமிழர் நெஞ்சம்,

துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
   தூயசுய மரியாதையாய்ச்
சுடர்கொண்டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
   தூயஎன் அன்னை நிலமே!





( 150 )





( 155 )





( 160 )