காதல் பாடல்கள்
போ என்றாள். பின், வா என்றாள்.
|
'வயலாள்
விரல்படினும்
மாசுபடும்
ஆப்பால்!
அயலாள் விரல்பட்ட
ஆள்நீ,
-- மயலாகி
நண்ணாதேபோ' என்றாள்.
நன்றென்றான்.
'இல்லை வா
கண்ணாளா' என்றாள்
கரும்பு.
(வயல் ஆள் -- வயலில் வேலை செய்து சேற்றிற் படிந்த
ஆள். கரும்பு -- கரும்பு போன்ற காதலி.) |
( 5 )
|
அழுதுகொண்
டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே.
அம்மா வருத்தப் பட்டாள் என்றே
அடுத்த சோலையில் தனித்து நின்றே
-அழுது
கொண்டிருந்தேனே
வழிமேலே விழியை வைத்தே
வஞ்சகனையே நினைத்தே
தொழுதிருந்தேன் பின்னால் வந்தே
தோளில் சாய்ந்தான் முகம் இணைத்தே
அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!
குறித்த இடம் இந்தப் புன்னை!
கோரிவந் தடைவான் என்னை!
மறித்துவேலை இட்டாள் அன்னை
வந்தேன் பெற்றேன் இன்பந் தன்னை.
அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!
புன்னைமரப் பந்தர் ஒன்றே
புன்னையின்கீழ்த் திண்ணை ஒன்றே
இன்னொன்றே என்றே அன்பன்
இட்டமுத்தம் இருபத் தொன்றே!
அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே!
மாலை போய் மறைந்த துண்டு
வாய்த்த இன்பம் தெவிட்ட வில்லை
காலை மட்டும் யாம்பயின்ற
கன்னல் தமிழ் மறப்பதில்லை.
அழுது கொண்டிருந்தேனே -- எனைச்
சிரிக்க வைத்துப் போனானே! |
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
|
தாய் வீடு
போய் விட்டாய் -- மானே
தனிவீ டெனைப்படுத் தும்பாடு காணாய்!
நாய்வீடு, நரிவீடு நீ இலாவீடு
நடுவீடு பிணம்எரிக்கும் சுடுகாடு!
தாய்வீடு
போய்விட்டாய்
சாய்வுநாற் காலியிற் சாயமுடியாது
தனியாகப் பாயிலும் படுக்கஇய லாது
வாயிலில் நான் போய்ப்போய் மீளவலி ஏது?
மனம்பட்ட பாட்டுக்கு முடிவென்ன ஓது?
தாய்வீடு
போய்விட்டாய்
முறுக்குசுட் டுக்கொண்டு வந்ததாய்ச் சொன்னாய்
முத்தமல் லால்வேறு கேட்டேனா உன்னை?
குறுக்கில் ஒருகணம் வீணாக்கி என்னைக்
கொல்ல நினைத்தால் நீ ஒரு செந்நாய்!
தாய்வீடு
போய்விட்டாய்
எனக்கும் உனக்கும் இடையிலே சிறிதே
இடுக்கிருந் தாலும் துன்பம் பெரிதே.
அனுப்பு கின்றனை முல்லைச் சிரிப்பை
அதனால் என்மேல் சொரிந்தாய் நெருப்பை!
தாய்வீடு
போய்விட்டாய் |
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
|
சொந்த வீட்டைவிட்டு வெளியேறுகின்ற
நைந்த உள்ளம் பாடுகின்றது
|
அழகிய
இல்லமே பழகிய செல்வமே
அஞ்சுமே உனைப்பிரிய நெஞ்சமே!
அண்டி இருக்க ஆசை மிஞ்சுமே!
அழைத்தால் வருவாயோ அன்பே புரிவாயோ
ஆடிப்பா டிக்கிடந்த கூடமே!
அன்றாடம் நான்படித்த பாடமே!
பெற்றனை அன்னையே! வளர்த்தனை என்னையே
பிள்ளைதா யைப்பிரியக் கூடுமோ?
பிரிந்தால் மனம்ஒன்றிலே ஓடுமோ?
கற்சுவர்க்கட் டிடமே கண்ணே வண்ணப் படமே
கல்லெல்லாம் என்னைக்கண் காணிக்கும்
கண்ணைப்பறிக் கும்ஒவ்வொரு மாணிக்கம்.
தெற்கில் இருந்தனை தென்றல் பயின்றனை
தேடக் கிடைக்காத குன்றமே!
சீராய் அமைந்த மணிமன்றமே!
கற்றேன்உன் மடியிலே வாழ்ந்தேன் உன்இடையிலே
கண்கள் மறந்திடுமோ உன்னையே?
கணமும் மறப்பதுண்டோ என்னையே?
சொந்தஎன் வீடென்றால் செந்தமிழ் நாடன்றோ?
தொல்லை கடத்துகின்ற ஓடமே!
தூய்மை உடைய மணிமாடமே!
சந்தை இறைச்சலோ சாக்கடை நாற்றமோ
சாரா இடத்தில்அ மைந்தனை
சந்தனம் பன்னீர்க மழ்ந்தனை! |
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
|
போனால்
போகட்டுமே -- பசும்
பொன்னா யிருந்தவன்
பித்தளையாய் அங்கே
போனால்
போகட்டுமே.
ஆனாலும் என்றன் அன்பை மறந்தான் -- அந்த
ஆந்தைக் கூட்டிற் புறாவாய்ப் பறந்தான்
ஊனாய் வற்றிய பசுவைக் கறந்தான் -- அவன்
உள்ளன்பிலாதவளால்சீர் குறைந்தான்.
போனால்
போகட்டுமே.
வாழ்கையி லே பங்கு கொண்டவள் நானா -- அன்றி
வரவுக்கோர் இரவென்னும் அம்மங்கைதானா?
தாழ்வுற்ற நேரத்துத் தளர்ச்சியுற்றேனா -- அவன்
தழைத்திருந்த போதும் தலைநிமிர்ந்தேனா?
போனால்
போகட்டுமே.
காலிற்பட் டதுரும்பென் கண்ணிற்பட்ட இரும்பு -- தான்
கடிந்து பேசினாலும் அதுஎனக்குக் கரும்பு.
தோலுக்குப் பிறக்குமா தேனீஎன்னும் சுரும்பு?
சோலையிலன்றோ இருக்கும்முல்லை அரும்பு?
போனால்
போகட்டுமே. |
( 85 )
( 90 )
( 95 )
|
இரண்டடிதான்
வாழ்க்கைத்துணை
என்றானே -- என்னை
ஏரெடுத்துப் பார்க்காமலே
சென்றானே.
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
கூத்துண்டா -- அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
கற்கண்டா?
(இரண்டடிதான்)
மேகலையும் கையுமாக
வாழ்கின்றான்--என்
விருப்பம் சொன்னால்
சீறி
என்மேல்
வீழ்கின்றான்
சாகையிலும் அவன்
அகமே
தாழ்கின்றான்--அவன்
தமிழ்மடந்தை புறப்பொருளே
சூழ்கின்றான்.
(இரண்டடிதான்)
தமிழ்மணத்தில் என்னையும்வை
என்றேனே -- அவன்
தனிமனத்தில் இருநினைவா
என்றானே.
தமியாளும் இந்தி அன்றோ
என்றேனே -- நான்
தமிழனடி என்று சொல்லிச்
சென்றானே
(இரண்டடிதான்) |
( 100
)
( 105 )
( 115 )
( 120 )
( 125 )
|
பாலைப்
பருகும் மடியிற் குழந்தை
சேலைப் போல்விழி
திறந்துதன் தாயை
நோக்கிச் சிரித்தது!
கண்ட அன்னை
உன்னால் அல்லவா
உன்றன் தந்தை
இரவில் என்னை
அணுகாதிருந்தான்,
எந்த நேரமும்
எனைப்பிரியாதவன்
ஐந்தாறு திங்கள்
அகன்றனன்! யாரால்?
காதல் வாழ்வை
கத்திகொண்டு அறுத்தாய்,
மோதல் வாழ்வை
முன்னின்று நடத்தினை
என்று முனிந்தே
இருகை யாலும்
கீழடிப் பாள்போல்
மேலே தூக்கி என்
போராய்க் குவிந்த
பொன்னே, வாராய் என்று
மார்பணைத்தனளே! |
( 130 )
( 135 )
|
முல்லை
எனை நகைக்கும்; மூன்றுதமி ழும்தெவிட்டும்
தொல்லைமிக விரிக்கும்
தோகைமயில்! -- சொல்லை
வெறுப்பேற்ற பேசும் கிளிதான்: என் காதற்
பொறுப்பேற்றான் வாராத போது.
தென்றல் புலிபோலச் சீறும் மலரிலுறு
மன்றல் பிணநாறி
மாற்றமுறும் -- குன்றல் இலாத்
தீப்போல்வான் தோன்றுநிலா! சேயிழைநெஞ் சக்குளத்திற்
பூப்போல்வான் வாராதபோது.
பாலும் புளிக்கும்நறும் பண்ணியங்கள் வேப்பங்காய்.
தோலும் எரியவைக்கும்
தோய் கலவை! -- மேலும்
அலவனார் ஆர்கலியும் கொல்லும்! என் காதற்
புலவனார் வாராத போது.
வண்டு வசைபாடும்! மாங்குயிலும் வாயாடும்!
மண்டுகுளிர் சோலை
எரிமலையாம் கண்டுவக்க
மின்னா வான் மீன் எல்லாம்! மெல்லி வறுமைக்குப்
பொன்னாவான் வாராத போது.
பஞ்சும் பரப்பிய பூவும் படுநெருஞ்சி!
கொஞ்சும் என்பாங்கி
கொலைகாரி! -- நஞ்சுமிகும்
தீண்டவன் பாம்பு அதுதான் தேமலர்த்தார்! என் அன்பு
பூண்டவன் வாராத போது. |
( 140
)
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
|
உயிரே
பிரிந்தால் உடல்வா ழாது
வெயில்நுதல், அயில்விழி,
வெண்ணிலா முகத்து
நேரிழை தனையும் நீர்
அழைத் தேகுக
என்றேன் நீ அதற்கு இயம்பியது
என்ன?
உப்பு வாணிகர் ஒன்றிப்
பிரிந்த
வெப்பு நிலம்போல் விரிச்சென்ற
ஊர்போல்
இருக்கும் பாலை நிலத்தில்
என்னுடன்
மருக்கொழுந்தும் வருவதோ
என்று
தனியே செல்வதாய்ச்
சாற்றினீர்! உம்மை
மாது பிரிந்து வாழும்
வீடுதான்
இனிதோ சொல்க என்று
துனிபொறாது சொன்னாள்
தோழியே.
( துனி-துன்பம் )
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய
தலைவன் பாலை நிலம் இவள் வருவதற்கு உரியதன்று.
இன்னாமை யுடையது என்றுகூற, தலைவரைப் பிரிந்தார்க்கு
வீடுமட்டும் இனிமை உடையதோ என்று வினவு முகத்தால்
தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி
அறிவித்தது)
(பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடிய குறுந்தொகை
124-ஆம் பாட்டைத் தழுவியது.) |
( 165
)
( 170 )
( 175 )
|
அலமேல்(உம்)
அலமேல்(அந்த) அலமேல்--அவள்
ஆசைப்பட்டாள் மாணிக்கத்தின் மகன் மேல்!
குலுக்கு(உம்) குலுக்கி(உடல்) குலுக்கி--அந்தக
குப்பைனையே நேறில் கண்டாள் சிறிக்கி!
மாமா(உம்) மாமா(ஓ) மாமா--என்னை
மணந்து கொள்ள அட்டி சொல்லலாமா?
ஆமாம்(உம்) ஆமாம்(பெண்ணே) ஆமாம்--மெத்த
அன்புக்குடித்தனம் செய்வோமே நாம்.
சிரித்தான்(உம்) சிரித்தான்(அவன்) சிரித்தான்--அவன்
சிவந்த உதட்டுப் பழக்கத்தின் சாறு சுவைத்தான்.
திருநாள்( உம்) திருநாள்--ஊம்
தெரிந்த பாக்கு வழங்கியதே மறுநாள்! |
( 180 )
( 185 )
|
-
சின்னவள்
மேலவனுக் காசை -- நான்
சிரித்தாலும் விழுந்திடும் பூசை! (சின்ன)
கன்னத்தில் அவளுக்கே முத்தங் கொடுத்த ஓசை -- என்
காதல் விழுந்ததென்று துடிக்கும் அன்னவன் மீசை!
பொன்னென்பான் கண்ணென்பான் அவளை -- அவளோ
பொத்தலான ஈயக் குவளை!
தின்று கிடக்கஎண்ணி வந்துவாய்த்தவளை -- ஒரு
தென்பாங்கு பாடென்று கெஞ்சும் இந்தத் தவளை. (சின்ன)
வயிர அட்டிகை, காசு மாலை -- நல்ல
வகைவகை யான பட்டுச் சேலை -- அந்த
மயிலுக்கு வாங்கிவந்து போடுவதவன் வேலை
வாராய் சாப்பிட என்றால் உரிப்பான் எனது தோலை. (சின்ன)
என் நிலைக்கு நான் அழ வில்லை -- நாட்டில்
எத்தனை பெண்கட் கிந்தத் தொல்லை!
கன்னி ஒருத்திதான் ஒருவனுக் கென்னும் சொல்லை
கட்டாயம் ஆக்கினார் ஏதென் மகிழ்ச்சிக்கு கெல்லை. (சின்ன)
அறுபதி னாயிரம் பெண்டாட்டி -- மாரை
அடைந்தானாம் முன்னொரு காமாட்டி -- பெண்கள்
குறைபா டெல்லாம் இன்று தீரச் சட்டந் தீட்டிக்
கொடுத்த அரசுதன்னைக் கும்பிட்டேன் பாராட்டி! (சின்ன)
|
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
|
ஆயினும் அவர்கள்
என்அக்கா அத்தான்,
நாயினும் கேடாக என்னை மதித்தார்கள்.
அவமானச் சேற்றிலே என்னை மிதித்தார்கள்
ஆயினும் அவர்கள் என்
அக்கா, அத்தான்.
கோயிலில் தமிழ்ப்படும் பாடு -- நான்
இவர்களாலே பட்ட பாடு -- தந்தை
தாயாய் எண்ணியதோடு -- பொருள்
தந்ததும் கொஞ்சமோ திரும்பினேன் வீடு!
ஆயினும் அவர்கள் என்
அக்கா, அத்தான்.
இரும்புதானோ இவர்கள் நெஞ்சம் -- அவர்க்கு
என்மீதில் ஏணிந்த வஞ்சம்?
வரும்போது வாஎன்று கொஞ்சம்
மகிழ்ச்சிக்குமா வாயில் செந்தமிழ்ப் பஞ்சம்?
ஆயினும் அவர்கள் என்
அக்கா அத்தான். |
( 210 )
( 215 )
( 220 )
|
வாரும்
கண்ண பிரானே -- எங்கே
வந்தீர் கண்ண
பிரானே?
சேரும் கோபிகை
மார்கள் -- இருப்பார்
செல்லும் கண்ணபிரானே!
மெல்ல (வாரும்...)
வந்த முகவரி தப்பு
-- பொது
மகள் இவளெனும்
நினைப்பு;
செந்தமிழ் நூற்படிப்பு
-- இருப்பார்
சிறிதுமில்லாதது
வியப்பு! சும்மா (வாரும்...)
ஒருத்தியை மணந்த
பின்பு -- வே
றொருத்தியிடத்திலா
அன்பு? -- இது
பொருத்தமா அறத்தின்
முன்பு? -- ஏ
புதிய தமிழரே,
போவீர் எழுந்து. சும்மா (வாரும்...) |
( 225 )
( 230 )
( 235 )
|
பொழுதும்
விடியவில்லை
பொற்கோழி கூவவில்லை
வழிபார்த்த விழியேனும்
மறந்தும் உறங்கவில்லை
பழிகாரன் வருவது
திண்ணமா? -- இல்லை
பாவை என்னைக்
கொல்ல எண்ணமா?
விளக்கிலுற நெய்
இல்லை
வெள்ளி முளைக்கவில்லை
களம் காப்பவன்
குறட்டை
காதுக்குப் பெருந்தொல்லை
இளக்காரம் இத்தனை
ஆயிற்றோ? -- காதல்
ஏரியின் நீர்வற்றிப்
போயிற்றா?
கிளியும் விழிக்கவில்லை
கிட்ட எவரும்
இல்லை
உள்ளத்தில் அமைதிஇல்லை
உறவும் அழைக்கவில்லை
துளிஅன்பும் என்மட்டில்
பஞ்சமா? -- என்
தோழன் தனக்கிரும்பு
நெஞ்சமா?
மறக்க முடியவில்லை
வாழ்வில் மகிழ்ச்சிஇல்லை
இறக்கவும் மனம்
இல்லை
இருந்திடில் இந்தத்
தொல்லை
பெறத்தகு மோஅவன்
வரவு? -- வரப்
பெற்றால் கழியும்
இந்த இரவு! |
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
|
முல்லை மலர்
கேட்டேன்
இல்லை என்று சொல்லாமல்
முடித்துக்கொள் என்றாரடி தோழி!
கொல்லையில் வளர்ந்தாலும்
புல்லில் மணமிராதே;
கொடுந் தொலைவில் அடர்ந்து
படர்ந்து கிடந்த நறு (முல்லை மலர் கேட்டேன்)
மாங்கொம்பைத் தழுவிக் கொண்டிருக்கும் -- இந்த
மலர்க் கொடியை அறுப்பார் உண்டோ?
பூங்காட்டில் உலவிடும் வண்டைப் 'போ
போ' என்றார் என்னபயன் கண்டார்?
தூங்கா விளக்கும் சுடருக்கும் ஏற்பட்ட
தொடர்பை அறுப்பதாலே இடர் வந்து சேராதோ?
(முல்லை மலர் கேட்டேன்
|
( 260 )
( 265 )
( 270 )
|
Untitled Document
இருந்தபடி
என்றன்
நெஞ்சை இழுக்கும்
இருவிழி இன்பம்
செய்யும் எனில் அவர்
திருந்துபடி ஓவியன்
தீட்டிய
ஓவச்
சேயிழை தன்னை
திரும்பிப்
பார்க்கும்
அவ்விரு விழியேதுன்பம்
செய்வன!
எவ்வகை
உய்வேன் தோழியே!
ஓவச்சேயிழை-பெண்ணின்
படம்
உய்வேன்
-பிழைப்பேன்
|
( 275 )
( 280 )
|
தலைவன் கூற்று:
வாட்டம் ஏன் என்று
கேட்ட
பாங்கனே,
கேட்கஎட் டாம்பிறை
கடலில்
கிளைத்தல்போல்
கரிய கூந்தல்
அருகில்
தோன்றிய
ஒருத்தியின் நெற்றி
பிணித்தது
-- என்
கருத்தோ கடிது
பிடிபட்ட
யானையே! |
( 285 )
( 290 )
|
கருத்து-உள்ளம்
கிளைத்தல்-தோன்றுதல்
|
தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக்
கண்ட பாங்கன் 'நினக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக்
காரணம் யாது' என்றவழி ஒரு மங்கையது நுதல் என் உள்ளத்
தைப் பிணித்தது என்று தலைவன் கூறியது,
(கோப்பெருஞ்சோழன்
பாடிய குறுந்தொகை 129-ஆம்
பாட்டின் தழுவல் இது) |
( 295 )
|
தலைவி கூற்று:
கிளி உண்ட தனால்
கதிரிழந்து
கிடந்த
தினைத்தாள் செத்துப்
போகாது;
நல்ல
மழைவர இலைவிட்
டதுபோலே
என்
புதுநலம் உண்டதாற்
போகும்என்
நல்லுயிர்,
வருவார் என்னும்
நினைவால்
இருந்தது தோழி
என்றாள்
தலைவியே.
தலைவர்
அருள் செய்வார் என்று இன்னும் உயிர் தாங்கி
நிற்கிறேன் என்று தோழிக்குத் தலைவி சொன்னது.
உறையூர் முதுகண்ணன் சாத்தன் பாடிய குறுந்தொகை
133-ஆம் பாட்டின் தழுவல் இது.
|
( 300 )
( 305 )
|
தோழி கூற்று:
காந்தளின் இதழ்க்கதவு
திறக்கும்
வரைக்கும்
காத்திராது வண்டு
பாத்திறம்
காட்டத்
தக்கோர் வருகை
கண்டெதிர்
கொண்ட
மிக்கோர் போல
மெல்லிதழ்
திறந்தது.
அத்தகு சிறந்த
மலையுடை
அன்னவன்
நல்ல நெஞ்சம்
உடையவன்
என்க;
பெருமணம் புரியாது
பிரிந்ததை
உன்னிக்
கதறும் உன்நிலை
கதறினேன்
மணக்கவே என்றான்
மற்றவன்
நாணியே.
(திருமணச்
செலவுக்கும் திருமணம் ஆனபின் வாழ்க்கைச்
செலவுக்கும் பெரும் பொருள் வேண்டும் அல்லவா? அதற்காகத்
தான் தலைவன் பிரிந்தான். அது தெரியாமல் தலைவி வருந்தினாள்.
அவனுக்குத் தோழி சொல்வது இது.
கருவூர் கதப்பிள்ளை அருளிச் செய்த குறுந்தொகை 265-ம்
செய்யுள், அதன் கருத்தைத் தழுவி எழுதப்பட்டது.
வண்டு பாடினால் அரும்பு மலரும் என்ற உண்மை இப்
பாட்டால் தெரிகின்றது.)
|
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
|
சேவலைப் பிரிந்த அன்றில் பேடு
|
ஏண்டி
போனார் திருவரங்கம்? -- அவர்
என்னாசைத் தங்கச்
சுரங்கம்!' ஏண்டி போனார்?
என்
வேண்டுகோளைத் தாண்டி
-- மலை
தாண்டி, ஆற்றைத் தாண்டி
அவர் ஏண்டி போனார்?
நான்
எட்டிப் பிடித்த வட்டநிலா
-- நல்ல
இனிப்பினிலே பழுத்த
பலா!
வட்டி கொடுத்தாலும்
வாராச் செல்வம்
வாழ்ந்த வாழ்வும்
இந்த மட்டிலா? ஏண்டி போனார்?
அவரும் நானும் பூவும்
நாரும்
பிரிந்த தில்லை நொடி
நேரம்;
எவர்க்குத் தெரியும்
திருவரங்கம்!
இங்கிருந்து பத்துகாத
தூரம் ஏண்டி போனார்?
அன்றில் பறவை பிரிந்ததில்லை,
ஆண் பிரிந்து பெண்
வாழ்ந்ததில்லை,
என்ற சேதி தெரியாதா?
-- நான்
எப்படிப் பொறுப்பேன்
இந்தத் தொல்லை?
ஏண்டி
போனார்?
[மாமி
அழைத்தாள் என்று சென்று திரும்பிய தலைவியிடம்
தோழி, உன் துணைவர் திருவரங்கம் போயிருக்கிறார்
என்று கூறிய அளவில், தலைவி தோழியிடம் வருந்திக் கூறிய
பாட்டு இது.]
|
( 330 )
( 335 )
( 340 )
|
எவை
இருந்தால் என்ன?
அவள் இல்லையே!
|
மணமும் தென்றலும்
குளிரும் வாய்ந்த
மாலையும் சோலையும் இருந்தும் பயனில்லை;
குணமும் அழகும் வாய்ந்தான் காதல்
குயில்இங்கிருந்தால் ஒருகுறையும்இல்லை. (மணமும்)
அணங்கும் நானும் ஒன்றாய் இருந்தே
அடைந்தால் பெருமை அடையும் நறுமணம்
பிணத்திற்கு நலம்ஒரு கேடா, அவளைப்
பிரிந்த எனக்கு மணமா குணம்தரும்? (மணமும்)
ஒன்றில் ஒன்று புதையும் முகங்களைச்
சேராமல் செய்யும் கோடைக் கொடுமையைத்
தென்றல் காற்றுக் குளிர்செய்யும் ஆயினும்
சேயிழை இல்லை, பயன்ஒன்றும் இல்லை. (மணமும்)
தனிமையில் எனக்கா இன்பக்கண் காட்சி?
தளிர்ஆல வட்டம் என்ஒரு வனுக்கா?
இனிய பொன்மேடை அவளுடன் நானும்
இருந்தின்பம் அடையவே; அதுவன்றோமாட்சி! (மணமும்) |
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
|
அன்பே
உடலுயிர்
ஆக்கும்
போலும்!
அன்பே காதல்
ஆகும் போலும்!
கழறும் அக் காதல்
வலியது
போலும்!
மதின்மேல் இருந்த
வரிஅணிற்
காதலி
கிரிச்சென்று தன்னுளம்
கிளத்திய
அளவில்
வான்கிளை யினின்று
மண்ணில்
வீழ்ந்த
சிற்றணிற் காதலன்
செத்தொழி
யாமல்
வில்லெறி அம்பென
மரத்தில்
ஏற
இரண்டும் காதற்
படகில்
ஏறின;
இன்பக் கடலின்
அக்கரை
எய்தின,
அதோ என் காதலி
கைக்குழந்தை
மதியை வாஎன்று
அழைத்தது
பாடியே! |
( 365 )
( 370 )
( 375 )
( 380 )
( 385 )
|
பொழுது மலர்மணம்
மருவி -- நம்மேல்
ஒழுகும் தென்றல் அருவி!
பொழுது மலர்மணம் மருவி!
பொழிலிடை தழையெலாம் அசையப்
பொன்னிறப் பறவைமெய் சிலிர்க்கப்
பொழுது மலர்மணம் அருவி!
எழுதஒர் உருவிலாக் காற்றால் -- நமக்
கின்பமே தான்குளிர் ஊற்றால்!
கழைமொழி மங்கையார் உறவும் -- குளிர்
காற்றுக்கு நிகரில்லை அன்றோ!
பொழுது மலர்மணம் மருவி! |
( 390 )
( 395 )
( 397 )
|
|
|
|