பக்கம் எண் :

குயில் பாடல்கள்

குயில்


மின்னும் கருமேனி விண்ணில் மிதப்ப, இரு
சின்னஞ் சிறுவிழியாம், செம்மணிகள் நாற்புறத்தும்
நோக்க, விரைந்து, கதிரும் நுழையாத
பூக்கமழும் சோலை புகுவது கண்டேன்;
கூக்கூ எனும்அக் குயிலின் குரல்கேட்டேன்;
ஆக்காத நல்லமுதோ! அடடாநான் என்சொல்வேன்!
விட்டுவிட் டொளிக்குமொரு மின்வெட்டுப் போல்நறவின்
சொட்டொன்று ஒன்றாகச் சுவையேறிற்று என்காதில்.

கருநெய்தற் காட்டரும்பு போலும் குவிந்த
இரண்டலகு தம்மிற் பிரிந்து குரல்எடுக்க
வாயிற்செவ் வல்லி மலர்கண்டு நான் வியந்தேன்!

ஓயாது சுற்றுமுற்றும் பார்க்கும் ஒளிக்குயில்நான்
இவ்வுலகம் இன்னல் நிறைந்ததென எண்ணிற்றா?
எவ்வலியும் தன்னிடத்தே இல்லைஎன அஞ்சிற்றா?

மாவின் கிளையை மணிக்காலால் தான்பற்றிப்
பாவின் இனிமைதனைப் பாரோர்க்குப் பாச்சுகின்ற
நேரத்தில், தன்விழியின் நேரிலுள்ள மாந்தளிரை,
ஆர அருந்தத் தொடங்கும் அவாவோடு.

பொன்னாய்ப் பொலியும் தளிரும், புதுமெருகில்
மின்னாய் மிளிர்கின்ற மென்தளிரும், பிள்ளைகளின்
மேனி எனப்பொலியும், மிக்கொளிசெய் நற்றளிரும்
ஆன கிளிச்சிறகின் ஆர்ந்த பசுந்தளிரும்,
கொத்தாய் இருக்கும், குயிலலகுச் சாமணத்தை
வைத்தெடுத் துண்ணும்; பின்தத்திப் பிறிதொருபால்
வேறு தளிர் பார்க்கும்; இடையிடையே, மேல்கரும்பின்
சாறுநிகர் பாடல் தரும், தன் இறகடித்து
மற்று மொருகிளைக்கு மாறும், மறுநொடியில்
முற்றிலும் அஞ்சும், மகிழும் முடிவினிலே,
சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம்
தூய்மை மிகுபண்பொன்று கேட்பீர்; சுவையைப்
படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே
குடியிருப் பொன்றில்லாக் குயில்!




( 5 )





( 10 )






( 15 )





( 20 )




( 25 )




( 30 )

நமது குயில்

செந்தமிழ் நாடு சிறப்புறுதல் வேண்டுமெனில்
நந்தமிழை நாம்மீட்க வேண்டுமன்றோ? -- முந்தாத
நெஞ்சும், விழியும், நிலைகண் டெழும்வண்ணம்
கொஞ்சும் நமது குயில்.

அண்டை மொழிகள் சலுகைபெற, ஆவிநிகர்
பண்டைத் தமிழ் வருந்தப் பார்ப்போமா? -- அண்டுமலர்க்
காவும், தமிழர் கருத்தும், களிதுள்ளக்
கூவும் நமது குயில்.

அயலான்நம் செந்தமிழை ஆளுவது நீங்க
முயலா திருத்தல் முறையோ? -- மயல்நீக்கி,
ஊட்டும் உணர்வூட்டி, ஒன்றாய்த் தமிழர்களைக்
கூட்டும் நமது குயில்.

வடமொழியால் செந்தமிழை மாற்றும் கொடுமை
படமுடியா தன்றோ இப்பாரில்! -- கொடியார்க்கு,
மொட்டு மலர்ந்ததென முத்தமிழ்ச்சீர் வாய்திறந்து
கொட்டும் நமது குயில்.

ஆண் என்ப, பெண் என்ப, அந்தமிழ்ச்சீர் ஆயாதார்,
நாண்என்ப தின்றி நடப்பதுவோ? -- வீணாள்
கழிக்கும் தமிழரின் காதில், தமிழ்சீர் கொழிக்கும் நமது குயில்.

நிலைச்சொல் தமிழருறு நீள்தமிழ் நாட்டில்
கலைச்சொல் வடமொழியிற் காண -- அலைச்சல் ஏன்?
ஆண்ட தமிழர் அடிமைபெற, வேற்றுவர்கள்
பூண்டபெருஞ் சூழ்ச்சி பொறுப்பதுண்டோ? -- துண்டா
தவிக்கும் அவர்க்கே, அறம்பாடிப் பாடிக்
குவிக்கும் நமது குயில்.

இந்தியினைக் கட்டாயம்ஆக்கி, இனிதான
செந்தமிழை ஈடழித்தாற் சீறோமோ? -- இந்த
அடுக்கும் செயலிலர்க்கே ஆட்சிமுறை சொல்லிக்
கொடுக்கும் நமது குயில்.

மாட்சி தமக்குரித்து; வண்டமிழர் கூட்டமோ
காட்சிக்கே என்று கதைப்பதுண்டோ -- ஆட்சி
பறிக்கும் உளத்தார்க்குப் பண்பிதுதான் என்று
குறிக்கும் நமது குயில்

செந்தமிழ்நாட் டாட்சிபெற்றுச் செம்மைத் திராவிடத்தில்
முந்தும் குறைகள் முடிக்கோமோ? -- வந்து நமைச்
சீறும் பகைவர்க்குச் செந்தமிழர்க் கைத்திறத்தைக்
கூறும் நமது குயில்.


( 35 )





( 40 )






( 45 )





( 50 )







( 60 )






( 65 )





( 70 )

தென்றலின் குறும்பு

இழுத்திழுத்து மூடுகின்றேன்
எடுத்தெடுத்துப் போடுகின்றாய்,
பழிக்க என்றன் மேலாடையைத் தென்றலே -- உன்னைப்
பார்த்துவிட்டேன் இந்தச்சேதி ஒன்றிலே

சிலிர்க்கச் சிலிர்க்க வீசுகின்றாய்,
செந்தாழைமணம் பூசுகின்றாய்
குலுங்கி நடக்கும் போதிலே என் பாவாடை -- தனைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச்செய்தாய் தென்றலே!

வந்து வந்து கன்னந் தொட்டாய்,
வள்ளைக் காதில் முத்தமிட்டாய்,
செந்தாமரை முகத்தினை ஏன் நாடினாய்? -- ஏன்
சீவியதோர் கருங்குழலால் மூடினாய்?

மேலுக்குமேல் குளிரைச் செய்தாய்,
மிகமிகக் களியைச் செய்தாய்,
உள்ளுக்குள்ளே கையைவைத்தாய் தென்றலே -- என்
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் தென்றலே!


( 75 )





( 80 )






( 85 )


கோழிப் போர்

ஆர்த்தது கோழி போர்க்களத்தே!
அணுகுண்டெல்லாம் என் கணுக்காலின் கீழே,
அறந்தவறேன் போர் அறந்தவறேனென்றே. (ஆர்த்தது)

பாருக்கொரு வேந்தன்
தேருக்கொரு பாகன்தான்!

பார் என்றெதிர்த்த மற்றொரு கோழி
ஓரடி வாங்கி, மற் றோரடி தந்தது மார்பில். (ஆர்த்தது)

எற்றும் கோட்டு முட்கள்
ஈட்டிக்கோர் ஈட்டி -- ஒன்று

சிறந்த கழுத்துக் கிழிந்தும் எதிர்த்தே
இறந்தது, தன்புகழ்க் கிலக்கியம் வைத்தே! (ஆர்த்தது)

( 90 )






( 95 )





சேவல் போர்

போரிடுகின்றன! போரிடுகின்றன!
கார்நிறச் சேவலும் கதிர்நிறச் சேவலும்
போரிடுகின்றன, போரிடுகின்றன.

தலையைத் தாழத்தின; தம் கழுத்துச் சிறகு
சிலிர்த்தன; குறிபார்த்துச் சினவிழி எதிர்த்தன;
தெருவெல்லாம் செந்தூள் சிதறச் சிதறப்
போரிடுகின்றன ஓரிரு சேவலும்!

அடடே! அடடே! அராவிய இரும்பென,
எடுத்த முள் தூக்கி அடித்த காலை
ஊன்றுமுன் எதிரிகால் உயர்ந்தடித்தது!
குருதி நனையுடல் கருதாது புகையுயிர்
பருகுவதொன்றே கருதிச் சலியாது
போரிடுகின்றன பொன்விழிக் கோழிகள்.

கதிர் நிறச் சேவலா? கார்நிறச் சேவலா? எதுவெற்றி பெறும் என்றேன் நெஞ்சை!

அரசினர் சலுகை அடைந்தவர் வெல்வார்.
அஃதிலார் அஞ்சுவர் ஆதலால், தோற்பர்
என்றதென் நெஞ்சம்! ஏஏ அரசியல்
ஒன்று மில்லா உண்மை உலகத்து
மறப்போர்; இது எனல் மறந்தனை நெஞ்சே.

மேலும், அவ்வுலகில் ஏலும் அரசினர்
தம்செல்வாக்கை தம்மவர்க்காக்கி
வஞ்சம் புரிவதும் கொஞ்சமும் இல்லையே.
என்றேன்! ஆமாம் இவை மக்களல்ல
என்றது! போரிடுகின்றன சேவல்கள்.

பகையின் இறக்கைகள் புகுத்திய கழுத்தால்
எதிர்ப்புறம் தள்ளி இருகாற் படையை
உரத்திற் பாச்ச ஏங்கும் போதே
வலப்புலம் விலகி வரட்டும் அதன் பகை!

குறுநெஞ்ச மக்கள் கொண்ட போர்க்கிடையில்
பெருமையும் வசையும் பேசுவர் அன்றோ!
குரலினை மூச்சோடு கூட்டி, விரைவில்
சிறப்பதும் இறப்பதும் தெரிதல் வேண்டிப்
போரிடுகின்றன பொய்யிலாப் பறவைகள்!

குழைந்த செம்பரத்தைபோல் கொண்டை, செந்நீர்
பொழியவும், தாடி கிழியவும், இறக்கை
விரித்துக் குதித்து, மின்வெட்டுப் போலும்
தெருள்மெய்ப் புண்ணின் குருதி யருவிச்
சேற்றில் தங்கள் ஆற்றல் கொண்டமட்டும்
காற்றில் சிறகு கழன்று பறக்கப்
போரிடுகின்றன!

அடடா! ஒன்றின் நெடிய கழுத்தில்
கொடியமுள் பாயக் குரல்வளை கிழிந்தது!
கதிர் விழுந்தது! கதிர் இறந்தது!
புதுப்புகழ் உலகு புக்கது! கார்நிறம்
நற்கழுத்து உயர்ந்து வளைத்தது
வெற்றி முரசொலி விளைத்தது ஆங்கே!
( 100 )





( 105 )





( 110 )






( 115 )





( 120 )





( 125 )





( 130 )




( 135 )




( 140 )





( 145 )
கலை எது? கலைப்பொருள் எது?

சேற்றிலே தூரியம் செலுத்தி, அள்ளி
வீட்டுக் குறட்டில் விளையாட் டாகக்
கலைஞனாம் ஒருவன் கடிதொன்று வரைகையில்,
"அடடே, தூய்மை அழிந்ததே" என்றே
எரிச்சலோடே அவனிடம் ஏக, அக்
குறட்டில் "குச்சு நாய் வாலைக் குரங்குபற்றி
இழுப்பதைக் கண்டேன், எழுதியோன் இழிசெயல்,
சேறு, தூரியம், சொறிந்த என் எரிச்சல்,
இவை அனைத்தும் என் நினைவில் இல்லை.

எது எனை இவற்றை மறக்கச் செய்தது?
குரங்கா? நாயா? அல்ல; இவற்றை
ஆக்கிய திறம் அதுவே "கலை!"
பார்க்கும் குரங்கு, நாய் பகர் "கலைப் பொருள்களே"



( 150 )




( 155 )



இந்த ஆட்டு மயிரா அந்த அழகிய கம்பளி

வெண்ணெயை அள்ளி அப்பிய வெண்மயிர்
ஆட்டு மந்தையை ஓட்டி வந்தவன்,
கடையிற் கம்பளிப் போர்வைகள் கண்டான்
தொட்டாற் பட்டே! தோற்றமோ கதிரொளி!

"ஆட்டுமயிர் இப்படி ஆன தருமை"
என்றான் இடையன்! குப்பன் இயம்பினான்:

"தொழி லாளிகட்கும் முதலா ளிக்கும்
இடையிடை வேலை நிறுத்தம் இலாமல்
அவர்கள் ஒற்றுமை அடைந்தார். அந்த
அருமையின் விளைச்சலே, அழகைச்
சொரியும் இந்தக் கம்பளத் தொகுதியே!"
( 160 )





( 165 )





( 170 )
திருடர்-திறந்த வானிலும் புகுவர்

திறந்த வானம்! அவ்வான் நிறைய
இறைந்த முத்தும் மணிகளும் சிந்திய
வயிரத்து வாய்ந்த தட்டும் கிடந்தன!

இந்த வானத்துக் குடையவர் யாரோ?
கதவே இல்லை! உறங்கும் விழியரும்பு
பூக்க வில்லை புதுவையைப்போல,

வீட்டுக் குடையவர் விழிக்க வேண்டும்
இந்தியா ஆள்வோர் இருக்கின்றார்கள்,
அன்பிலா தவர்அவர்; அறமறி யாதார்.

திறந்த வானில் இறைந்த மணிகளை
வயிரத் தட்டொடு மடியில் கட்டுவர்,
வானிலும் புகுந்து வம்பு வளர்ப்பவர்,
கூட்டுக் கொள்ளைக் காகக் கூடவே
இருக்கும் பார்ப்பனர் இரும்புக் கரண்டிகள்,
மக்கள் உரிமையைச் சுரண்டித்
திக்குமுக்காடச் செய்வர் அன்றோ?





( 175 )






( 180 )



( 185 )
புதுப்படைப்பு

என் வீட்டிற்கும் எழிற் கடற்கரைக்கும்
இடையில் அரைக்கல் தொலைவே இருக்கும்.

மிதிவண்டி பொருத்திய புதுவண்டி ஒன்றில்நான்
ஏறினேன்; கடலின் கரையை எய்தினேன்,

எடுத்துக் குலுக்கியது என்னை ஒன்றே;
அங்கே அழகுற என்னைக் கண்டேன்!

பலரும் இரண்டு பாரதி தாசரைக்
கண்டு வியந்து கொண்டிருந்தனர்.

என்னிடம் இருந்த பொன்னாடை ஒன்றே;
இரண்டு பொன்னாடைகள் இருக்கக் கண்டேன்.

புறப்படும் போதெனைப் புகைப்படம் எடுத்ததும்
திறம் செய்து கடற்கரை சேர்த்ததும் வியப்பே.

உலகின் நலத்தைக் கருதி யுழைப்பவர்,
அறிவை நாளொடு கலந்தனர்! அதனுள்
நன்று குளிக்கும் கலைஞன்,
இன்று புதுமை படைத்தல் எளிதே!




( 190 )







( 195 )






( 200 )

மாடு மக்கள் ஊர்தி

மனிதனைப் பார்த் துச்சிவனைச் செய்தபின், மாட்டில்
இனிதமர்ந் தூரும் இடையன் -- தனைப்பார்த்து
வாய்ந்த சிவனேற மாட்டை இயற்றினான்,
ஆயந்தகற் றச்சன்அந் நாள்!

கற்றச்சன் செய்த கடவுள், உலகத்தில்
பெற்றசெல் வாக்கால் பெருந்தீங்கு -- பெற்றோம்;
சிவனுமா டேறினான், சிற்றறிவி னால்வாழ்
பவனும்மா டேறுவதா என்று.

ஏறிச் செலுத்தஎன்றே ஏறென்றார். மாட்டினையே
பேறொன்று பெற்றும் பிழைப்பறியோம் -- ஏறி
இளமுதுகிற் குந்தி இருபுறங் கால்இட்டே
உளமகிழ ஓட்டலாம் மாடு.

உழவுக்கும், வண்டி உழைப்புக்கும், அம்மி
குழவிக்குத் தானா, குணமும் -- அழகும்
செறிந்திட்ட மாடு? செழுந்தேர் அதுஎன்று
அறிந்திட்டால் மிக்க பயன் ஆம்.

செல்லுகின்ற செல்வத்தை மாடென்பார், நாம்ஏறிச்
செல்லாத மாடும் ஒரு செல்வமா? -- இல்லை!
கடைக்கேறிப் போகலாம்; காப்பாகச் சேர்க்கும்,
மடைக்கேறு மண்டுபுனல் போல்.

என்செல்வம், என்னூர்தி என்றே எவனும்
பொன்போலக் காக்கப் புறப்படுவான் -- நன்மாட்டின்
மாசெலாம் போகும்; மனம் வளரும்! மற்றும் அது
பேசலாம் நாளடைவில் பேச்சு!

வறியார்க்கு நல்லூர்தி மாடு! கழகச்
சிறியார்க்கும் நல்லுதவி செய்யும் -- குறியாய்
நடக்கும்பண் பாடுண்டு, நாட்செலவும் மட்டே,
இடக்கும்பண் ணாதன்றோ மாடு?

மாடு கழிக்கும் கழிவும் மருந்தன்றோ?
நாடு கழித்தொதுக்க வேண்டாமே! -- கேடுகெட்ட
குள்ளக் கழுதையும் ஊர்தியாய்க் கொள்ளுகின்றார்,
வெள்ளிமலை ஏற வெறுப்பா?

மாட்டுக்குக் கொம்புநல்ல வாய்ப்பாகும், நாமேறி
ஓட்டுகையில் நம்மை ஒழிக்கவரும் -- கோட்டானைக்
குத்திக் கொலைசெய்யும்! கொண்ட தலைவனையோ,
நத்திப் பணிபுரியும் நன்று.

நெருங்கிப் பழகாமை யால்மாட்டின் நீர்மை
சுருங்கிற்று! வீழ்ந்தது தோற்றம்! -- கருங்கலும்தான்
கைவைத்தால் கண்ணாடி யாகும், ஓர் ஆள்கொண்டு
செய்வித்தால் தீரும் எழில்.

முன்நாட்டு மக்களெலாம் மாடூர்ந்தார், முன்நாள்போல்
பின்நாட்டு மக்களும் பேரூர்தி -- நன் மாடாய்க்
கொண்டு களிக்கவே! கொள்ளாரும் நல்லவழி
கண்டு களிக்கும் படி!



( 205 )






( 210 )






( 215 )





( 220 )





( 225 )





( 230 )






( 235 )





( 240 )





( 245 )