பக்கம் எண் :

குயில் பாடல்கள்

வலைக்கம்பி அறை வடவன் விலங்கு
அறிவோம்போடா என்றன புறாக்கள்

வலைக்கம்பி அறையில் வளர்ப்புப் புறாக்கள்
நிலைக்கும். இன்ப நிகழ்ச்சி கட்கும்,
இடையூ றேதும் இன்றி வளர்ந்தன.
பெட்டை முட்டைஇடும்; அதைப் பெட்டையும்
ஆணும் அன்புடன் அடைகாத் திருக்கும்;
ஒன்றிரண்டு குஞ்சு பொறிக்கும் நன்று.
பெரிதாம்; இவ்வாறு பெருகும் புறாப்படை!

வளர்ப்பவன் உள்ளங் கையில் வைத்த
தீனியை அவனின் தோளினின்று தின்னும்!
வளர்ப்பவன் வாயின் எச்சில் நீரை
உண்ணும் அந்த வண்ணப் புறாக்கள்!

நேரு தமிழரை நெருக்கு வதுபோல்
வளர்ப்பவன் புறாக்களை வருந்திய தில்லை.

வலைக்கம்பி அறையில் சிலகம்பிகளைப்
பழுது பார்த்த பொழுது புறாக்கள்
பறந்துபோய்ப் பக்கத்து-உயர்ந்த
மதில்மேல் வரிசையாய் உட்கார்ந்து கொண்டன.

வளர்ப்பவன் அவற்றை "வருவீர என்றான்.
"வலைக்கம்பி அறை வடவன் விலங்கு
வாரோம் வாரோம என்றன புறாக்கள்.
"ஒன்றாய் இருக்காலாம் என்றான் வளர்ப்பவன்;
"நன்றாய்த் தின்னவா நாடொறும் நாங்கள்
பொறிக்கும் குஞ்சு களைநீ?
அறிவோம் போடா" என்றன புறாக்களே!




( 5 )





( 10 )






( 15 )





( 20 )



செயற்கை குட்டி நிலாவும்
இயற்கை வட்ட நிலாவும்

வட்ட நிலா:

     குட்டிநிலாவே குட்டி நிலாவே
     எங்கே வந்தாய் குட்டிநிலாவே?

குட்டி நிலா:

     வட்டநிலாவே, வட்டநிலாவே
     வந்தேன் உன்னிடம் வட்டநிலாவே.
     கெட்ட உலகம் வாழும் வழியைக்
     கேட்க வந்தேன் வட்டநிலாவே.

வட்ட நிலா;

     எட்ட இருக்கும் வட்டநிலா நான்
     எனக்கா தெரியும் குட்டி நிலாவே?

குட்டி நிலா

     வளர்ச்சி பெற்றாய், குளிர்ச்சி பெற்றாய்.
     வட்டநிலாவே வாய்திற வாயோ?

வட்ட நிலா:

     தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
     சண்டை பிடித்தது குட்டி நிலாவே?

குட்டிநிலா:

     களைப்பு நீங்கஉலகம் ஒருவன்
     கைக்குள் வருமோ வட்ட நிலாவே

வட்டநிலா:

     ஆயிரங்கோடிச் செலவில் வந்தேன்
     அறிவைக் கொடுப்பாய் குட்டி நிலாவே,

வட்டநிலா:

     ஆயிரம் கோடியை அரிசிக்காக
     அளித்த துண்டோ குட்டி நிலாவே?
     போய்விடு, போய்விடு குட்டிநிலாவே

     போய்விடு,

என்றது வட்டநிலாவே, தீயில் எரிந்தது குட்டி நிலாவே.
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே.


( 25 )







( 30 )













( 35 )










( 40 )









( 45 )

உயிர் உறங்கா இரவு

உலகத்தின் சுழற்சினால் பரிதிக் கோளம்
ஒளிமாற்றி எழுவண்ணம் முகிலில் பூசும்.

பலகற்றும் அறிவில்லா மனத்தினைப்போல்
பரவும் இருள்; பாழ்பட்ட சிற்றூர் தன்னை.

நலமுற்றச் செய்திடுவோம் எனத்துணிந்த
நல்இளைஞர் போல் விண்மீன் எங்கும் மின்னும்!

விலகட்டும் அறியாமை எனமுன் நிற்கும்
பெரியராய் வெண்ணிலவு விரிவான் தோன்றும்.

வான்பறவை இனமெல்லாம் மரங்கள் தோறும்
மயக்குறுதல் மக்களைப்போல் குரல் அடங்கும்.

தேன்பறவை சிற்சிலதம் குரல் அமிழ்தைத்
தித்திக்க எங்கிருந்தோ முணுமுணுக்கும்.

ஆனிரையும் ஆடுகளும் ஆன்றவர்போல்
அடங்கும்; அலை ஆழியோ முரசொலிக்கும்!

ஊனுறங்கும், உயிர் உறங்கா துணர்வில் ஓங்கி,
ஒளியுலகை வரவேற்க விழித்திருக்கும்.



( 50 )






( 55 )







( 60 )



நிலவே

நிலவே நீமுன் நடந்ததைக் கூறுவாய்,
மெய்யாகக் கூறுவாய்!
இலகு செந்தமிழையும் உன்னையும் கூட்டி
இயற்கை அன்னை வளர்த்த திலையோ பாலூட்டி?

சங்கமேறித் தமிழுலகிருள் போக்கித்
தாவியெழில் வானமிசை நீயுலவத்
தமிழ் வாழ்த்தி உனைவாழ்த்தி மக்கள், வாழ்வு
தொடங்கியதை மறைத்தனையோ குளிர்ந்த
                            வெண்ணிலவே நீ !

வடமொழிக் குதவி தமிழ்மொழி அன்றோ?
மறுமொழி கூறாதிருப்பது நன்றோ?
கடல்சூழ் வையம் ஆண்டது தமிழோ?
கையேந்தி வந்தவர் பேசிய மொழியோ?

ஆரியர் ஆட்சி வாய்ந்த பின்னை
அழகிய தமிழ் நூலாகிய பொன்னை
வேரொடு மாற்றிட வஞ்சம் என்னென்ன
விளைவித்தார் அதைத்தான் கேட்டேன் உன்னை
நிலவே நீ முன் நடந்ததைக் கூறுவாய்!

( 65 )





( 70 )





( 75 )





( 80 )
கோடைக் கொடுமையும் மாரியின் வரவும்

வெயிலின் கொடுமை விலக்கிட எண்ணிக்
கடற்கரைப் பக்கம் நடந்தேன், கடலோ
உலைநீர் போல கொதித்தலைந் துயிர்த்தது;
கடல்காற்று ஆவியாய்க் கனன்று வீசிற்று;
வான வெப்பத்தால் போனகதிர் சிவந்தது.

எழுந்த வெண்ணிலா எண்ணெயில் பொறித்த
அப்பளம் போலக் கொப்பளம் கொண்டது;
வெம்மையால் அம்மை வார்த்ததுபோல
மீனினம் விசும்பில் தான் எழுந்திட,
வைக்கோலில் சுற்றிய வெள்ளரிப் பழம்போல்
வெக்கையால் மேனி வியர்த்து வாட்டிற்று.

யான் ஒருவன் மட்டுமா எய்தினேன் இன்னல்?
இல்லவே இல்லை; எல்லா மக்களும்,
வந்தேறிகளால் நொந்தழுவார்போல்,
கோடைக் கொடுமையில் வாடலானோம்.
புரட்சியின் புழுக்கத்தின் பின்
பொதுவுடைமைபோல் புகுந்தது மாரியே!



( 85 )





( 90 )





( 95 )


இயற்கைப் பாடம்

என்னுடைய தோட்டத்தில் பலா, மா, வாழை,
இன் இளநீர் தெங்குபத்து வைத்தேன்; காலம்
தன்னுடைய பிள்ளைகளாய் வளர்த்தவற்றைத்
தாராள மாய்விளைவைப் பருவந் தோறும்

முன்னடையச் செய்வதிலே சுணங்கவில்லை.
முன்னேறும் விலையேற்ற நாளில், தோட்டம்
கன்றுடைய பசுவைப்போல் என்குடும்பம்,
வரும்விருந்து களிப்புறவே விளைவை ஈயும்.

தோட்டத்து விளைவெல்லாம் என் உழைப்பா?
சுழன்றுவரும் கதிர்மதியின் மழைவிளைச்சல்!
ஊட்டத்தைக் கொடுக்கின்ற கனியும் காயும்
ஊரார்க்கு மலிவாகக் கிடைக்கும் போது
நாட்டாரே, நான் ஒன்று நினைத்துப் பார்த்தேன்.
நாகரிகம் மிகுந்துவரும் உலகில், நாட்டில்
ஓட்டமிகும் இயந்திரங்கள் பொருள் உற்பத்தி
ஓயவில்லை தொழிலாளர் உழைப்பினாலே.

இயற்கையிலே காணாத ஒருவியப்பு,
பொருள்விளைவு நூறுமடங் கென்கின்றோம் நாம்;
பயக்கின்ற பொருள்எல்லாம் மலிவா? இல்லை,
முன்னேற்றம் படுவேகம் என்கின்றோம் நாம்
செயற்கையிலே பொருளாளி தான் கொழுக்கச்
செத்தொழியும் தொகை மக்கள் எண்ணில்லாதார்;
அயற்கையிலே பணம்குவிய அடிமை ஆகி
அல்லலுற்று வாழ்பவர்கள் கோடி கோடி!

பண்டங்கள் பெருக்குவதின் மூலம் நாட்டில்
பணக்காரன் சுரண்டுகிறான், வறுமை நோயை
எண்டிசையும் பரப்புகிறான், இதற்கு மாறாய்
இயற்கைவிளை பொருள்கள் நமைச் சுரண்டல் இல்லை.
"நண்பர்களே, உமக்குண்மை ஒன்று சொல்வேன்.
நானிலத்தில் வளர்ந்துபயன் விளைத்த போதும்
கொண்டெ வற்றையும் நாங்கள் தின்பதில்லை;
கொழுப்பதில்லை; கொடுக்கின்றோம் உழைத்தோருக்கே"

என்றன்முன் விளைந்தபல புல்லும் ஏனை
எழுந்தசெடி, கொடி, மரமும் இயம்பக் கேட்டேன்
நன்று இதனை நாடெங்கும் சொல்லுகின்றேன்,
நாட்டில் பொதுவுடைமைக்கு வித்தீ தென்றேன்.
கொன்றழிக்கும் முதலாளி என்றில்லாமல்
கூட்டுடமை பயன்மரமாய், இயற்கை அன்னை
அன்புயிராய், தொழிலியலை மாற்றல் வேண்டும்
அதற்குபின் துன்பமில்லை,சுரண்டல் இல்லை

( 100 )





( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )





( 135 )


எக்காளக் குயில்

நின்றசெங் காந்தள்பூ நேரில் கை ஏந்த நெடும்
கொன்றை மலர்பொன்னைக் கொட்டுகின்றாள் -- என்றே
அடை குயில்கள் எக்காளம் ஆர்த்தெனவே, மண்ணில்
கொடை வாழ்க என்று குறித்து

( 140 )

பட்டணத்தான்

கொல்லையில் பரணின் கொடிகளி னின்றே
இருபது புடலங் காய்களும், இரண்டு
பாம்பும் தொங்கின. பட்டணத்தான்
பொறுக்காய் இரண்டு புடலங்காய்களைப்
பறித்துப் பையில் போட்டுக் கொண்டு
பிஞ்சென்று பாம்பைத் தொட்டான்;
நஞ்சென்று கதறினான் நறுக்கென்று கடிக்கவே.


( 145 )



என்றைக்கும் பஞ்சமில்லை

கொன்றைக்கும் முல்லைக்கும் கொம்புக்கும் கள்ளுக்கும்
என்றைக்கும் பஞ்சமே இல்லையே, இன்றைக்கும்
ஊதவில்லை என்றதுண்டா உள்ளவண்டு? வெள்ளத்தேன்
போவதில்லை என்றதுண்டா? போய்.
( 150 )
சின்ன பெண் ஆசை

மணங்கொண்டு தென்றல் வரும்என்றார் ஊரார்!
மணஞ்செய்ய மாப்பிள்ளையா இங்கே கொணரும் என்று
பால்மறவாப் பாவை வினாவப் பரிந்துதாய்
தேன்மறவாப் பூமணம் என்றாள்,

( 155 )

சாவாத உழவன்

வெயிலில் உழவன் வியர்க்க உழுதிடும்
வயல் அயல் மரத்து நிழலும் சுட்டதால்
குளிர்பொருந்து கூடம் சென்றுபின், மாலைஅவ்
வயலிடை வந்தேன் உழவன்
உயிரோடின்னும் உழுகின்றானே!


( 160 )

துலங்கா மூஞ்சி உலகம்

   கூடத்தில் ஆண்சிட்டைப் பெண்சிட்டுக் கூடிப்பின்
   கூடிக்கூ டிக்கூடிக் கூடிப்பின் -- கூடி
   விலகி அரிசி விளைந்தும் துலங்கா
   உலகில் விழித்தன உற்று.


( 165 )
யார் குற்றவாளி?

   கொஞ்சும் குயில் ஒன்று கூகூ என்றது
   தென்றலால் அசைந்த செவ்விதழ் அல்லிதான்
   இகழ்ச்சிச் சீழ்க்கை அடித்தாய்த்
   தகாதிது தடபுடா என்றது தவளையே.



( 170 )
என் நிலைக்கு முல்லை சிரித்தது

இரவு தங்கிப் பகலில் வந்தஎன்
வரவுக்கு மனைவி கண்சிவந்தாள்
மலர்வனம் சென்றேன் அங்கும்
அலரிகண் சிவந்தது! முல்லை சிரித்ததே

உரிமைக் கொண்டாட்டமா?

   புல்வெளி, சிறிய குன்று
   புனல்வற்றா ஓடை சார்ந்த
   நல்லதோர் காடு நோக்கி
   நடந்தனர் வேடர் சில்லோர்.
   வல்வலை கட்டினார்கள்;
   விலங்குகள் வளைக்கலானார்;
   ஒல்லெனப் பறை, தப்பட்டி
   ஒலித்தனர் காட்டில் எங்கும்!

   தாய்க்குதி ரைதன் குட்டி
   தன்னோடு நடுக்கம் எய்தி,
   ஏய்ப்பவர் கட்டி வைத்த
   வலையினில் ஏகி வீழச்,
   சாய்த்தனர் தரையில் வேடர்
   தாம்பினால் கட்டிச் சென்றார்!
   தாய் செல்லும் குட்டி செல்லும்
   தம் காட்டைப் பார்த்த வண்ணம்!

   குட்டியைத், தாயை; வேடர்
   குப்பன்பால் விற்று விட்டார்.
   அட்டியில் லாது குப்பன்
   அவற்றினை வளர்த்து வந்தான்.
   குட்டிதான் வண்டி காக்கும்
   குதிரை வீரன் என்று கண்டான்.
   கொட்டில் தாய் வருந்திக்
   கிடந்தது காட்டை எண்ணி.

   மண்டிடு தீனி தின்று
   வளர்ந்திட்ட குட்டி தன்னை,
   வண்டியிற் பூட்டலானார்,
   வருத்தத்தை வழக்க மாக்கிக்
   கொண்டது குட்டி! ஓர் நாள்
   குடைசாய்ந்து போன தாலே
   வண்டியாற் பட்ட பாட்டை
   வந்துதன் தாய்க்குக் கூறும்;

   வண்டியிற் கட்டப் பட்டு
   வருந்திடு கின்றேன் நாளும்!
   புண்தொடை தன்னில் கொண்டேன்;
   புழுவெனத் துடித்தேன் அம்மா!
   கொண்டதோர் அடிமை தாளேன்,
   குன்றொத்த வண்டி தன்னை
   அண்டாத நிலைமை பெற்றால்
   அதுவே என் உரிமை வாழ்வாம்!

   என்றது குதிரைக் குட்டி!    இதற்குள்ளே குப்பன் வந்து
   குன்றுநேர் குட்டி தன்னை
   வண்டிக்குக் கொண்டு போனான்;
   நின்றிட நேரமின்றி
   நெடுவண்டி தனை இழுத்துச்
   சென்றிடும்; இவ்வாறாகச்
   சென்றன பத்துத் திங்கள்.

   வண்டியை இழுக்கக் குட்டி
   மறுத்தது! கண்ட குப்பன்
   சண்டியே, "இனிமேல் நீயோர்
   தனி "ஏறு குதிரை" என்றான்.
   குண்டான்கூழ் பெற்ற ஏழை
   குதிப்பெனக் குதித்துக் குட்டி,
   வண்டியினின்று பெற்ற
   விடுதலை வாழ்த்திற்று ஆங்கே!

   தன் ஏறு குதிரை மீது
   தான் ஏறிக் குப்பன் செல்வான்,
   மின்போல உடல் நெளித்து
   விரைமான்போல் ஓடும் குட்டி,
   பின்புறம் வண்டியில்லை
   பெற்றேன் நான் விடுதலைதான்
   என்றெண்ணி மகிழும்! ஓர்நாள்
   ஏகிற்றுத் தாயின் அண்டை.

   அம்மா நான் உரிமை பெற்றேன்.
   உம்மட்டும் நானடைந்த
   இன்னல்கள் நீங்கப் பெற்றேன்,
   அம்மிசுண் டெலிமேல் ஏறி
   அமிழ்த்தல்போல என்னை வண்டி
   இம் மண்ணில் இனி அமிழ்த்தா
   தென்றது குதிரைக்குட்டி.

   கடிவாளத்தால் கிழிந்த
   கடைவாயில் குருதி யாறு
   வந்திட எதிரில் நின்று
   மகிழ்ந்திடும் குட்டி தன்னை,

   உடைந்த உள்ளத்தால் நோக்கி
   உரைத்தது; 'கிழித்தாய்' ஏஏ
   அடிமையே உனைப் பிணித்த
   ஆங்கில வண்டியில்லை.

   வடக்குள குப்பன் உன்றன்
   வன்முது கின்மேல் ஏறிக்
   கடிவாளம் இறுக்கு கின்றான்
   கருதினாய் இல்லை! வாயில்
   வடிகின்ற குருதி காணாய்!
   வலி உணர்கின்றாயில்லை
   அடிமையை வியந்தாய், உன்றன்
   அகத்தினில் இருளைச் சேர்த்தாய்.

   வீழ்ந்தனை அடிமைச் சேற்றில்,
   விடுதலை விழா மேற்கொண்டாய்,
   ஆழ்ந்துபார் உன் நாடெங்கே?
   அருங்கலை ஒழுக்க மெங்கே?
   தாழ்ந்ததுதாழ்ந் தெவனை நீபோய்த்
   தாங்கிட ஒப்புகின்றாய்?
   வாழ்ந்த நம் உரிமை வாழ்வை    நினைக்கவும் மறுக்கின்றாயா?

   கடிவாளத்தைப் பிடிப்புக்கப்பால்,
   கதைத்திடு மதமென்கின்ற
   நெடுங்குன்றுக் கப்பால், சாதி
   நிறைமுள்ளுக் காட்டுக்கப்பால்,
   மடிவிலாக் கலை, சொல் பூக்கும்
   மணிப்புனல் ஓடை தன்னை
   உடையபுல் வெளியிலன்றோ
   உன் முழுதுரிமை உண்டு?

   என்று தாய்ப்பரி உரைத்தே
   எதிரில் தன் குட்டி தன்னை
   நன்றொரு முறையும் நோக்கி
   நளிர்புனல் ஓடை தன்னை
   மின்னு புல்வெளியை நெஞ்ச
   வெளியினில் நோக்கி நோக்கித்
   தன்னுயிர் விட்ட தங்கே
   தன்குட்டிக்கு உரிமை காட்டி!
( 175 )




( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )




( 220 )





( 225 )




( 230 )





( 235 )





( 240 )




( 245 )






( 250 )





( 255 )




( 260 )




( 265 )





( 270 )




( 275 )





( 280 )




( 285 )