நடந்தது நாள் ஒவ்வொன்றாய்
நகர்ந்தன நான்கு திங்கள்?
மடமயில் தனைநெ ருங்கும்
வாய்ப்பில்லை. பேச்சும் இல்லை
அடைந்தேன்இன் றவள்வ ரைந்த
அழகிய 'காதல் அஞ்சல்'
''அடைகஎன் வீட்டைக் காலை
ஐந்தரை மணிக்கு நீவீர்''
அஞ்சலைப் படித்தான் பாரி,
அற்றைநாள் இரவு தன்னைக்
கெஞ்சினான் திட்டிப் பார்த்தான்
கேட்கவே இல்லை அஃது;
மிஞ்சுகா லணிகள் பூண்ட
மெல்லிபோல் மெதுவாய்ச் செல்ல;
கொஞ்சிற்றுப் பரிதி கீழ்ப்பால்
கொடியிடை வீடு சென்றான்.
வருகஎன் றுரைத்தாள் -- கண்ணால்
வரவேற்று நின்றாள்; பாரி
இருகையால் தழுவப் போனான்
'இரும்' என்றாள் 'என்ன' என்றான்?
ஒருமனப் பட்டு வாழ்க்கை
ஒப்பந்தம் செய்து கொள்வோம்
பருகுவோம் பிறகு காதற்
பழச்சாற்றை என்று சொன்னாள்.
உம்மதம் என்ன என்றாள்
உம்பெயர் என்ன என்றாள்
''எம்மதம் ஆனால் என்ன
யான்ஒரு முசீலீம் என்றான்.
செம்மைசேர் புனை பெயர்தான்
பாரிஎன் றுரைத்தான் செம்மல்.
''இம்மியும் நமது வாழ்வில்
ஒற்றுமை இராதே'' என்றாள்.
என்மதம் மயிலே உன்னை
வரவேற்க மறுப்ப தில்லை.
கன்னலின் உதட்டை என்பால்
காட்டுக என்றான் காளை
நன்மனத் தீர்!உமக்கு
நான்வேண்டு மாயின், நீவிர்
உம்மதம் துறக்க வேண்டும்
உள்ளத்தும் வெளிப்புறத்தும்!
என்றனள் இதனைக் கேட்டான்.
திடுக்கிட்டான் இயம்பு கின்றான்.
என்மதம் இஸ்லாம், ஆம்ஆம்
எனினும்நான் திராவி டன்தான்
என்றனன். மங்கை நல்லாள்
இதுகேட்டாள் சிரித்துச் சொல்வாள்;
மன்னிய திராவிடடர்க்கு
மதமில்லை சாதி இல்லை!
தளைமதம் விடுக நீவிர்
தனிவிடு தலைமேற் கொள்க.
களையினை நெஞ்ச கத்துக்
கழனியில் வளர்த்தல் வேண்டாம்
இளமையின் பயனும் வாழ்வின்
இன்பமும் மதத்தில் இல்லை
விளைந்திட்ட தீமை எல்லாம்*
நினைவினில் ஆழ்ந்தான் நெஞ்சில்
நிறைஇருள் நீங்கப் பெற்றான்.
தனிப்பெருந் திராவி டத்தைத்
தான்எனக் கண்டான். மானே
இனிஒரு மதத்துக்கு ஆட்பட்டு
இரேன் என்றான். தூய்மை யான
மனத்தினை அவளுக் கீந்தான்
மங்கையும் தன்னைத் தந்தாள்.
--------------------------------------------------------------------------
*மதவெறி விளைத்த தென்றாள்;
--------------------------------------------------------------------------
|
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
( 440 )
( 445 )
( 450 )
( 455 )
( 460 )
( 465 )
( 470 )
( 475 )
( 480 )
|