பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

அறிவு பெற வருக தமிழ்!

(வண்ணம்)

தனன தனனா தனன தனனா
தனன தனனா தன தானா
அழகு முகிலே தவழும் மலைமேல்
அருவி ஒருபால் இசையோடே
அமிழும்! அதிலே சிதறு துளிபோல்
அணிம லரெலாம் எழும்மேலே

எழுதும் முழுதோ வியமும் நிகரோ
எனவு றைகுவார் மடவோரே
எறிகவணிலே குருவி கடிவார்!
இனிய மொழிசேர் தமிழ்நாடே

தழைவு பெறவே வருக தமிழே
தமிழர் உயிரே வருவாயே!
தழுவு குழல்யாழ் கிளிமொ ழியுமோர்
அமிழ்தும் உனையே நிகர் ஆமோ?

விழியின் ஒளிநீ எமது புகழ்நீ
விரிதி ருவுநீ எனயாமே
விழைவ தறிவாய் அறிவு பெறவே
விரைவில் வருவாய் ஒரு தாயே!





( 5 )





( 10 )






( 15 )



தமிழ் வரலாறு

கேளீர் தமிழ்வர லாறு -- கேட்கக்
கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே)
நாள்எனும் நீள்உல கிற்கே -- நல்ல
நாகரி கத்துணை நம்தமி ழாகும்
வாளுக்குக் கூர்மையைப் போல -- அது
வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே)

இயல்பினில் தோன்றிய தாகும் -- தமிழ்
இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும்
அயலவர் கால்வைக்கு முன்பே -- தமிழ்
ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே)

அகத்தியன் சொன்னது மில்லை -- தமிழ்
அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம்
மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் -- பிறர்
மேல்வைத்த நூலேஅகத்தியமாகும்! (கே)

நாடுதொல் காப்பிய நூலும் -- இங்கு
நம்மவர் கொள்கைந வின்றிடவில்லை
ஏடுகள் தந்தன ரேனும் -- தமிழ்
இயற்கைக்க ருத்தந்த நூற்களில் இல்லை (கே)

கல்லையும் செம்பையும் கண்டே -- இரு
கைதொழும் கொள்கைத மிழ்க்கொள்கை இல்லை
நல்லொழுக் கம்சிறப் பென்னும் -- அறம்
நாடி அதன்திறம் பாடும்த மிழ்தான்! (கே)

ஆன்மாவை ஒப்புவ தில்லை -- தமிழ்
அணுவென்று கூறிடும் உயிரினை அஃதே!
கோனாட்சி தன்னைச்சி ரிக்கும் -- அது
கோலெடுத் தோன்செயல் என்றுவெ றுக்கும் (கே)

( உயிரும் நுண்மையும் அணுவென லாகும்' என்பது
பிங்கலந்தை. கோல் என்பது கொல்லுவது; முதனிலை
திரிந்த தொழிற்பெயர். அக்கோல் என்பது ஆட்சிக்கும்
கோலன் அரசனுக்கும் பெயராயினமை காண்க. )

முள்முடிக் கோனாட்சி ஒப்பும் -- தமிழ்
முன்னிருந் தாள்வோனைக் காவலன் என்னும்
ஆள் என்னும் சொற்பொருள் காண்பீர் -- தனி
ஆளுக்கும், ஆள்கைக்கும் வேற்றுமை இல்லை -- (கே)

காட்டாறும் மக்களைக் கொல்லும் -- மூங்கிற்
காடும்க னல்பட்ட ழிந்திடும், அந்தக்
கேட்டுக்குத் தெய்வமென் றேபேர் -- அதைக்
கெஞ்சல்இ றைஞ்சல்த மிழ்க்கொள்கை இல்லை (கே)

('தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும்' என்பது
பிங்கலந்தை )

மாசற்ற எண்ணத்தி னாலே -- இன்ப
வாழ்வைஅ டைவது நந்தமிழ்க் கொள்கை
ஈசன்என் றேஒன்றைக் கூறி -- இடர்
ஏற்பதை நம்தமிழ் ஏற்பதுமில்லை (கே)

(
'மாசற்ற கொள்கை மனத்தில் உதித்தத் கால ஈசனைக்
காணும் உடம்பு' என்பது ஒளவைக்குறள், மாசற்ற
எண்ணத்தைவிட வேறாக ஒருபொருள் உன்னை
நினைப்பார்க்கு மறுப்பாகும். )
முருகெனல் அழகிள மைக்காம் -- எனில்
முருகனை நந்தமிழ் ஒப்புவ தில்லை
விரிவுறு முல்லைநி லத்தில் -- வரும்
வேட்கையை மால்என்று நந்தமிழ் சொல்லும் (கே)

கோயிலும் மன்னவன் இல்லம் -- அந்தக்
கோயில்வ ணங்கும்இ டந்தானுமில்லை!
தாயும் தகப்பனும் அன்றோ -- தொழத்
தக்கவர் ஆவர்என் றேதமிழ் சொல்லும் ! (கே)

சாதி மதம்தமிழ் இல்லை! -- அந்தச்
சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை
தீதுறு 'தெவ்வே'ப கைமை -- அந்தத்
தெவ்வில் விளைந்தது தேவர்எ னுஞ்சொல் (கே)


( 20 )





( 25 )





( 30 )





( 35 )




( 40 )





( 45 )











( 50 )





-


( 55 )










( 60 )




( 65 )




அங்கரத்தினம் -- சாவுக்கு வரவேற்பு

அன்னையின்சீர் அழிப்ப தற்கே
ஆளவந்தார் முயலு கின்றார்
இன்னுமவர் திருந்த வில்லை
சாவே வா! -- அவர்
இனியேனும் திருந்து தற்கே
சாவே வா!

தென்தமிழின் சீரழிக்கத்
தில்லியினோர் முயலு கின்றார்
இன்னுமவர் திருந்த வில்லை
சாவே வா! -- அவர்
இனியேனும் திருந்து தற்கே
சாவே வா!

வானொலியை நீக்கி, ஆகாஷ்
வாணிஎன்று முழங்கு கின்றார்
மானங் கெட்டோர் நடுங்கும்படி
சாவே வா! -- என்
வண்டமிழர் எழுச்சி கொள்ளச்
சாவே வா!

ஆனதமிழ் அமைச் சரையும்
அறிவழித்தார் தில்லியி னோர்
தேன் என்றே உனையழைத்தேன்
சாவே வா! -- என்
செந்தமிழர் எழுச்சி கொள்ளச்
சாவே வா!

அரிது செய்தான் அரங்க ரத்தினம்
அறம் விளைத்தான் என்னும்படி
இருகையால் வரவேற் றேன்
சாவே வா! -- என்
இன்பத் தமிழ் வாழ்ந்திடவே
சாவே வா!

தெரியட்டுங்காண் உலகுக் கெல்லாம்
செந்தமிழர் எழுச்சித் திறம்
புரியட்டுங்காண் தில்லிக் கொடுமை
சாவே வா! -- உயிர்
போகட்டுங்கான் தெரியுஞ் சேதி
சாவே வா!

( 70 )




( 75 )





( 80 )





( 85 )





( 90 )





( 95 )





( 100 )




( 105 )

அங்கரத்தினம் உண்ணா நோன்பு வாழ்க!

ராகம்; தன்யாசி     தாளம்; சாபு

அழகைச் செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்கரத்தினமே - நீ
அன்பு செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்கரத்தினமே
தழைவைச்செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்கரத்தினமே - நீ
தலைமை வைத்தாய் தமிழ்மொழிக்கே அரங்கரத்தினமே
எழுக எழுக தமிழ்மொழியை இழிவுசெய்கின்றார் - விழித்
தெழுகஎன்று முழக்கஞ் செய்தாய் அரங்கரத்தினமே
ஒழுகும்முறை எமக்குரைத்தாய் அரங்கரத்தினமே - நல்
உயிரினும் தமிழ்மே லென்றாய் அரங்கரத்தினமே!

கத்தாத கழுதைகண்டு கண்கலங்கினாய் - நல்ல
கழுத்தொடிந்த மாடுகளைக் கண்டு துடித்தாய்
ஒத்தாசை நீ புரிந்தாய் அரங்க ரத்தினமே - நீ
உணர்வு தந்தாய் தமிழருக்கே அரங்க ரத்தினமே
நத்தாத உயிரு முண்டோ முத்தமிழ் தனையே
கைத்தாளம் போடுகின்றாய் புகழ்நிலத்திலே - நீ
காட்டாற்றின் எழுச்சிவைத்தாய் எம்முளத்திலே!

அந்தமிழ்த்தாய் முகத்தினிலே ஆரியக்கறைஏன்? - நம்
அழகுதமிழ்ச் சோலையிலே ஆகாஷ்வாணி ஏன்?
செந்தமிழ்க்கே இழிவுகண்டால் என்உயிர்தான் ஏன்- நல்ல
செந்தமிழர் வாழ்க்கைச்சுவை அந்தமிழால் தான்
இந்தப்படி தவங்கிடந்தாய் அரங்க ரத்தினமே - வெற்றி
எய்துகநின் உண்ணாநோன்பும் அரங்க ரத்தினமே
வந்ததுண்டு தமிழ்க்குயர்வு தோழா உன்னாலே
வாழ்கபுகழ் வாழ்கதமிழ் அரங்க ரத்தினமே!







( 110 )





( 115 )





( 120 )





( 125 )



பெயர் மாற்றம்

சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத்
தேடினேன். ஓர் இளைஞன்
அன்னதோர் ஊரே இல்லை
என்றனன்! அப்பக்கத்தில்
இன்னொரு முதியோர் தம்மை
வினவினேன்; இருப்ப தாகச்
சொன்னார் அவ்வூர்க்குப் போகத்
தோதென்றும் சொல்ல லானார்.

மக்களின் இயங்கி வண்டி
இங்குத்தான் வந்து நிற்கும்
இக்காலம் வருங்காலந்தான்
ஏறிச்செல் வீர்கள் என்றார்.
மக்களின் இயங்கி வண்டி
வந்தது குந்திக் கொண்டேன்
சிக்கென ஓர் ஆள் "எங்கே
செல்லுதல் வேண்டும என்றான்.

கீழ்ப்பாக்கம் என்று சொன்னேன்
கேலியை என்மேல் வீசிக்
''கீழ்ப்பாக்கம் என்ப தில்லை
மேல்பாக்கம் தானும் இல்லை
கீழிறங் கிடுவீர்'' என்றான்.
அங்கொரு கிழவர் கேட்டுக்
கீழ்ப்பாக்கம் உண்டு காணும்!
வரலாறு கேட்பீர் என்றார்;

கீழ்ப்பாக்கம் என்னும் அஃது
''கீல்பாக்கம்'' என்றாகிப் பின்
தாழ்வுற்றுக் ''கெல்லிஸ்'' என்று
தான்மாறிற்றென்று சொன்னார்.
கீழ்ப்பாக்கம் கெல்லிஸ் ஆனால்
கிள்ளையும் அள்ளி யுண்டு
வாழ்த்திடும் தமிழமிழ்தின்
வரலாறே மாறிடாதோ!

தமிழ்நாடு தமிழ்நாடென்ற
தன்பெயர் இழந்தி டாதோ!
தமிழ்நூலும் தமிழ்நூ லென்ற
தன்பெயர் இழத்திடா தோ!
தமிழரும் தமிழர் என்ற
தம்பெயர் இழந்திடாரோ!
தமிழ்ப்புகழ் தொலைப்பார் தங்கள்
தனியாட்சி நிறுவிடாரோ!

இவ்வாறு வருந்தா நின்றார்;
இயங்கியும் கெல்லிஸ் என்ற
அவ்விடம் நிற்கக் கண்டார்
அங்ஙனே இறங்க லுற்றார்
செவ்விதிர் கீழ்ப்பாக் கத்தின்
தெருக்கண்டார் தமிழ் வழங்கும்
கொவ்வைசேர் இதழ்கள் கண்டார்
கொம்புலிக் கூட்டம் கண்டார்

தமிழ்நலம் காக்க! இன்பத்
தமிழகம் காக்க! அன்புத்
தமிழரே தமிழ கத்தில்
தமிழரின் ஆட்சி காக்க
இமைமூடித் திறக்கு முன்னே
எதிரிகள் கோடி இன்னல்
சமைக்கின்றார்! அவர்கள் தோளைச்
சாய்ப்பது பெரியார் பாதை!


( 130 )




( 135 )





( 140 )





( 145 )





( 150 )





( 155 )





( 160 )





( 165 )





( 170 )





( 175 )





( 180 )

குண்டு போடு!

தமிழுக்கு நீசெயுந் தொண்டு -- நின்
பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு)

தமிழில்நீ புலமைபெற வேண்டும் -- அது
தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும்
தமிழிலே யேபேச வேண்டும் -- அது
தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு)

தமிழ் பேசு: தமிழிலே பாடு -- நீ
தமிழினிற் பாடியே ஆடு
தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு -- தமிழ்
தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு)

வணிக விளம்பரப் பலகை -- அதில்
வண்தமிழ் இலாவிடில் கைவை
காண்கநீ திருமண அழைப் பைப் -- பிற
கலந்திருந் தால்அதைப் புய் புய் (தமிழுக்கு)

பொருள்களைத் தமிழினில் அழைப்பாய் -- பிற
பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய்
தெருப்பெயரில் தழிழே இழைப்பாய் --அதிற்
சீறுவார் மடமையை ஒழிப்பாய் (தமிழுக்கு)


தமிழிலே வழிபாடு வேண்டிப் -- பின்
தளர்ந்தனன் முன்னமோர் ஆண்டி
அமைவாக அவனையும் தூண்டி -- நீ
அறஞ்செய்க சோம்பலைத் தாண்டி (தமிழுக்கு)

உரைசெய்ய நூலெழுத வந்தோர் -- அவற்
றுள்வடசொல் ஏன்தாம் கலந்தார்?
சரிசெய்ய ஆனதை நீபார் -- அவர்
தடுத்தால் தொடங்குவாய் மொழிப்போர் (தமிழுக்கு)

வருமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் --எதிர்
வரக்காணில் காறிநீ உமிழ்வாய்
கடன்என்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய் -- ஒரு
கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய் (தமிழுக்கு)

இறைதடுத் தாலும்இந்நாட் டுக்கு -- மற்
றிங்குளோரின் குறைபாட் டுக்குச்
சிறிதும்அஞ் சேல்தொண்டு செய்வாய் -- கடுஞ்
சிறையறை திருமணவறை உனக்கு! (தமிழுக்கு)


( 185 )






( 190 )






( 195 )





( 200 )






( 205 )





( 210 )






( 215 )



இரகசியச் சொல்

ஏடா தூதா இங்குவா தனியே
என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர்
இரகசி யச்சொல் இயம்பு கின்றேன்
உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி
இறந்தது வடமொழி என்று தமிழர்
இயம்பி வந்த துண்டா இல்லையா?
இறந்தது மெய்தான் என்னும் தமிழர்
இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்!
மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்?
வடமொழி இறந்த தென்றதால் தமிழை
மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்!
வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல்
கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல்
நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல்
இன் தமிழ்ப் பயிற்சிக் கெதிரில் அவதி
இந்தியைக் கொணர்ந்தார் இன் தமிழ் நலியும்
வடமொழி இறந்ததால் வடமொழிக் குரியார்
தமிழையும் அழிக்கச் சந்ததம் முயன்றார்
என்ற சேதியை இங்கிருந் தோடி
எனது பெரியார் இன்னுயி ரனையார்
தமிழின் தலைவர் தமிழ வீரர்
இப்புவி மாயம் எழிலின் கூட்டம்
ஒப்புறக் காட்டும் உயர் தமிழ்க் கவிஞர்
இன் தமிழ் மாணவர் இளஞ்சிங் கங்கள்
இன்னவரிடமெலாம் இயம்புவாய் விரைவில்!
இங்கிருந் தேநான் தமிழர்
அங்கங் கொதித்தெழும் ஆர்ப்பால் அறிகுவனே!


( 220 )




( 225 )




( 230 )




( 235 )




( 240 )




இந்தியா?

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை
தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை)

தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர்
தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை)

இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி!
இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி!
என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி
இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை)

ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு
பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு
பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும்
பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை)

தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று
செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று?
மோதுறும் பதவி நிலையிலா ஒன்று;
முழங்கா ற்றங் கரைமரம் நிலைக்குமா நின்று? (தமிழை)

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்தென்பர் வித்தகர்
தீக்கனவு காண்கிறார் இந்திபற் றியவர்
தெற்குச் சூறைக்கு நிற்காது வடசுவர் (தமிழை)







( 250 )





( 255 )





( 260 )





( 265 )

தமிழுக்கு உயிர் அளித்தான்

ஆட்டு மந்தையிற் காட்டுப்புலி
பாய்த் தாற்போல் -- என்
அன்புடையான் களம் புகுந்தான்
வா தோழி
பாட்டுப் பெற்றானா உயர்ந்த
சா வாலே -- அவன்
பழியைப் பெற்றானே இழிந்த
வாழ் வாலே
நாட்டின் புறப் போர்க்களமே
வா தோழி -- நீ
நம் தமிழர் இனப் பெருமை
பார் தோழி
கேட்டதுபார் போர் முழக்கம்!
வா தோழி -- பார்
கிழிந்ததுவே வானவெளி
வா தோழி!

செங்குருதி ஓடையிலே
யா னைகள்
செத்தபடி மிதப்பனவும்
பார் தோழி
எங்கணுமே தேர்குதிரை
கா லாட்கள்
இறந்தனபார் இறந்தனபார்
என் தோழி!

தங்கம் நிகர் ஓருடம்பு
வான் நோக்கிப் -- பார்
தரைக் கழகு செய்தவனைப்
பார் தோழி
சிங்கமடி செந்தமிழன்
என் காதல்
செல்வமடி செத்துவிட்டான்
பார் தோழி!

முன்மார்பில் உடலெல்லாம்
வேல் தாங்கி -- அவன்
முள்ளம்பன்றி போற்கிடந்தான்

பார் பார் பார்
என்மார்பு தழுவியவன்
போர் மாதின் -- நல்
இளமார்பு தழுவியபின்
புகழ் மாதின்
பொன்மார்பு தழுவுகின்றான்
பார் தோழி!
புதியசுவை எனக்களித்தான்
பார் மீதில்
என்ஆசைத் தமிழ்காத்தான்
காணேடி -- என்
எழிற்றமிழுக் குயிர் அளித்தான்
சீர் வாழ்க!





( 270 )




( 275 )




( 280 )





( 285 )





( 290 )




( 295 )





( 300 )





( 305 )




( 310 )



''காங்கிரசா தமிழைக் காத்தது?"

செத்தவட மொழியினில்
செந்தமிழ் பிறந்ததென்று
பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த
கத்துநிறை காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று புகன்றனை நாணமில்லையா?

செம்பொனிகர் பைந்தமிழைத்
தேர்ந்துணரா டீ.கே.சி.யைக்
கம்பனென வேஅணைத்த கல்கியினை ஆதரித்த
வம்புமிகும் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா?

தாய்மொழி இலக்கணத்தைத்
தாக்கிஒரு கம்பனுயர்
தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டிகேசியைப்
போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று புகன்றனை அறிவில்லையா?

காளையர்கள் ஓதுதமிழ்க்
கல்வியையும் பெற்றறியா
மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத்
தாளரெனும் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று புகன்றனை உணர்வில்லையா?

கூறுதமிழ் சொல்லாக்கக்
குழுவினர் என்று சொல்லி
மாறுபட்ட வடசொல்லில் மாற்றுவதை ஆதரிக்கும்
வீறுதவிர் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று விள்ளுகின்றாய் மேன்மையில்லையா?

துய்யதமிழ் மறைமலை
சோமசுந்த ரம்திருவி
எய்துகலி யாணம், பல இன்தமிழ்வல் லார் இருந்தும்
நொய்களைச்சார் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று நுவன்றனை? கருத்தில்லையா?

வண்தமிழை எம்முயிரை
வடசொல்லி னால் அழிக்க
எண்ணிடுவார் தமக்கெல்லாம் ஏற்றமதைத் தேடிவந்த
திண்மையற்ற காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று செப்பலுற்றாய் செம்மை இல்லையா?

தாயகத்திற் கேவணக்கம்
என்பதைவந் தேமாதரம்,
தூயதிரு என்பதைஸ்ரீ என்றுரைக்க தோது செய்த
தீயசட்டக் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று சேப்பலுற்றாய் சீர்த்தி இல்லையா?

இந்துவெல்க என்பதனை
ஜேய்இந்து என்பவர்க்கும்
நந்தமிழ்ச்சொல் வணக்கத்தை நமஸ்காரம் என்பவர்க்கும்
தந்தினம்சொல் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று சாற்றவந்தாய் தகவில்லையா?

கோயில்மண வாயில்களில்
கொஞ்சுதமிழ் நீக்கித்தங்கள்
தீயவட சொல்புகுத்தும் தெக்கணாமுட்டி கட்கெல்லாம்
போய்அளக்கும் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று புகன்றனை கண்ணுமில்லையா?

காலமெலாம் விடுதலை
காணவுழைத் தோம்என்பவர்
ஏலுந்தமிழ் கட்டாயமாம் என்றுரைக்கக் கேட்டதில்லை
தோலைவிற்கும் காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று சொல்லலுற்றாய் தூய்மை யில்லையா?
தென்னிலத்தை உழவில்லை
செந்தமிழ்விதைக்கவில்லை

இந்நிலையில் இந்திஓதி நாட்டிடவும் எண்ணுகின்ற
புன்மையுறு காங்கிரசா எங்கள்தமிழை -- இங்குக்
காத்ததென்று புகன்றனை வெட்கமில்லையா?

செந்தமிழ்க்கு நின்ற உயிர்
இந்திவந்தால் நின்றுவிடும்


( 315 )





( 320 )





( 325 )





( 330 )





( 335 )





( 340 )





( 345 )





( 350 )





( 365 )





( 370 )





( 375 )




( 380 )






( 385 )

என் தமிழா?

கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள்
சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா!
கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல்
இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா!
தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும்
பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா?

உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும்
பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா!
'தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்' -- இதை
நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா!
தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை
நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா!

உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர்
கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா!
தென்றற் பொதியமலை செந்தமிழ்க்கு மீறியதாய்
நின்றஉயிர் இந்திவந்தால் நீங்கிவிடும் என்தமிழா!
மொகலாயர் வந்து முடிபூண்டும் தம்மொழிதான்
சகலர்க்கும் சட்டமென்று சாற்றவில்லை என்தமிழா!
தாய்மொழிக்கு நேரெதிர்ப்பாய்த் தம்மொழியை வற்புறுத்தும்

பேய்களைநாம் கண்டதில்லை பேருகில் என்தமிழா!
அன்று தமிழ்நூல் அழித்தார்கள் ஆரியர்கள்
இன்றுதமிழ் வேரறுக்க எண்ணிவிட்டார் என்தமிழா!

காய்ச்சலுறு நாட்டில் கனித்தமிழே யல்லாது
மூச்சுறுத்தும் இந்திவந்து முட்டுவதா என்தமிழா!
தேளுக் கதிகாரம் சேர்ந்துவிட்டால் தன்கொடுக்கால்
வேளைக்கு வேளை விளையாடும் என்தமிழா!
இயற்கைத் தமிழ்மொழியை ஈடழிப் பதோஇந்திச்
செயற்கைமொழி உள்நாக்கைத் தீண்டுவதோ என்தமிழா!

உய்யும் தொழிற்கல்வி உள்ளதுவா இந்தியிலே
துய்ய கலைக்கதிலே தோதுமுண்டா என்தமிழா!
நாட்டுரிமை நாட்ட நடுமொழியாய் இந்திதனை
நாட்டிவிட்டால் அவ்வுரிமை நாடிடுமோ என்தமிழா!
பலபாஷை ரஷ்யர்களின் பச்சை விடுதலையை
உலகோர் வியப்ப துணராயோ என்தமிழா!
நிலவடையும் தண்தமிழை நீக்குவதோ? இந்திக்
கலவடையை மாட்டிக் கதறுவதோ என்தமிழா!

இந்தியிலே வீரம் இருக்குமெனும் ஈனர்களின்
புந்தியிலே பொய்யே புழுத்ததுவோ ? என்தமிழா!
இந்திக் கருத்துக்கள் இங்குண்டு செந்தமிழின்
கந்தமெலாம் இந்தியிலே காட்டச்சொல் என்தமிழா!
இந்தி தனைப்புகுத்தி ஏற்படுத்தும் நல்லுரிமை
பந்தியிலே வேறான பார்ப்பனர்க்காம் என்தமிழா!

நல்லுரிமை தேடும் நரிகள் முகமொன்றே
சொல்லும் அவர்எண்ணும் சூழ்ச்சிகளை என்தமிழா!
பார்ப்பனர்க்கே இந்திவரும் பச்சைத் தமிழரெலாம்
சீர்ப்படுதல் எவ்வாறு செப்பிடுவாய் என்தமிழா!
பள்ளியிலே தேர்ச்சிபெறும் பத்தில் ஒருதமிழன்
தெள்ளெனவே இந்திவரின் தேறான்காண் என்தமிழா!

சாதி யொழித்துச் சமயப்பித் தம்தொலைத்தால்
மீதி இருத்தல் விடுதலைதான் என்தமிழா!
பேதம் வளர்க்குமொரு பீடையினை இந்திஎன்றால்
ஏதும் தவறில்லை என்றறிவாய் என்தமிழா!
பொதுமொழிவேண் டாம்வோண்டாம் புன்மை மடமை எனும்

மதிப்பழக்கம் தீர்ந்தால் வரும்உரிமை என்தமிழா!
எல்லாரும் ஒப்புடையார் என்ற பெருநோக்கம்
எல்லார்க்கும் ஏற்பட்டால் இன்பமடா என்தமிழா!





( 390 )





( 395 )





( 400 )




( 405 )





( 410 )





( 415 )




( 420 )





( 425 )





( 430 )





( 435 )




( 440 )

வெல்க!

என்தாய் நாடே! இன்தமிழ் நாடே!
பொன்னிறக் கதிர்விளை நன்செய் வளத்தினை
தேன்மலர்ச் சோலையும் தென்னையும் வாழையும்
வானிடை உயரும் மங்காச் சிறப்பினை!
கனியென்று கட்டிக் கரும்பென்று வையத்
தனியென்று செந்நெல் தருவதோர் வளத்தினை!
குன்றாப் பயன்தரு குன்றுகள் உடையைநீ!
இன்பெனும் புதுப்புனல் ஆறுபாய் எழிலினை!
காடுகள் கழனிகள் ஓடைகள் புள்ளினம்
பாடும் பொய்கை பலப்பல உடையைநீ!
மின்தூங்கு மணிகள் மேவினை மாற்றுயர்
பொன்தூங்கு நிலவறை பொன்றாத் திருவினை!
உலகினை அழைக்கும் ஒளிமுத்துக் கடல்கள்
இலகு பவழ இலக்குகள் உடையைநீ!
இப்பார் எல்லாம் ஏந்துகை நிரப்பும்
உப்பளச் செல்வம் உதவும் திறத்தினை!

உழுவார் மனப்படி மழைபெறும் பேற்றினை!
ஒழியாது அசையும் தென்றல் உடையைநீ!
முகத்து நிலவு காட்டி மகளிர்
அகத்திறம் காட்டி ஒழுகும் அழகினை!
நாளை தூக்குக உலகைஎனில் இன்றே
வாளைத் தூக்கும் மறவர்உன் மக்கள்!
தத்துவ முதல்நூல் உலகுக்குத் தந்தனை!
கத்திலா இலக்கியம் கடலெனக் கண்டனை!
அமிழ்தென ஒருபொருள் உண்டெனக் காட்டும்
தமிழ்உன் மூச்சும் பேச்சும் ஆம்எனில்
என்ன இல்லை உன்பால்?
அன்னாய் அளப்பரும் பரப்பினை வெல்கவே.!




( 445 )




( 450 )




( 455 )





( 460 )




( 465 )