ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!
எதற்கும் உதவாதவன் அரசியலுக்கு
|
தசரதன் மகன் வந்தான் தலைக்கலைஞன் என்றான்
விசிறித் தலையைச் சீவி மேடை ஏறிவிட்டான்.
வசனம் பேசலுற்றான் வந்தது கல்மாரி
விசனப் பட்டான் வேறு வேலைதேடிக் கொண்டான்.
ஏமாளிகள் நாட்டில் எங்கும் இருக்கின்றார்
காமா சோமா என்று கதைகள் எழுதிப் பார்த்தான்.
பேமானிகள் பலரும் பிடித்துக்கொண்ட இடத்தைக்
கோமாளி போய் அங்கே குட்டுப்பட்டு மீண்டான்.
வட்டக் காட்சி சென்றான் வாகாய் வித்தை செய்தான்;
கொட்டாப்புளி உடம்பைக் கொழுக்க வைத்துக் கொண்டான்.
பெட்டைக் குதிரை ஏறி பின்முன் காலை மாற்றி
கொட்ட மடித்தபோது குதித்தான் முறிந்தது காலே.
காலைத் தேற்றிக் கொண்டான் கட்சிக்குள்ளே சென்றான்
மாலை தோறும் கூட்டம் மாலை மரியாதை!
வேலைக் குதவா ஆள்கள் வீராப்புகள் பேச
சாலை தோறும் கொடிகள் தலைமை தாங்கி நட்டான்.
"நாட்டில் வறுமை ஐயோ நடக்கலாமா ஆட்சி?
வீட்டில் பெண்டு பிள்ளை வேலை இல்லை கொடுமை
போட்டி டுங்கள் வாக்கை புரட்சி செய்வேன் என்றான்
போட்டார், வாக்கால் வென்றான் புதுமை ஏதும் இல்லை.
உதவாக் கரைகள் எல்லாம் ஊரில் நாட்டில் உலகில்
பதவி பெற்றால், மக்கள் பரிதவிப்பார் அன்றோ?
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 ) |
பொன் அஞ்சல் பேரன் தன் தாத்தாவுக்கு
|
அன்புள்ள தாத்தாஎன் வணக்கம்! நீங்கள்
ஐந்தெட்டு நாற்பத்தெட் டினில்வ ரைந்த
பொன்னஞ்சல் பெற்றுமிக மகிழ்ச்சி கொண்டேன்.
புது சைக்கிள் பற்றி, அதில் பேச்சே யில்லை.
தின்பண்டப் பெட்டியினைப் பெற்றுக் கொண்டேன்.
தேங்காய்ப்போட் டிருந்ததனால் ஊசிப் போன
மென்போளி உண்ணவில்லை. முறுக்கு நன்று.
மேனாட்டு விஸ்கத்தில் சுவையே இல்லை.
அப்பாவுடன் புதுவை வந்தேன். அங்கே
அன்புள்ள தங்களிடம், சிற்றன்னை மார்
ஒப்பரிய என்மாமா இடத்தி லெல்லாம்
உயர்வாக நான்நடக்க வில்லை என்று
செப்பினார், தந்தையார் அன்னை யார்பால்.
சீறிவிழு கின்றார்என் தாயார் என்மேல்!
அப்படிநான் தப்பிழைக்கவில்லை என்றே
அன்னையார்க் கோர் அஞ்சல் எழுது வீர்கள்!
வீட்டருகிற் காவிரியின் கரைக்கு நான்போய்
விளையாடல் தங்கட்குப் பிடிக்க வில்லை;
பாட்டையிலே இருந்தபடி ஆற்றின் தோற்றம்
பார்த்திடலாமா? காற்றை நுகர லாமா?
தோட்டத்து வீட்டினிலே ஓர் ஆடுண்டு;
சொல்லுவது பொய்யில்லை அந்த ஆடு
போட்டதுதா ஆத்தாநன்றாய் ஐந்து குட்டி
புதுமையா? இல்லையா? இதுபோகட்டும்.
தங்கள்மகள் -- என்தாயார் உடல் நலத்தைத்
தவறாமல் எழுதென்று சாற்றினீர்கள்!
பொற்கத்தான், பொரிக்கத்தான், குழம்பிடத்தான்,
புடைக்கத்தான், கொழிக்கத்தான். இடஉண்ணத்தான்,
தங்கத்தான் தம்பிக்கும் எனக்கு மேதான்,
தக்கவெலாம் செய்யத்தான் எவருள்ளார்கள்?
இங்கிவையும் பிறவும்என் தாயார் வேலை!
இந்நிலையில் தாயார் உடல் நிலைஎன் னாகும்!
வீட்டெதிரில் ஒரு நாளும் உண்மையாய் நான்
வெளிக்குப்போ கின்றதில்லை; என் மானத்தைப்
போட்டுநலி செய்யாமை வேண்டுகிறேன்.
இருட்டியபின் வெளியினிலே போவதில்லை
மாட்டண்டை எனக்கென்ன வேலை? பாலை
வார்த்தளித்தால் நான் அதனைக் குடிப்பதல்லால்!
காட்டூரான் குருடாயில் தன்னிற் செய்த
கடைமுறுக்கை நான்வாங்கித் தின்பதில்லை.
தெருவினிலே ஒருதிண்ணைப் பள்ளி யுண்டு
தெரிந்திருக்கும் உங்கட்கும். அதனை ஊரார்
பெரிதாக நினைப்பதில்லை. வாத்தியாரைப்
பிள்ளைகளும் மதிப்பதில்லை. ஆனால் இன்றோ
தெருத்திண்ணை பள்ளிக்கும் வாத்தியார்க்கும்
செப்பமுடி யாப்பெருமை! பள்ளி தன்னில்
இருநூறு மாணவர்கள் சேர்ந்துவிட்டார்
எள் விழவும் இடமில்லை பள்ளி தன்னில்!
நாள் ஒன்றின் வருமானம் வாத்தியார்க்கு
நாலைந்து ரூபாயாம். வாத்தி யாரின்
தோளின்மேல் விளக்கமுறும் சரிகைப் போர்வை,
துண்டொன்று, குடை, செருப்பு, பட்டு வேட்டி
ஆளைபார்த் தால்இன்று புதுமாப் பிள்ளை!
அத்தனைக்கும் காரணந்தான் என்னவென்றால்,
பாளையத்தில் அரசினரின் பள்ளி நீங்கிப்
பசங்களெல்லாம் என்பள் தன்னிற் சேர்ந்தார்.
அரசினரின் பள்ளியிலே இந்தி யென்னும்
அசல்கழுதை மொழிதன்னை வைத்திட்டாராம்
புரியாத பிறமொழியைப் பயனில்லாத
புன் மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்
சரியென்று சொல்லுபவர் வரலாம். இந்தி
தகாதென்போர் வரவேண்டாம் என்கின்றாராம்
அரசினரின் பள்ளியிலே பசங்கள் இல்லை.
அங்கங்கே தெருத்திண்ணைப் பள்ளி கொண்டார்.
என்சின்னம் மாமார்க்கும் மாமா பாட்டி
எல்லார்க்கும் என்வணக்கம் தெரிவியுங்கள்.
என் தந்தையார் நலத்தோ டிருக்கின்றார்கள்
இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் அங்கே
சொன்னபடி தவறாமல் போவோம் என்று
சொல்லுகின்றார் தந்தையார். அங்கு வந்தால்
முன்போல ஏமாற்றவேண்டாம்; சைக்கிள்
முன்னமே வாங்கிவைக்க. தங்கள் பேரன். |
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
|
கிழவி ஒருத்தி, கிழவன் ஒருவன்
இருவரும் காட்டில் இருந்து வாழ்ந்தனர்.
கிழவியின் அகவை எழுபத் தைந்து
கிழவனின் அகவை என்பதாகும்.
இருவரும் உழைப்பதில் சலிப்பில் லாதவர்
இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர்.
ஒருநாள் கிழவன் உணவிற் காக
அருநெல்லிக்கனி, அகழ்கிழங் கிற்காய்
நெடுந்தொலை சென்றான் நெடுநேரம் ஆயிற்று,
கிழவிக் கிருப்பே கொள்ளவில்லை.
கிழவனை எண்ணி உழன்றது உள்ளம்,
மாலைக் கதிரவன் மாலைவாயிலுக்குள்
காலை வைக்குமுன் கடிது சென்றாள்.
பத்துகல் தொலைவைப் பத்து நொடிக்குள்
சிட்டாய்க் கடந்தாள், கட்டழகுக் காளை
ஒருவன் திரும்பிக் கொண்டிருந்தான்; அவனைக்
கிழவி, கிழவனை வழியில் எங்கேனும்
கண்டனையோ என வினவினள்; கொண்டவன்
அவன்தான் என்பதை அவள் அறியாளே,
நான்தான் உன்றன் கணவன் என்றதும்
வான்இடி மழைபோல் வசைபொழிந்தாளே,
மயங்கி விழுந்தாள், வியர்த்தான் இளைஞன்;
அருகிலிருந்த ஓடையிலிருந்து
முகந்து மணிநீர் முகம் தெளித்திட்டான்;
பருகிட நீரை அருத்தினான்; அடடே
கிழவி அக்கணமே கொழுகொழு குமரியாய்
மாறினாள், மயங்கினான் இளையோன், நொடியில்
இருவரும் தம்தம் இளைமையில் மருண்டனர்.
சாவின் அங்காந்த வாயிலை யடையவே
கூவும் பருவம் கொண்ட இருவரும்
இளமை திரும்பிய தெப்படி என்றே
அளவளாவினர், அருகுள ஓடைநீர்
அருந்திய தால்தான் பருவம் திரும்பிற்று
அந்நீர் ஓடைநீர் அமிழ்தம்
செந்தமிழ் என்றதும் சிலிர்த்தது உணர்வே.
|
( 95
)
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|
வெயில்புக முடியா குயில்புகும் காடு
எண்ணிலா மரங்களின் இசைபயில் வீடு
கண்கவர் மலர்கள் கமழ்ந்திடும்கோடு
கோடுகள்தோறும் கொழிந்ததேன் கூடு
கூடுகள்தோறும் தேனிசை ஏடு
காடு இவ்வாராய்க் களித்திருக்கையில்
பாடும் குரலில் ஓடுநீரோடை
''அடர்ந்து படர்ந்த மரஞ்செடிக் கிடையில்
மடமட என்று தடையற்று ஓட
முடியவில்லையே முடியவில்லையே
கொடியதிக் காருடெனக் குறைக்கூறிற்று.
ஞாயிறு தோன்றலும் ஞாயிறு காய்தலும்
ஞாயிறு மறைதலும் நான் காணவில்லையே
ஒளிக்கதிர் வெப்பம் உண்ண முடியாதா
வெளிவான் மீன்களை வெண்ணிலாக் கதிர்களைப்
பார்த்துநான் மகிழ பார்த்துறவாட
ஆர்த்துமகிழ அகன்ற இக்காடு
தடையாய் உள்ளதே தடையாய் உள்ளதே
உடைந்த உளத்தோ டுரைத்தது நீர்ஓடை
முட்டாள் தனமாய் மூடி மறைக்கும்
பட்டாளம் போல் பரந்த இக்காட்டை
அழிப்பா ரில்லையா ஒழிப்பாரில்லையா
மொழியும் என் குரல் முழக்கம் கேட்கலையா''
என்று நீரோடை இயம்பி நடந்தது
''நன்று நீரோடையே'' என்று காடு!
பேசலுற்றது பேரிலை நாவினால்:
ஏசலுற்ற நீர் ஓடையே கேட்பாய்
என்மடி தவழும் சின்னஞ் சிறிய
குழந்தை நீ நின்றன் குறைமொழி கேட்டேன்
குழந்தைக்கு அறிவுக்கண் குருடென்பார்கள்,
உண்மை என்பதனை உன்னிடம் காண்கிறேன்
விண்ணில் சுழலும் விரிகதிர்ப் பரிதியின்
வெஞ்சுடர் உன்றன் மேனிற்படாமல்
கொஞ்சு நிழலினைக் கொடுத்து வளர்க்கின்றேன்.
சூராவளியின் தொல்லையில்லாமல்
நீரோடைஉனை நிழலில் வைத்துளேன்;
விண்வீழ் கொள்ளிகள் வீழ்ந்துனைச் சுடாமல்
கண்ணில் இமைபோல் காத்து வருகின்றேன்.
இலைமலி கிளைக்கைக் குடையுனுக்கு இலையேல்
அலையும் நீருடல் ஆவிபோயிருக்கும் வறட்சி உன் வாழ்வில் வறுமை தந்திருக்கும்;
சிறகு முளைக்குமுன் பறப்பதும் உண்டா?
பொறுப்பது நல்லது வலுப்பொறுவாய் நீ!
சமவெளிக்கு நீ அமைதியாய்ச் செல்லலாம்
உடன் பிறந்தோர் பலர் உடன் வருவார்கள்
ஒற்றுமை உங்களை உரம்பெறச் செய்யும்;
பற்பல இடத்தும் பாய்ந்து செல்லலாம்;
நீரோடைப்பெயர் ஆறென மாறும்
பேராறெவே பெரிதும் மகிழ்வர்
பரிதியின் ஒளிக்கதிர் பருகிடலாம் நீ
விரிந்த விண்ணையே எதிரொலிக்கலாம்
எக்காற்றிலும் நீ இணைந்து விளையாடலாம்
மக்களின் உழைப்பில் மகிழ்ந்திருக்கலாம்.''
காடிவ் மாறு கழற
ஓடைக் குழந்தை உவந்தோடியதே!
|
( 130
)
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 ) |
தென்றல் காற்று மலரில் ஆடி தேன் பொழிந்தது
குன்றில் மோதி அருவியாடி குளுமை தந்தது.
மகிழும் இள வேனிற்கால மரங்கள் யாவுமே
முகிழும் இளந்தளிர்கள் விட்டு மொட்டும் விட்டன.
வெம்மையோடு வெக்கை தந்த வேனில் காலையில்
செம்மை முகில்கள் கோடைமாரி சீற்றம் காட்டின.
பாரி, ஓரி, காரி வள்ளல் பரிசளித்தல்போல்
மாரி பெய்து மடுவு குட்டை மழை நிறைத்தது.
மழைபொழிந்து தெளிந்த வானில் மதி எழுந்தது
அழகுப் பெரியார் முகத்தைப்போல அமுதைப் பொழிந்தது
ஊரமைதியில் ஓடையின் நீர் பாடி ஓடிற்று
பேரமைதியில் பறவைகளும் பேசி ஓய்ந்தது.
தண்ட சோறு தின்னும் கூட்டம் சல சலத் தல்போல
அண்டை வகுப்பில் இந்தி வாத்தி பாடம் நடத்தல்போல்
குட்டைத் தவளைக் கூட்டம் எல்லாம் கொர கொரத்தது
பொட்டைத் தலையன் அரசியல் போல் புருபுருத்தது
பகல் முழுதும் ஆடு மேய்த்த பழையன் முத்தனும்
நுகம் அவிழ்ந்த காளைகள் போல் தூங்கப் போகையில் --
தகுதியற்றோன் தலைவனாகித் தமிழைக் குதட்டல் போல்
மிகுதியாக தவளைக் கூட்டம் இரைச்சல் இட்டது,
பாழையன்முத்தன்உறக்கம்கெடுக்கப்பாழும்தவளைகள்
மழையின் மகிழ்வில் கத்திப் பாடி அமைதி மறுத்தன.
உறக்கம் கெடுக்கும் தவளைகளின் உரத்த குரலினைத்
துறத்த வேண்டி முத்தன் பழையன் சூழ்ச்சி செய்தனர்.
முத்தன் சொன்னான் குளத்திலுள்ள அல்லி மொட்டினை
சற்று தீளக் காம்புடனே தறித்துப் போடென்றான்.
அல்லிக்குளத்தில் அல்லிமொட்டுக் கொடியை அறுத்துமே
மெல்ல குட்டையில் மிதக்க விட்டார் பழையன் முத்தனும்.
அல்லிக்கொடி மொட்டின் தோற்றம் அளையும் பாம்புபோல்
மெல்ல மிதக்கக் கண்ட தவளை மிகவும் அஞ்சியே
இரவனைத்தும் இரைச்சலின்றி இனிய தமிழன் முன்
குரலடங்கிய வடமொழிபோல் குமைந்திருந்தது.
ஒலியடங்க அமைதி இரவில் உறக்க ஓய்வினை
நலிவிலாது பழையன் முத்தன் நன்கு நுகர்ந்தனர்.
காலைக் கதிரோன் விழிக்கு முன்னர் கண் மலர்ந்தனர்,
காலைக்கடனை முடித்து குட்டைக்கரையைச்சேர்ந்தனர்.
அல்லிமொட்டுக் கொடியின் தோற்றம் அஞ்சும் பாம்பெண்
மெல்ல மிதக்கக் கண்டு சிரித்து வெளி எடுத்தனர்.
தவளைகளின் மகிழ்ச்சியினை மேலும் தடுப்பதேன்
அவற்றின்குரலைத்தொடங்கட்டும்என அவர்கள்சென்றனர்.
பாம்பொழிந்த களிப்பினாலே பச்சைத் தவளைகள்
தாம் தீம் என்று எகிரிக்குதித்து தாளம் இட்டன.
|
( 185
)
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 ) |
பூரியில் ஒருநாள் நானக்,
பூதேவர் எனநடக்கும்
ஆரியன் ஒருவன் தன் றன்
அகல்விழி மூக்கை மூடி
நேரிலே வருதல் கண்டார்
நேர்படும் கோலத்திற்குக்
கோரினார்; காரணத்தைக்
கூறினான் அந்தப்பார்ப்பான்.
''கண்ணையும் மூக்கையும் நான்
கட்டுவ தாலே சிந்தை
எண்ணங்கள் அடங்கி, நெஞ்சம்
இரண்டற ஒருமை கொள்ளும்
உண்மை ஒன் றுரைப்பேன் கேளீர்:
ஊனக்கண் உணரா ஞானக்
கண்ணினால் உலகம் மூன்றின்
காட்சிகள் காண்கின்றேன் நான்.
குருநானக் இதனைக் கேட்டு
குமிழ்சிரிப் புற்ற வண்ணம்
திருவர் கமண்டலத்தைத்
திருவாளர் பின்மறைத்தார்.
பெருஞானக் கண்ணால் யாதும்
பார்த்திடும் பெருமை கொண்டீர்
ஒருவாறு சொல்வீர் எங்கே
கமண்டலம் உள்ள தென்றார்?
மூன்றுல கத்தைக் காணும்
முனிவனால் கமண்டலத்தை
யாண்டுள தென்பதைத்தான்
இயம்பிட முடியவில்லை.
சான்றவர் நானக் சொன்னார்
சார்ந்தஉம் பின்புறத்தில்
தோன்றிடும் கமண்டலத்தை
துலக்காத உமது ஞானக்
கண்ணென்ன கண்ணோ? வீணாய்க்
கண்கட்டி வாயைப் பொத்தி
மண்ணுள்ள மனிதர் தம்மை
மருட்டிட வேண்டாம் என்றார்.
மண்கவ்விப் போனான்; நாணம்
மண்டிற்று முகப் பரப்பில்
திண்டாடிப் போனான் 'ஞானி'
செய்தவக் கோலம் தீர்த்தான்.
|
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 ) |
அருமையான அழகிய உடம்பு
பெருமைக்குரிய தலையில் இரண்டு
கருநெய்தலைப்போல் கவின் மிகு கண்கள்
துருதுரு வென்று பார்ப்பதே தொழிலாய்
உலகம் அனைத்தையும் ஓங்கி அளந்தன
கலகல என்றவை களிப்புடன் மிதந்தன.
அவ்வுடலின் கீழ் அணிவகுத்தனபோல்
செவ்வாழைத் தண்டெனச் சிறந்த கால்கள்
உடலைத் தாங்கலால் உழைத்துச் சிறந்தன.
நடந்து மகிழ்ந்தன நானிலமெல்லாம்.
உடலின் எத்தனை உறுப்புகள் இருப்பினும்
படர்விழிக் கேனோ காலின்மேல் பாய்ச்சல்
கால்களுக் கேனோ கண்ணின்மேல் காய்ச்சல்?
மேல் இவை தமக்குள் பொறாமை விளைந்தது.
கால்கள், ஒருநாள் கண்களைப் பார்த்து
மேலே இருந்து மிகு உழைப்பின்றித்
தொல்லையில்லாமல் சுழன்றிவ்வுலகினை
எல்லையில் இன்பமாய் இருப்பதாய் எண்ணின.
ஆதலால் கால்கள் ஆத்திரம் உற்று
மோதி மண் கட்டியை முகத்தில் தூவிற்று
கண்கள் மண்ணினால் கலக்க முற்றன.
எதனையும் பார்க்கும் இயல்பை இழந்தன.
அதனால் உடம்பு அலைந்துளைந் தயர்ந்தது.
பாரையின் பக்கம் ஒரு நாள் பலா
வேரினால் தடுக்கி விழுந்ததும், நடக்கும்
கால்கள் முரிந்தன; கவலை மிகுதியால்
பாழுடம் பென்னைப் பாடாய்ப் படுத்திற்று
என்று புலம்பின எலும்பொடிந்த கால்கள்,
இரண்டு கால்களும் எண்ணத் தொடங்கின
நான் ஏன் முரிந்தேன் கால்கள் நழுவின.
உடம்பெனை வீழ்த்திற்று ஏன் வீழ்த்திற்று?
அடடே அதற்குக் கண்ணிலை அன்றோ?
கண்கள் ... கண்ண்கள்ள் ... கலங்கின கால்கள்.
கண்களைக் கெடுத்தது கால்கள் அன்றோ?
கண்கள் போன பின் எதனைக் காணும்
பள்ளம் தெரியுமா பாறை தெரியுமா?
வெள்ளம் தெரியுமா வேர்கள் தெரியுமா?
என்று பற்பல எண்ணி ஏங்கித்
தன்றன் தவற்றினை, முட்டாள்தனத்தினை
நினைத்து வருந்திற்று, நெஞ்சில் அதற்குள்
ஓருடம்பினிலே உள்ள உறுப்புகள்
யார்க்கு யார்பகை என்று நினைப்பது
போர்க்குணம் மிக்கது பொறாமையால் என்றதே.
அதற்குள் ஒரு சில உடம்புகள் ஆங்கே
உதவியற்றுடைந்த உடம்பினைத் தூக்கி
மருத்துவ மனைக்குக் கொண்டு சேர்த்தன
கண்களில் இருந்த மண்ணை அகற்றினர்
புண் ஆறிற்று பொலிந்தன கண்கள்.
ஒடிந்த கால்களும் ஒட்டப்பட்டு
படிந்து நடக்கும் பாங்குபெற்றன.
கால்கள் மன்னிப்பைக் கண்ணிடம் பெற்றன.
குற்றம் பொறுக்கும் நற்குணத்தாலே
குற்றம் பார்க்கில் சுற்றம் இல் என
விழிகள் கூறின; மீண்டும் அவைதாம்
தமிழும் இசையும்போல் தழுவின நட்பினில்.
கால் சொல்லிற்று ''கண்ணே, இருவரும்
ஓருடம்பினிலே உறுப்பாய் இருப்பினும்
இருவரின் இயல்பும் வெவ்வேறாகும்
ஒருவரின் இயல்பு மற்றொருவருக் கில்லை.
எந்தப் பொருளையும் ஏறிட்டுப் பார்க்கும் நீ
எந்த இடத்திற்கும் ஏக முடியாது.
எவ்விடத்திற்கும் ஏகிடும் நானோ
எவ்விடத்தையும் காண இயலாது.
மேடும் பள்ளமும் காடும் கழனியும்
கூடும் நின் கண்கள் கொண்டு காட்டிடும்
அவ்விடமெல்லாம் அலுப்பில்லாமல்
செவ்வனே நடப்பேன், திக்கு முக்காடேன்,
ஒருவர்க் கொருவர் உதவியாய் இருப்போம்
என்று கூறிற்று கால்கள் இரங்கியே,
நன்றென்று விழியும் நன்றி கூறிற்று
காணவிரும்பும் காட்சிக்குகந்த
நீணில மனைத்தும் நீ எனைக்கொண்டு செல்
என்றன கண்கள், நின்ற கால்கள்
சென்றன திசையெலாம் சேர்ந்தே
ஒற்றுமையாலே உலகு உழல்கின்றதே!
|
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 ) |
போன உயிர் திரும்பி வந்தது பொன்னம்மா
-- என்
பொல்லாங் கெல்லாம் பறந்து போனதே -- என்னம்மா
தேனே என் செங்கரும்பே -- பொன்னம்மா
திகைக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா?
வானுக்கொரு முழுநிலவே பொன்னம்மா -- என்
வாழ்வுக் கொரு பெரு மகிழ்வே என்னம்மா.
மானே என் இளமயிலே பொன்னம்மா -- எனை
வாடவைத்தே எங்கே சென்றாய் என்னம்மா?
கட்டியதை விட்டதில்லை பொன்னம்மா -- உனைக்
காணும் கண் சிமிழ்த்துண்டோ என்னம்மா?
கொட்டி வைத்த மாணிக்கமே பொன்னம்மா -- மனம்
கொதிக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா?
தொட்டிலே போட்டதில்லை உன்னை நான் -- நீ
தொடையை விட்டுப் பெயர்த்ததுண்டோ என்னம்மா
சுட்டுவைத்த பண்ணியமே பொன்னம்மா -- எனைத்
துடிக்க வைத்தே எங்கேசென்றாய் யொன்னம்மா?
ஓடிவா ஒன்றுகொடு பொன்னம்மா -- நீ
ஒட்டிக் கொள்வாய் என் உயிரில் என்னம்மா,
பாடிவரும் தங்கவண்டே பொன்னம்மா -- எனைப்
பதைக்க வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா?
தேடினேன் கூடமெல்லாம் பொன்னம்மா -- உனைத்
தெருவினிலே கூவி நின்றேன் என்னம்மா
ஆடி வந்த பொன் மயிலே பொன்னம்மா -- எனை
அழ வைத்தே எங்கே சென்றாய் என்னம்மா?
அமுதுக் கென்ன தமிழுக் கென்ன பஞ்சமா? நீ
அண்டை வீடு செல்ல என் மேல் வஞ்சமா?
சமயச் சண்டை சாதிச் சண்டை இங்குண்டா? -- ஒரு
சமம் எல்லாரும் எனும் அமைதி அங்குண்டா?
சுமந்து பெற்றவள் றானிருக்கையில் வேறுதாய் -- உனைத்
தூக்கித் தூக்கிச் சுவையடைந்திட ஏன் நின்றாய்?
இமைக்கதவைத் திறந்து வைப்பேன் பொன்னம்மா -- உள்ளே
ஓடி வாடி மூடிக் கொள்வேன் பொன்னம்மா!
|
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
|
பெற்றத
னாலே -- கண்ணே உனைநான்
பெற்றத னாலே
எல்லாம் பெற்றேன் மண்மேலே
பெற்றத னாலே -- கண்ணே உனைநான்
பெற்றத னாலே!
மழலைமொழிக் கல்லூரி
புல்லாங்குழற் கச்சேரி
பழகப்ப ழக உடல் பூமாரி தேன்மாரி
பெற்றத னாலே -- கண்ணே உனைநான்
பெற்றத னாலே!
உன்தந்தை என்மீதில்
வருத்தம்கொள்ளும் போதில்
என்இடுப்பில் இருந்து தாவி
எழச்செய்வாய் எமக்குக் காதல்
பெற்றத னாலே! -- கண்ணே உனைநான்
பெற்றதனாலே!
காம்பேறும் கனியே -- உனைக்
காப்பாற்ற இனியே -- எம்
சோம்பேறி வாழ்க்கை போகும்
தொட்டதெல்லாம் பொன்னாகும்
பெற்றதனாலே கண்ணே உனைநான்
பெற்றதனாலே!
தேனூறும் கழகம் உண்டு
சீறடையும் உனைக் கொண்டு
நீ நடத்தும் தமிழ்த் தொண்டு
நினைக்க இன்றே இனிப்பதுண்டு
பெற்றதனாலே -- கண்ணே உனைநான்
பெற்றதனாலே!
நான் பெற்ற ஆணிமுத்து
நாட்டுக்கே மூலச் சொத்து
மேன் மக்கள் சொல்ல வைத்து
மிக மகிழ்வேன் அதை நினைத்து
பெற்றதனாலே -- கண்ணே உனைநான்
பெற்றதனாலே.
|
( 375 )
( 380 )
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
|
|
|
|