| படுக்கையில் களைப்போடு விழுந்தபோது அவுட்ஹவுஸு க்கு அருகில் தோட்டத்திலிருந்து பவழ மல்லிகைப் பூக்களின் ஈர வாசனை குளிர்ந்த காற்றுடன் கலந்து வந்தது. அந்த வாசனையை உள்வாங்கி மனத்திலிருந்த மாதவியைப் பற்றிய நினைவுகளுக்குச் சூட்டிக்கொண்டு உறங்கினான் அவன். மறுநாள் காலையில் விடிந்ததே அவனுக்குத் தெரியாது. அவன் எழுந்திருக்கும் போது ஏறக்குறைய மணி ஒன்பதாகிவிட்டது. அப்போது அவுட்ஹவுஸின் வராந்தாவில் - மாதவியின் குரலும், கோபாலின் குரலும் கலந்து கேட்டது. மாதவி வந்திருக்க வேண்டுமென்ற அநுமானத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் முத்துக்குமரன். பதினைந்து இருபது நிமிஷங்களுக்குப்பின் அவன் மறுபடி வெளியே வந்தபோது - நாயர்ப் பையன் காபி சிற்றுண்டியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தான். சிற்றுண்டியை முடித்துக் கைகழுவிக் கொண்டு வந்து அவன் காபியை பிளாஸ்கிலிருந்து டம்ளரில் ஊற்றிப் பருகிக் கொண்டிருந்த போது, மாதவி உள்ளே வந்தாள். ‘‘எனக்குக் கிடையாதா?’’ அவளுடைய குரல் அவனைக் கெஞ்சியது; கொஞ்சியது. முத்துக்குமரன் பிளாஸ்கைக் கவிழ்த்துப் பார்த்தான். அதில் காபி இல்லை. அவன் கையிலிருந்த டம்ளரில் முக்கால் வாசி பருகியது போக மீதமிருந்தது. ‘‘இந்தா, குடி...’’ - என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே அதையே அவளிடம் நீட்டினான் அவன். ‘‘நான் கேட்டதும் இதைத்தான்’’ - என்று புன்முறுவலோடு அதை அவனிடமிருந்து வாங்கிப் பருகினாள் |