| ஜீவகன். | | நமக்கத னாலென்? நன்றே யாமெனத் |
| | தமக்குச் சரியா மிடத்திற் றங்குக. |
| | எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? |
| | ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிக்க |
| 5. | கேவல மாக்கினர். அதற்குள கேடென்? |
| | குறைவென்? குடில? கூறாய் குறித்தே. |
| | |
| குடிலன், | | குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ ! |
| | நறையார் வேப்பந் தாராய் ! நமதிடங் |
| | கூட லன்றெனுங் குறையொன் றுளது. |
| 10. | நாடி லஃதலா னானொன் றறியேன். |
| | மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் |
| | ஆலய மொன்றையே யறிவர். முன்னொரு |
| | கோவி லமைத்ததிற் குறைவிலா வுற்சவம் |
| | ஓவ விலாதே யுஞற்றுமி னென்றவர் |
| 15. | ஏவினர். அஃதொழித் தியற்றின மிப்புரி. |
| | ஆதலா லிங்ஙன மோதினர். அதனை |
| | அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் |
| | ஒழுக்க மன்றே, குருவன் றோவவர்? |
| | |
| ஜீவ. | | ஐயரு மழுக்கா றடைந்தார், மெய்ம்மை. |
| 20. | கோவில் தானா காவலர் கடமை? |
| | கேவலம் ! கேவலம் ! முனிவரும் ! ஆ ! ஆ ! |
| | |
| குடில, | | அதிசய மன்றுபூ பதியே ! இதுவும். |
| | துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். |
| | மறந்தார் சிற்சில, வறிதே தமக்கு |