பக்கம் எண் :

533
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

I. இசைத் தமிழில் வழங்கி வருகிற சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவையென்று (நூற்படி) சொல்லும் பூர்வ முறை.

1. பூர்வ தமிழ் மக்கள் பயின்று வந்த இசைத் தமிழில் சுரங்கள் நிற்கும் அளவு.

சிலப்பதிகாரத்தில் சொல்லியிருக்கும் சில மேற்கோள்களைப் பார்த்தால், பூர்வத்தில் தமிழ் நூல்கள் மிகவும் விஸ்தாரமாயிருந்தனவென்று தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவியின் பாடலைப் பற்றியும் யாழ் வாசிக்குந் திறமையைப் பற்றியும் சொல்ல வந்த இடத்தில் சங்கீதத்தைப் பற்றிய விஷயம் மிகவும் சொற்பமாகவே சொல்லப்படுகிறது. இவற்றிற்கு உரையெழுதியவர்கள் அக்காலத்துச் சங்கீத பயிற்சிக்கு ஏற்றவிதமாய் உரையெழுதியிருக்கிறார்கள். அக்காலத்து முறை இக்காலத்திலில்லாது ஒழிந்ததனால், அவ்வுரையும் அர்த்தமாவது கடினமாயிருக்கிறது. என்றாலும் அடியில் வரும் சில வரிகள் சங்கீத சாஸ்திரத்தின் பூர்வ அம்சத்தைக் காட்டக் கூடியவையென்று தோன்றுகிறது.

அவை வருமாறு :-

சிலப்பதிகாரம் அரும்பதவுரை பக்கம் 31.

"மன்னு மளிகள் மலர்தேடி மதுவை யுண்டு வரைதோறும்
பன்னு சார லவையெங்கும் பற்றி யார்க்கும் வகையேபோன்
முன்ன மோசை பலவாகி முழுதும் வேறாய் மிடறொன்றாய்த்
தென்ன வென்னு மிசைவளர்த்துப் பண்ணா மாறு தேன்போல்"

மேற்கண்ட பாட்டில், தேனீக்களானவை மலைச் சாரலிலுள்ள பல பூக்கள் தோறும் சென்று தேன் சேர்க்கும் போது ஒலிக்கும் வெவ்வேறான இனிய ஓசை போல ஓசை வெவ்வேறாகிய பல சுரங்களையும் ஆராய்ந்து பொருத்தமுள்ள சுரங்களில் சஞ்சரித்து மிடற்றினால் இனிய குரலில் வெளிப்படுத்தவே அவை அத்தேனீக்கள் சேர்த்த தேன் போல், மதுரம் பொருந்திய பண்ணாகின்றன என்று சொல்லியிருக்கிறது.

சிலப்பதிகாரம் அரும்பதவுரை பக்கம் 7.

‘மிடறுமென்பது மூலாதாரந் தொடங்கிய மூக்கைக் காலாற் கிளப்பிக் கருத்தாலியக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பிக்கப் பட்ட பாடலியலுக் கமைந்த மிடற்றுப் பாடலு மென்றவாறு"

இங்கே மூலாதாரம் வரை அசைவாடுகிற மூக்சைச் சுவாசத்தினால் கிளப்பி அதாவது மேலெழுப்பித் தன் கருத்தினால் ஓசை பிறக்கச் செய்து ஒரு பங்காயிருந்த ஓசையை இரண்டு பங்காக்கி இனிய இராகங்களைப் பிறப்பிக்கிறது என்கிறார். இதில் நடுமூலமாகிய அறுகோணச் சக்கரத்தின் நடுமத்தியிலுள்ள இரத்தர சயத்தையே மூலாதாரம் என்கிறார். கீழ்மூலம், நடுமூலம், மேல்மூலம் என்ற மூன்றில் மேல் மூலத்திற்கும் நடுமூலத்திற்கும் நடுவில் சுவாசம் நின்று இயங்குவதினால் இதிலிருந்தே சத்தம் பிறக்க வேண்டும். சுவாசாசயத்தின் மேல் பாகமாகிய அடித் தொண்டையில் மந்தமான ஓசையாகி அதன் மேல் அடி நாக்கு வரை மத்தியஸ்தாயியாகி உண்ணாக்கின் மேல் மூக்கு சம்பந்தத்துடன் தாரஸ்தாயாகிறது. இவற்றில் முறையே மந்த ஓசையில் சத்தம் ஒன்றானால் மத்தியஸ்தாயியில் இரு மடங்காகவும் அதன் மேல் தார ஸ்தாயியில் அதின் இரு மடங்காகவும் ஆகிறது என்று விளங்குகிறது. தார ஸ்தாயி என்பது ஸப்த சுரங்களின் முடிவாகிய நி-யை தாரம் என்று சொல்லிய பூர்வ வழக்கின்படி நிஷாதத்திற்கு மேலுள்ள சுரங்களைக் குறிக்கும்.