பக்கம் எண் :

9

அதோடு,

‘‘ஆயத்துக் கீரா றறுநான்கு வட்டத்துக்
கேயுங்கோ ணத்துக் கிரட்டிப்புத் - தூயவிசை
நுண்மைக் கதிலிரட்டி நோனலகு மோர்நிலைக்கிங்
கெண்மூன்று கேள்விகொண் டெண்’’

என்ற இசை மரபு வெண்பாப்படி ஒரு ஸ்தாயியில் ஆயப்பாலையில் வரும் 12 அரைச்சுரங்களையும், வட்டப்பாலையில் வரும் 24 ஆன கால் சுரங்களையும், திரிகோணப்பாலையில் வரும் 48 ஆன அரைக்கால் சுரங்களையும், சதுரப்பாலையில் வரும் 96 ஆன வீசம் சுரங்களையும், நுட்பமாய்க் கண்டறிந்த தமிழ்மக்கள், தம் நுண்ணறிவிற்கேற்ப, யாழ் வாசிப்பதிலும், இராகம் ஆளத்திசெய்வதிலும் (இராகம் ஆலாபிப்பதிலும்) அவிநயிப்பதிலும், நடனஞ்செய்வதிலும் தாளத்திலும் குழலிலும், கணிதத்திலும், சோதிடத்திலும் மிகச் சிறந்த அறிவுடையவர்களாய் இருந்தார்களென்பதைக் காட்டச் சில குறிப்புகள் சொல்லியிருக்கிறேன். பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆதி இசைகளும், பண்களும் பலவிதமாகப் பேர் மாற்றப்பட்டு, 700, 800 வருடங்களுக்குள் முற்றிலும் மாறித் ‘தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாது’ என்று சொல்லும்படி நேரிட்டிருப்பதைக் காட்டும் சில குறிப்புகளும், எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவைகளை இப்புத்தகம் மூன்றாம் பகுதியில் 524 - ஆம் பக்கம் முதல் 775 -ஆம் பக்கம் வரையும் காணலாம்.

இப்புத்தகம் நான்காம் பாகத்தில், சுரங்கள் சுருதிகளினுடைய எண்களும், கணக்குகளும், அவைகள் வழங்கிவரும் இராகங்களும், அவற்றின் பேர்களும், அவைகள் வீணையில் இன்னின்ன விடங்களில் வருகின்றனவென்ற அளவு முறையும், தெளிவாகக் காணலாம்.

வானமண்டலத்தை 12 இராசிகளாகப்பிரித்து, அவைகளில் சஞ்சரிக்கும் ஏழு கிரகங்களின் கதிபேதத்தினால் உண்டாகும் வெவ்வேறு சஞ்சாரத்தைக் குறிக்கும் எண்ணிறந்த சாதகங்களைப்போலவும், அவைகளில் உண்டாகும் பலன்களைப்போலவும், முற்றிலும் ஒத்திருக்கும் விதமாகச் சங்கீத சாஸ்திரத்தையும் செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

ஒரு ஸ்தாயியை 12 சம அளவாகப்பிரிந்து, அவைகளில் 7 சுரங்கள் வரவேண்டிய இடத்தையும், அவைகளைக் கிரகம் மாற்றும்பொழுது உண்டாகும் அளவிறந்த இராகபேதங்களையும், நுட்பமான சுருதிகள் சேர்ந்துவரும்பொழுது உண்டாகும் மூர்ச்சனா பேதங்களையும் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, கிரகங்கள் நட்பு, ஆட்சி, உச்சம், திரிகோணம், நீசம், பகை முதலிய இடங்களையடைய பலன் வெவ்வேறாவது போலவே, சங்கீதத்தில் வழங்கிவரும் 7 சுரங்களும் இணை, பகை, கிளை, நட்பு என்ற இடங்களின் பேதம் பெற்று, இனிமையும் செயலும் ஆகிய இவைகளில் வேறுபடுகின்றன. ஒரு இராசிச்சக்கரத்தில், 2, 4, 5, 7, 9, 11, 12 முதலிய இடங்கள் கொள்ளப்படும் சுபஸ்தானங்களென்றும் 3, 6, 8, 10 முதலிய இடங்கள் விலக்கப்படும். பகை ஸ்தானங்களென்றும் சொல்லியிருப்பது போலவே, சங்கீத சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.

குரலே குரலாக ஆரம்பிக்கும்போது உண்டாகும் செம்பாலைப்பண்ணின் ஏழு சுரங்களை 2, 4, 5, 7, 9, 11, 12 முதலிய இராசிகளில் நிற்கும் சுரங்களாகக் காண்போம்.

அதுவுமன்றி 1, 3, 6, 8, 10 முதலிய 5 இடங்களில் வரும் சுரங்களும், செம்பாலைப் பண் அல்லது சங்கராபரண ராகத்திற்குப் பகை சுரங்களென்றும், அவைகள் முற்றிலும் விலக்கப்படவேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்கள். சங்கராபரண முறைப்படி அல்லது செம்பாலைப