பக்கம் எண் :

821
பன்னிரு இராசிகளில் வரும் ஏழு சுரங்களைப்பற்றிய பொதுக்குறிப்பு.

பலவும் இரண்டாம் மூன்றாம் புத்தகங்களாக சீக்கிரம் வெளிவரும். அம்முறையில் வழங்கிவரும் சுருதிமுறைகளே பூர்வம் இசைத்தமிழில் வழங்கி வந்திருக்கிறதென்று அதன்பின் நான் கண்டேன். அப்படியிருந்தாலும் சுருதிவிசாரணை ஏற்பட்டபின் அவைகளைப்பற்றி விசாரித்துக் கொண்டுவருகையில் பூர்வம் இசைத்தமிழில் வழங்கிவந்த ஆயப்பாலையிலுள்ள பன்னிரு சுரங்களையும் வட்டப்பாலையிலுள்ள 24 அலகுகளையும் அவற்றில் இரண்டு குறைத்து 22 அலகாக கானம்பண்ணும் பூர்வ தமிழ்மக்கள் இராகத்தையும் தற்காலத்தில் பாடப்படும் கர்நாடக இராகங்களின் நுட்பமான சுருதிகளையும் என் அனுபவ முறையையும் சேர்த்துக் கவனிக்கும்போது பூர்வம் தென்மதுரையிலிருந்த தமிழ் மக்களும் முத்தமிழ்ச்சங்கத்தாரும் பழகிவந்த இசைத் தமிழின் சுருதிகளே தற்காலம் உள்ளவையென்றும் மற்றும் அவர்கள் வழங்கிவந்த கணக்கின்படி நுட்பமான சுருதிகளுமிருக்கின்றனவென்றும் சொல்லவேண்டியது அவசியமாயிற்று.

II. சுரங்கள் சுருதிகள் நுட்பமான சுருதிகள் ஆகிய இவைகளின் கணிதமும் அவைகள் வழங்கிவரும் பண்களும்.

1. பன்னிரு இராசிகளில் வரும் ஏழு சுரங்களைப்பற்றிய பொதுக்குறிப்பு.

சீர்பெற்றோங்கி திருவிடம் என்று யாவராலும் கொண்டாடப்பட்டு வந்த தென்மதுரையிலும் அதைச்சேர்ந்த ஏழுதீவுகளிலும் அத்தீவுகளிலிருந்த எவ்வேழான நாற்பத்தொன்பது நாடுகளிலும் தமிழ்மொழியேபேசப்பட்டு வந்ததென்றும் அவை (சங்கம்) கூடி இயல் இசை நாடக மென்னும் முத்தமிழும் மற்றும் அரிய கலைகளும் ஆராய்ச்சிசெய்யப்பட்டு வந்தனவென்றும் நாம் அறிவோம். எவ்வேழான இந்த நாற்பத்தொன்பது நாடுகளே லெமூரியா வென்றழைக்கப்படுகிறதென்றும் அது இப்பொழுது இந்துமகா சமுத்திரமாய் இருக்கிறதென்றும் லெமூரியா நாட்டிலுள்ள பூர்வ குடிகளே இப்போது பற்பல இடங்களில் போய்த் தங்கியிருக்கிறார்கள் என்றும் லெமூரியா என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டின் மக்கள் பேசிவந்த தமிழ் மொழிகள் பலவும் பல பாஷைகளிலும் கலந்து வழங்கிவருகிறதென்றும் நாம் முதலாம் பாகத்தில் இதன் முன் பார்த்தோம்.

பூர்வ தமிழ் மக்கள் நீண்ட காலம் விசாரித்து விருத்திசெய்து வந்த இசைத்தமிழில் அரிய விஷயங்களைத்தவிர அக்காலத்தில் யாவரும் பொதுவாய் அறிந்திருந்த ஆயப்பாலையில் வழங்கிவந்த பன்னிரு சுரங்கள் மாத்திரம் தமிழ் நாடு கடல் கொள்ளுங்காலத்தில் உலகத்தின் மற்றெல்லாப் பாகங்களிலும் பரவினதென்று நாம் நிச்சயிக்க இடமிருக்கிறது.

லெமூரியா நாட்டிலிருந்து அதன் சுற்றோரங்களுக்குத்தப்பி ஓடின வாலில்லாக்குரங்குகளும் ஆயப்பாலையின் பன்னிரண்டு சுரங்களையும் வரிசையாகப்பாடுகின்றன வென்று மேற்றிசைவிற்பன்னர்கள் நேரில் பார்த்திருப்பார்களானால் தமிழ் நாட்டிலிருந்து (லெமூரியா) தப்பிப் பிழைத்த மனிதர்கள் ஆயப்பாலையில் வரும் பன்னிரண்டு சுரங்களில் கானம் பண்ணினார்கள் என்று நான் சொல்வது ஆச்சரியமல்லவே.

ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களையும் குரங்குகள் பாடுகின்றனவென்பதையும் மற்றும் சீவப் பிராணிகள் சங்கீதத்தில் பிரியமுள்ளவைகளாயிருக்கின்றன வென்பதையும் அடியில் வரும் வசனங்களில் காணலாம்.