பக்கம் எண் :

90அறமும் அரசியலும்

இருந்தாலும் நாட்டைத்தந்திரக்காரருக்கும் தன்னலக்காரருக்கும்
இரையாக்கிவிட்டு ஏங்கும் நிலைமை நீடிக்காமல் செய்வதற்கு இதுவே வழி.
ஆகவே, தனி ஒருவரின் வீரத்தையோ மானத்தையோ போற்றுவதால், நம்மை
அறியாமல் நாட்டைக் கெடுக்கின்றோம். பிற்போக்குக்குத் தள்ளுகின்றோம்
என்று நம் குற்றத்தை உணர வேண்டும். பக்கத்து ஊரார் தன்னைப்
பழித்தார்கள் என்று கேள்வியுற்று, அந்த ஊரை அழிக்க ஒருவன் படை
திரட்டினான் என்று வைத்துக்கொள்வோம். அவனை அறிஞர்கள் புகழ்வது
அறமா? பழித்தவர் யார் என்று அறியாமல் ஊரை அழிக்கும் கொடுமை,
தான் ஒருவன் உற்ற அவமானத்திற்காகப் பலரைத் திரட்டிப் பலருக்கும்
தொல்லை கொடுக்கும் கொடுமை இந்த இரண்டையும் வரலாறுகளில்
காணலாம்; உலகப் போர்களின் அடிப்படையிலும் இதுபோன்ற குறுகிய மன
உணர்ச்சியைக் காணலாம். இதுவரையில் இந்த மான உணர்ச்சியைத் தவறு
என்று உணராமல் வீரம் என்று மதித்திருக்கலாம். ஆனால் இனியேனும்
மாற்றுவதே கடமை. இந்தக் கடமையை அறிஞர்கள் செய்து உலகத்திற்கு
வழிகாட்ட வேண்டும் 'யான்' என்னும் செருக்கைப் பொது வாழ்க்கையிலிருந்து
துரத்தியடித்து அறத்தை நிலைநிறுத்தும் தொண்டு இதுவாகும்.

     பொது வாழ்க்கையில் தனிப்புகழும் தனிமானமும் இடம் பெறுவது
எவ்வாறு குற்றமோ, அவ்வாறே தனி விருப்பும் தனிவெறுப்பும் இடம்
பெறுவதும் குற்றமாகும். பெரும்பாலான மக்கள் ஊன் உண்ணாதவர்களாக
இருக்கும் விருந்தில், ஊன் உண்பவர் ஒருவர் சென்றால், பொதுநலம் கருதி,
தன் விருப்பமான ஊன் இல்லாமல் உண்டுவரவில்லையா?