பக்கம் எண் :

255

Untitled Document

                     10. ஆராய்ச்சி

இயற்றல் : ஆய்தல்

     பாட்டை   இயற்றும்   கலைத்திறன்  வேறு. அப்பாட்டைப்
படித்து இன்புறுவது வேறு;  அதை  ஆய்ந்து மதிப்பிடுவது வேறு1
பாட்டை நுகர்வதிலும்    வல்லவராக   இருத்தல் எளிது. பாட்டை
நுகர்ந்து பயின்றவர். பாட்டை  இயற்றக்  கற்றலும் கூடும். ஆயின்
பாட்டை இயற்றும்  கலைத்திறனும், பாட்டை  ஆய்ந்து மதிப்பிடும்
அறிவுத்திறனும்    வேறானவை.   இந்த இரண்டும் வேறுபட்டவை
என்பதை   ஐரோப்பாவில்    முதலில் தெளிவாக்கியவர் சாக்ரடிஸ்
என்னும் சிறந்த   அறிஞரே.   அவர் கலைஞர் சிலரை அழைத்து
அவர்கள்  இயற்றிய     பாட்டுகளை ஆய்ந்து கூறுமாறு கேட்டார்.
அவர்களால் அவ்வாறு ஆய்ந்து கூற இயலாமை கண்டார்2.

விதிகள்

     புலவர்     தம்   பாட்டுகளைப்   பற்றி ஆய்ந்து அவற்றின்
தன்மைகளை  விளக்க அறியாதவராயினும்,   அறிஞர்க்கு அதுதான்
இயலும்.    பாட்டுகளையோ   வேறு    இலக்கிய  வகைகளையோ
படைப்பது     அறிஞர்க்கு   அரிய   முயற்சியாகும்.  ஏன் எனில்,
இலக்கியத்தை  இப்படிப் படைக்கவேண்டும்  என்று   அறிவுறுத்தும்
விதிகள் இல்லை;  ஆகையால் இயற்கையாகப்     பெற்றுள்ள திறன்
கொண்டு, பயிற்சியால்  அதை வளர்த்து,    படைக்கும்  முயற்சியில்


      1. ஆங்கிலச் சொல்லாகிய Criticism என்பது Criticos
என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து அமைந்தது. அதற்கு ஆய்ந்து
தீர்ப்புக் கூறும் திறனுடையோன் என்பது பொருள்.
     2. L. Abercrombie, Principles of Literary Criticism
p.8