மக்களின் போக்கு, மேற்கொண்ட சமயம், குடும்பத்துப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கடந்து, தமிழுக்குத் தொண்டு செய்த பெரியவரைத் தமிழினம் என்றும் போற்றும். அவரைக் கவிமணி, சித்திரத்திற் பார்ப்போம் சிலைசெய்து கும்பிடுவோம் புத்தகத்திற் போற்றிப் புகழ்ந்திடுவோம்-இத்தரையில் சந்தப் பொதிகைத் தமிழ்முனிஎன் றுன்னைநிதம் சிந்தையிற் கொண்டு தெளிந்து எனப் போற்றுகின்றார். சமன் செய்து சீர்தூக்கல் நல்லாசிரியர், துலாக்கோல் போன்ற இயல்புடையவராய் இருக்க வேண்டும் என்று நன்னூற்பாயிரம் கூறி, துலாக்கோலின் இயல்பை, ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்யந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே என்று விளக்குகின்றது. திருவள்ளுவர், சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி (குறள்: 118) என்று கூறுகின்றார். இதற்குப் பரிமேலழகர், உரையும் விளக்கமும் பின் வருமாறு உரைக்கின்றார். “முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல, இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகாம். “உவமையடையாகிய சமன் செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒரு பால் கோடாமையும் உவமைக் கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒரு பால் கோடாமையாவது அவ் உள்ளவற்றை மறையாத பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களால் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” உரையாசிரியர்கள் நடுநிலை தவறாத சான்றோர்கள் அவர்களிடம் மேலே கூறியுள்ள பண்புகள் யாவும் நிறைந்துள்ளன. நூலாசிரியர் கருத்தறிதல் நூலாசிரியரின் உள்ளக் கருத்தை நன்கு அறிந்து உரையாசிரியர்கள் தம் விளக்கத்தில் வெளிப்படுத்தினர். தமக்கு முன் |