இவ்வுரையினை இயற்றியவர் பெயர் முதலிய வரலாறு தெரியவில்லை. 76ஆம் பாடலின் உரையில், “சின்மையைச் சின்னூல் என்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க” என்று இவர் எழுதுகின்றார். சின்னூல் என்பது குணவீர பண்டிதரால் இயற்றப்பெற்ற நேமிநாதத்திற்குப் பெயராக வழங்குகின்றது. நேமிநாதம் நன்னூலாருக்கு முன் தோன்றியது. ஆதலின், இவ்வுரையாசிரியரும் நன்னூலாரின் காலத்திற்கு முற்பட்டவர் என்னலாம். 68ஆம் பாடலில் (வரி-13) வடபுலம் என்பதற்கு, “போக பூமியாகிய உத்தர குரு” என்று உரை எழுதுகின்றார். இது சமணர் கருத்தாகும். இவர் சமணராக இருக்கலாம். இவருக்கு முன்னும் பதிற்றுப்பத்திற்கு உரை இருந்திருக்க வேண்டும். என்பர், என்று உரைப்பாரும் உளர், என்றும் பாடம் கொள்வர் என்று இவர் குறிப்பிடுகின்றார். பழந்தமிழ் நூல்கள் பலவற்றிலிருந்து பல மேற்கோள்களை இவர் காட்டுகின்றார். பாட்டில் அமைந்துள்ள அரிய சொற்களுக்குச் சிறந்த முறையில் பொருள் கூறுகின்றார். வினைமுடிபுகள் தருகின்றார். பிற உரையாசிரியர்கள் விளக்காத இலக்கணக் குறிப்புகளை இவர் எடுத்துஆண்டுள்ளார். பாட்டில் உள்ள புறத்துறைகளைத் தெளிவாக விளக்குகின்றார். செய்யுளுக்குப் பெயராய் அமைந்த தொடர்மொழிககிளன் பொருளை விளக்கி, நயவுரை கண்டு அதன் அழகில் ஈடுபடுகின்றார். பாட்டிற்குரிய தூக்கு வண்ணம் துறை இவற்றின் பொருத்தத்தை நன்கு விளக்குகின்றார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘இதனால் இன்னது பெறப் பட்டது’ என்று செய்யுளின் கருத்தைக் கூறுகின்றார். இவர், பதிகச் செய்யுளுக்கு முன்னால் குறிப்புரை தருகின்றார். வரலாற்றுச் செய்திகளை இவர் விளக்காமையால் அவற்றைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு இல்லை என்னலாம். செம்மீன் என்பதற்கு அருந்ததி (31-28) என்று பொருள் உரைக்கின்றார். “ஆயிடை; அவ் என்னும் வகர ஈற்றுப் பெயர் ஆயிடை என முடிந்தது” என்றும், (11:24). “அருவியாம்பல் என்றது வீ அரிய எண்ணாம்பல் என்றவாறு. வீ என்பது குறுகிற்று; அருவி பண்புத் தொகை” (63:19) என்று இவர் தரும் இலக்கணக் குறிப்புகள் அரியவை. கட்டணம் என்ற சொல்லே கட்டடம் (65:7) என்று மாறியதாக இவர் கருதுகின்றார். |