பக்கம் எண் :

471ஆய்வு

அடியார்க்கு நல்லார் உரையின்மையால் அவை அவர்க்குப் பின்னர்த்
தோன்றியவை என்னலாம்.

     வேனிற்காதையின் கீழே, ‘செந்தாமரை விரிய’ என்ற வெண்பாவும்,
‘ஊடினீர் எல்லாம்’ என்ற வெண்பாவும் காணப்படுகின்றன. அவற்றுள்
இரண்டாவதாக உள்ள ‘ஊடினீர்’ என்ற வெண்பாவுக்கே அடியார்க்குநல்லார்
உரை உள்ளது. ஆதலின் அப் பாடல் அவருக்கு முன்னும், ‘செந்தாமரை
விரிய’ என்ற பாடல் அவருக்குப் பின்னும் தோன்றி இருக்கவேண்டும்.

     கனாத்திறம் உரைத்த காதையின் கீழ் உள்ள ‘காதலி கண்ட’ என்ற
வெண்பாவிற்கும் அடியார்க்குநல்லார் உரை உள்ளது.

மேற்கோள் நூல்கள்

     நச்சினார்க்கினியர் தாம் கூறும் மேற்கோள் எந்த நூலில் உள்ளது
என்று கூறுவதில்லை. என்றார் பிறரும், என்பவை போல, எனவும் கூறுவன
காண்க என்று கூறி மேற்கோள் காட்டுவார். ஆனால், அடியார்க்குநல்லார்
தாம் கூறும் மேற்கோள் எந்த நூலைச் சேர்ந்தது என்று பெயர் கூறியே
விளக்குவார். மிகச் சில இடங்களில் மட்டுமே மேற்கோள் எந்த நூலில்
உள்ளது என்று குறிப்பிடாமல் செல்வார். மேற்கோள் கூறும் நூல் அவற்றின்
உட்பகுதி, பாடல் ஆகியவற்றையும் இவர் குறிப்பிடுகின்றார். ஆய்ச்சியர்
குரவையுள், கொல்லையஞ்சாரல் என்ற பாட்டு (20) உரையில், “கலியுள்
முல்லைத் திணையின்கண் ஆறாம் பாட்டினுள், “கழுவொடு.....வியன்புலத்தார்”
(கலி. 106:1-5) எனக் கருவி கூறினமையானும்” என்று மிகத் தெளிவாக
மேற்கோளை இடம் சுட்டிக் காட்டுகின்றார். ஏனைய உரையாசிரியர்களிடம்
இல்லாத பண்பு இது.

     உரைப்பாயிரத்துள், “இவ்வியலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச்
செய்யுள் அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ்நூல் தொல்காப்பியம்
ஆதலானும் பிறர் கூறிய நூல்கள் நிரம்பா இலக்கணத்தன ஆதலானும் அந்
நூலின் முடிபே இதற்கு முடிபு என்று உணர்க” என்கிறார் இவர்.

     பதிகத்தின் உரையில் இவர், “பொருளாராய்ச்சி எண் வகைய; அவை
திணை, பால், செய்யுள், நிலம், காலம், வழு, வழக்கு, இடம் என்பன” என்று
கூறி அவற்றுள் ஒவ்வொன்றினையும் விளக்குகின்றார். அவற்றிற்கு மேற்கோள்
சிலப்பதிகாரச் செய்யுள்களிலிருந்து தருகின்றார். சிலப்பதிகாரம் முழுமையும்
இவர் நெஞ்சிற்குள் நுழைந்து ஏற்ற மேற்கோள்களாக வெளிவருகின்றது.
அடியார்க்கு நல்லாரின் நுண்ணிய புலமைத்திறனும், நினைவாற்றலும் நம்மை
வியக்கச் செய்கின்றன.