பக்கம் எண் :

உரையாசிரியர்கள்668

இலக்கண வரம்புடையது. இவரது உரை, தமிழ் மரபுணர்ந்து எழுதப்பட்ட
செவ்விய உரையாகும்.

     இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது,
திருவிளையாடற் புராணம் ஆகியவற்றிற்கு உரை இயற்றியுள்ளார்.

திரு. வி. க. (1883-1953)

    திரு. வி.க. அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். இவர் நாவலராய் -
பாவலராய்-செந்தமிழ்க்காவலராய்-எழுத்தாளராய் விளங்கினார். இவர் சில
நூல்களுக்கு உரையும் இயற்றியுள்ளார்.

     இவர் பெரிய புராணத்திற்குக் குறிப்புரை இயற்றி வெளியிட்டார்.
திருக்குறள், முதல்நூறு குறள்களுக்கு விளக்கவுரை கண்டார். பட்டினத்தார்
பாடல், பத்திரகிரியார் புலம்பல் ஆகியவற்றிற்கு விருத்தியுரை இயற்றினார்.

     இவர் இயற்றியுள்ள திருக்குறள் விளக்கவுரை நயம் பல கொண்டது:
புதுமைப்போக்கு உடையது; விரிவானது. எண் குணத்தான் (10) என்பதற்கு
“எண்ணும் குணத்தான். அன்பர் என்னும் குணங்களை உடையவன்”, என்றும்
‘குணம் என்னும் குன்றேறி நின்றார்’ என்ற குறளுக்கு, “குணம் என்னும் மலை
ஏறி நின்றவர், தம்முள் கோபத்தை ஒரு நொடிப் பொழுதேனும் பாதுகாத்தல்
இல்லை. குணக்குன்றுகட்குக் கோபம் பிறப்பதில்லை” (27) என்றும் புதிய
விளக்கம் தருகின்றார்.

     ‘அன்பிற்கும் உண்டோ’ என்னும் குறளுக்கு இவர் தரும் விளக்கம்
இலக்கியச்சுவை மிகுந்ததாகும்.

     பட்டினத்தார் பாடல்களுக்கு மிக அரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன்
விளக்கவுரை தருகின்றார்.

    வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே
    சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே

என்பது பத்திரகிரியார் புலம்பல். இதற்குத் திரு. வி. க. உரை பின்வருமாறு
உள்ளது

     (பொ-ரை) “கல்வி பயிலும் விருப்பம் என்னை விட்டு நீங்கேன்
என்கிறது. சித்துக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆசை அழியேன்
என்கிறது.

     (வி-ரை) ‘கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும், என்றார் வாதவூரர்,
சித்தாசை பெரும் பைத்தியம். ஆசைகளில் தலையாயது சித்தாசை என்னலாம்.