விளங்கவில்லை. இருவேறு நூல்கள் என்பது பெரியோர் கொள்கை. அவற்றைப் பற்றிய விவரம் ஒன்றும் அறிதற்கில்லை.” என்பர் எஸ். சோமசுந்தர தேசிகர். தொல்காப்பியம் சிவமயம் என்பது, தொல்காப்பியத்திற்கு மறைஞான சம்பந்தர் இயற்றிய உரை நூலாக இருக்கவும் கூடும். தொல்காப்பியவுரை: நுண்பொருள்மாலை பரிமேலழகர் உரைக்கு நுண்பொருள்மாலை என்ற உரை விளக்கம் எழுதிய இரத்தின கவிராயரே, தொல்காப்பியவுரைக்கும் நுண்பொருள்மாலை என்ற பெயரால் விளக்கம் எழுதினார் என்பர். இவர், பழைய உரைக்கு விளக்கம் எழுதினாரா? அவ்வாறாயின் யாருடைய உரைக்கு விளக்கம் எழுதினார்? தாமே புதிய உரை விளக்கம் ஒன்று எழுதினாரா? என்பது விளங்கவில்லை. பதிபசு பாசப்பனுவல் உரை பதினாறாம் நூற்றாண்டில் சீகாழியில் பிறந்த மறைஞான தேசிகர் பதிபசுபாசப் பனுவல் என்ற நூலுக்கு காண்டிகை உரை (கண்ணழிவு உரை) இயற்றினார். இவ்வுரை கிடைக்கவில்லை. குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் உரைகள் மறைமலையடிகளார் தாம் இயற்றிய பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1951) என்னும் நூலின் முகவுரையில் (பக்கம்-16), “இன்னும் யாம் எழுதி வைத்திருக்கும் குறிஞ்சிப்பாட்டு ஆராயச்சியுரையும், மலைபடுகடாம் ஆராய்ச்சியுரையும், இனி எழுத நினைத்திருக்கும் ஆராய்ச்சியுரைகளும் விரைவில் வெளிவருவதற்குத் திருவருள் உதவி புரியுமென்று எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியுரைகள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். மறைந்துபோன உரைப் பகுதிகள் இன்று கிடைத்துள்ள உரைகளில், சில பகுதிகள் மறைந்து விட்டன. மறைந்துபோன உரைப் பகுதிகளை அறிய மற்றப் பகுதிகள் துணை செய்கின்றன. உரையாசிரியர்கள் முன்னர்க் கூறினாம், பின்னர்க் கூறுவாம் என்று கூறிச் செல்வதிலிருந்து மறைந்துபோன உரைப்பகுதிகளை அறிய முடிகின்றது. |