செய்து இறவாப் புகழ் பெற்றனர்; மொழி உள்ளளவும் பெயரை நிலை நாட்டிச்சென்றனர். நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை நுணுகி ஆராய்ந்து, தெளிவு பெற எடுத்து எழுதும் வன்மையாளராய் உரையாசிரியர்கள் விளங்கினர்; யார் யார் எவ்வெத் துறைநூல்களில் மிகுதியான பயிற்சி பெற்றிருந்தனரோ அவரவர் அவ்வத் துறை நூல்களுக்கு உரை எழுதினர். கல்லாத மேற்கொண்டு ஒழுகாமல், கசடற வல்லதையே உலகிற்கு உணர்த்தி நின்றனர். திருக்கோவையார், உள்ளப் படுவன உள்ளி உரைத்தக்க வாக்குஉரைத்து மெல்லப் படிறு துணி (திருக்-87) என்று கூறுவது போல, உரையாசிரியர்கள் நன்கு சிந்தித்து, பிறர்க்கு உரைத்து, தவறுகளை ஆராய்ந்து நீக்கி உரை எழுதினர். நூலாசிரியரின் உள்ளக் கருத்தை நன்கு அறிந்துகொள்ளப் பல நூல்களைப் பல நாட்கள் இடைவிடாது கற்றுத் தெளிந்து உரை கண்டனர்; நூலறிவோடு உலகறிவும் பெற்றனர்; நூல் வழக்கோடு பேச்சு வழக்கையும் அறிந்தனர்; பல வேறு சமயங்களையும் கலைகளையும் கற்றுத் தெளிந்தனர். இடைக்காலத்தில் தோன்றிப் பேயாட்டம் ஆடிய சமயப் பூசல்களுக்கும், வேற்றுமொழி மரபுக்கும் இடந்தராமல் நடுநிலைமையோடு உரையாசிரியர்கள் உரை கண்டனர்; நூலாசிரியர் சமயம், தம் சமயத்திற்கு மாறானது எனினும் சமயக் காழ்ப்பு இன்றி, நூலாசிரியரின் சமயக் கருத்துகளை நன்கு விளக்கினர்; பிற சமயக் கருத்துக்கள் தம் கொள்கைக்கு முரணாக இருந்தபோதும், அச்சமயக் கருத்துகளைக் கூறும் நூல்களைச் சலிப்பின்றி முயன்று அறிந்து உரை எழுதினர். உரையாசிரியர்களிடம் காணப்படும் இத்தகைய நடுநிலைமையை எண்ணும் போது, அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவின் மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே ஆசா ரியன தமைவு (ஏலாதி-75) என்ற ஏலாதிச் செய்யுள் நினைவுக்கு வருகின்றது. |