பக்கம் எண் :

166விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பெருக்கத்தைப்   பொறுத்ததன்று;    கவிதையின்   பொருட்   செறிவைப்
பொறுத்ததாகும்.  சிவனார்  பாடல்கள்  இரண்டும்   தியாகம்,   தேசபக்தி
ஆகியவற்றின் மேன்மையை விளக்குவனவாகும்.

காந்தியக் கவிஞர்

     திலகர் சகாப்தத்திலே எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதியார்  'தேசியக்
கவியாக   விளங்கினாரென்றால் காந்தி சகாப்தத்திலேயும் ஒருவர்  காந்திக்
கவிஞராகப்    புகழ்   பெற்றார்.    அவர்,   'நாமக்கல் கவிஞர்'  என்று
அழைக்கப்படும் திரு.வெ.இராமலிங்கம்   பிள்ளையாவார். தலைவர் ராஜாஜி,
"திலகர்  விதைத்த  வித்து  பாரதியாக  முளைத்தது. காந்தி தூவின விதை
நாமக்கல் கவிஞராகத் தோன்றியது" என்று வருணித்துள்ளார்.

     உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, "கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று  வருகுது"  என்ற  பாடலின்  வாயிலாகத்  தமிழ் மக்களுக்கு
அறிமுகமான  இவர்,   விடுதலைப்  போரில்  நேரடியாகக்  கலந்து சிறைத்
தண்டனையும்  பெற்றுள்ளார். காந்தியத் திட்டங்களான தீண்டாமை விலக்கு,
மது விலக்கு,  கதர்  அபிவிருத்தி, கைத்தொழில்  முன்னேற்றம், தாய்மொழி
வளர்ச்சி   ஆகியவை  பற்றி  ஏராளமான  கவிதைகளை   இயற்றியுள்ளார்.
அடிகளாரின்  "சாத்வீகம்" -  "சத்தியாக்கிரகம்"  ஆகிய   திட்டங்களுக்குத் 
தீவிரவாதிகளிடமிருந்து எதிர்ப்பு தோன்றியபோதெல்லாம் அந்த எதிர்ப்புக்கு
எதிர்ப்பு காட்டிப் பாட நாமக்கல் கவிஞர் தயங்கியதேயில்லை.

     காந்தி  சகாப்தத்தின்  ஒரு  கட்டத்திலே,  நேதாஜி  சுபாஷ்  சந்திர
போசும்,  அவரை   ஆதரித்த   தீவிரவாதிகளும்,  'காந்தி வழி'  பழசாகப்
போய்விட்டதென்று வழக்காடினர். அப்போது “காந்தி வழி பழசா?" என்னுந்
தலைப்புடைய  பாடலை நாமக்கல் கவிஞர் இயற்றினார். அதன் ஒரு பகுதி
வருமாறு:

     பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப் போனாள்
     பிறிதொரு தாய் வேண்டுமென்று பேசுவார்போல்
     நற்றவத்தால் நமக்கடுத்த தலைவன் காந்தி
     நானிலத்தின் உயிர்க்கெல்லாம் தாயாம் நண்பன்
     கற்றகதை சரித்திரங்கள் காணாச் சுத்தன்
     கருணையென்ப தின்னதெனக் காட்டும் தீரன்