பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 273

     "இக்காலத்தில்  தமிழ் நூலாசிரியர் படும் கஷ்டங்களை ஈசனே தீர்த்து
வைக்க வேண்டும். இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழி பெயர்த்துப்
போட்டால்  பலர்  வாங்கி வாசிக்கிறார்கள்.  அல்லது, இங்கிலீஷ் முறையைத்
தழுவி  மிகவும்  தாழ்ந்த  தரத்தில்  பலர் புது  நாவல்கள்   எழுதுகிறார்கள்.
அவர்களுக்கு கொஞ்சம் லாபமேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத்
திறமையும்  தெய்வ  அருளும்  பொருந்திய  நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர்
தோன்றியிருக்கிறார்கள்;   இவர்களுடைய   தொழிலை   அச்சடிப்பாரில்லை;
அச்சிட்டால்  வாங்குவாரில்லை.  அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில்
ஒரு நூலை காணும்போது அதில் ரஸமனுபவிக்க வழியில்லை. 

      "இங்கிலீஷ்  படித்த ஜனத் தலைவர்" காட்டும் வழியையே மற்றவர்கள்
பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப்
'பிரமாணஸ்தர்கள்'  தமிழ்   நூல்களில்   புதுமையும்   வியப்பும்   காணுவது
சாத்தியமில்லை  என்ற  நிச்சயத்துடனிருக்கிறார்கள்.  ஆகவே  நூலாசிரியர்,
தமக்குத்  தெய்வம்  காட்டிய  தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட
வழியில்லாமல், வேறு தொழில் செய்ய போய் விடுகிறார்கள்."

கவிஞரின் கனவு

     பாரதியார்,  இறவா  வரம்பெற்ற  நூல்களை மிகவும் அழகிய பதிப்பாக,
குறைந்த  விலையில்  வெளியிட  எண்ணினார். இதனைத் தம் நண்பர்களுக்கு
அவர்  விடுத்த  சுற்றுக் கடிதத்தில் கூறியுள்ளார். அதன் ஒரு பகுதியை இங்கு
பார்ப்போம்:

    "...வெளியிடுவதற்காக நான் தெரிந்தெடுத்துள்ள பலவும், உரைநடையிலான
கதைகள்;  உணர்ச்சி  தரத்தக்கவை;  இலக்கிய  நயம்  வாய்ந்தவை;  எளிய,
தெள்ளிய, இனிய நடையில் அமைந்தவை; எக்காலத்திலும் இருக்கக்
கூடியவை.

     இன்னும்   என்னுடைய   பதிப்புக்களின்  அச்சு  அமைப்பு   ஆகிய
எல்லாவற்றிலும்,  அமெரிக்க முறையைப் பின்பற்றி அநேக அபிவிருத்திகளைச்
செய்ய உத்தேசித்திருக்கிறேன்.