பக்கம் எண் :

50விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பாதிரிகளின் தொண்டு

     பத்தொன்பதாம்    நூற்றாண்டிலே      கிறித்துவப்    பாதிரிமார்கள்
தமிழ்மொழியின்       வளர்ச்சிக்கு      ஆற்றியுள்ள     பெரும்பணிகள்
போற்றத்தக்கவையாகும். தமிழ்,  முன்  எந்தக்   காலத்திலுமே   குறிப்பிட்ட
ஒரு   மதத்தினருக்கு   மட்டும்   உரியதாக   இருந்ததில்லை. வரலாற்றுக்கு
முற்பட்ட   காலந்தொட்டு,  மதங்கடந்த - எல்லா மதங்களுக்குரிய - மக்கள்
மொழியாக  இருந்து  வந்திருக்கின்றது. சங்ககாலம் எனப்படும் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு    முற்பட்ட     ஒருகாலத்திலேயே    தொழில்வழிப்பட்ட
நால்வேறு  வருணத்தினர்,  பல்வேறு  சமயத்தினர்,  வெவ்வேறு  சாதியினர்
ஆகிய   எல்லோருக்கும்   தாய்மொழியாக     இருந்திருக்கின்றது.  சைவ
அந்தணரான   நக்கீரர்   திருமுருகாற்றுப்படையையும், சமணர்  எனப்படும்
இளங்கோவடிகள்          சிலப்பதிகாரப்         பெருங்காப்பியத்தையும்,
புத்தமதத்தவரான   மதுரைக்   கூலவாணிகன்   சாத்தனார்  மணிமேகலைக்
காப்பியத்தையும,       சமணப்      பெருமுனிவரான    திருத்தக்கதேவர்
விருத்தப்பாவினால்  சீவகசிந்தாமணிக்  காப்பியத்தையும்   இயற்றியருளினர்.
தமிழின்பெருமைக்குச்    சான்றாக     விளங்கும்   ஐம்பெருங்காப்பியங்கள்
அனைத்தும்  புறச்சமயத்தவர்களால்  இயற்றப்பட்டவையாகும்.
 

     இந்த   மரபையொட்டியே  18,  19  ஆம்  நூற்றாண்டுகளில் தமிழகம்
போந்த  கிறித்துவப்  பாதிரிமார்களும்,  தமிழ்மொழியைப்பயின்று, இலக்கண-
இலக்கியப் புலமை பெற்று, அரியநூல்கள் பலவற்றைத் தமிழிலே இயற்றினர்.
அவர்களிலே முதல்வராகவும் முக்கியமானவராகவும்  விளங்கியவர்  பெஸ்கி
ஆவார். இவர், தமிழில் வீரமாமுனி எனப்புனைபெயர் பூண்டார்.

தேம்பாவணிக் காப்பியம்

     பெஸ்கி,  'தேம்பாவணி'   என்னும்  பெருங்காப்பியத்தைப் படைத்தார்.
அக்காப்பியம்    கிறித்துவ   சமயத்தின்   சார்பாக,  தமிழ்  அன்னைக்குத்
தரப்பட்ட  காணிக்கையாகும்.  அடைக்கல  மாதா  பேரில்  'திருக்காவலூர்க்
கலம்பகம்'  பாடினார்.  தமது  முப்பதாவது  வயதில் தமிழ் பயிலத்தொடங்கி,
தமிழன்னையின்   சுவீகாரப்    புதல்வராகிவிட்ட    வீரமாமுனிவர்,  வேறு
எவரும்  செய்யாத  அரும்பணியைத்  தமிழுக்கு  ஆற்றினார்.  ஆம்; தமிழ்
லத்தீன் அகராதி  ஒன்றைத் தயாரித்து  ஆங்கிலத்தில் வெளியிட்டார். 9000
கொடுந்தமிழ்ச்  சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும்  லத்தீனில்  விரிவாக
விளக்கம்கொடுத்தார்.