பக்கம் எண் :

74விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

தேசியத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஆனால், திலகர் சகாப்தம் தோன்றிய
பின்னர், காங்கிரஸ்  மகாசபையானது  இந்தியர்களின்  மரபுவழி  சொத்தான
தெய்வ பக்திக்கும் புதிய சொத்தான தேசபக்திக்கும் பிரதிநிதித்துவம் பெற்றது.
இந்தப் புதிய பண்பினை - தெய்வீகமும்  தேசியமும் கலந்த ஒன்றினை தமிழ்
மொழியிலேயுங்கலந்து, இலக்கியத்துறையிலே  ஒரு  புதுமையை - புரட்சியை
விளைவித்தார் பாரதியார்.

     இரண்டாவது  தொகுப்பு நூல் வெளியிட்ட ஓராண்டு கழித்து -அதாவது,
1910 ஆம்  ஆண்டு  நவம்பரில்  மூன்றாவது  தொகுப்புநூல் “மாதாவாசகம்”
என்னும்  பெயரில் வெளியானது. இந்நூலில்  இடம்  பெற்றிருந்த  பாடல்கள்
வருமாறு:

     மகாசக்தி
     மகாசக்திக்கு விண்ணப்பம்
     காளிக்கு ஸமர்ப்பணம்
     மஹாசக்திக்கு ஸமர்ப்பணம்
     நான்
     மனத்திற்குக் கட்டளை
     தெளிவு
     ஸ்வ சரிதை
     ஜாதீய கீதம் (புதிய மொழி பெயர்ப்பு)
     பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி
     கிருஷ்ணன் மீது ஸ்துதி

     மூன்றாவது  தொகுப்பிலேயுள்ள ‘சுயசரிதை’ என்னும் பாடல் - நூற்றுப்
பதினைந்து     செய்யுட்கள்   கொண்டதாகும்.   இத்தொகுப்பு   அதுவரை
தமிழ்மொழிப்  புலவர்கள்  புரியாத -பாரதி  மட்டுமே புரிந்த சாதனையாகும்.
தமிழிலக்கியக்  களஞ்சியத்திற்கு ஒரு புதிய வரவென்றே கொள்ள வேண்டும்.
மூன்றாவது தொகுப்புநூலும் -இரண்டாவது தொகுப்பு போலவே தேசபக்தியும்
தெய்வ பக்தியும் கலந்ததாகும்.

     1912ல் பாரதியாரின் ‘பாஞ்சாலிசபதம்’ வெளியானது. தமிழில் தோன்றிய
தலைக்காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்டஐம்பெருங்காப்பியங்கள், வில்லி
பாரதம்,   சேக்கிழாரின்  திருத்தொண்டர்புராணம்,  கம்பராமாயணம் ஆகிய
மாகாப்பியங்களைக் கண்டுவிட்ட தமிழகத்திற்கு பாரதியாரின்‘பாஞ்சாலிசபதம்’,
புதிய  வரவென்று  சொல்வதற்கில்லை. ஆயினும்,  அது  புதிய பாணியிலே
பாடியுள்ள புரட்சிக் காப்பியமாகும். அதனை அவரே கூறக் கேட்போம்: