பக்கம் எண் :

100என் சரித்திரம்

ஒருவாறு அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருப்பேன். அவரோ
சில தினங்களே குன்னத்தில் இருந்து தம் ஊருக்குப் போய் விட்டனர்.

வித்துவானோ, கவிராயரோ, பரதேசிகளோ யார் வந்தாலும் “அவர்கள்
ஏதாவது தமிழ் சம்பந்தமான செய்தியைச் சொல்ல மாட்டார்களா?” என்று
ஆவலோடு எதிர்பார்ப்பது எனக்கு வழக்கமாகி விட்டது. புதிய புதிய
பாடல்களையும் புதிய புதிய செய்திகளையும் கேட்கும்போது எனக்கு
உண்டாகும் திருப்தி வேறு எதிலும் உண்டாவதில்லை.

பரதேசிகள்

விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மாடு வெட்டி மங்கலம் என்னும் ஊரில் ஒரு
மடம் கட்டிக்கொண்டு சில பரதேசிகள் இருந்தனர். அவர்கள் வருஷந்தோறும்
திருவையாற்றில் நடைபெறும் ஸப்தஸ்தான உத்ஸவ தரிசனத்திற்காகப்
புறப்பட்டுக் குன்னத்திற்கு வந்து கணக்குப்பிள்ளையின் உதவியைப் பெற்றுச்
செல்வது வழக்கம். அவர்களில் ஒருவர் ஆசிரியர்; மற்றவர்கள் மாணாக்கர்கள்.
யாவரும் தமிழ் இலக்கியங்களிலும் அடிப்படையான இலக்கண நூல்களிலும்
பயிற்சியுடையவர்கள்; தமிழிலுள்ள வேதாந்த சாஸ்திரங்களில் நல்ல
திறமையைப் பெற்றிருந்தார்கள். ஞானவாசிட்டம், குமார தேவர் சாஸ்திரம்,
கைவல்ய நவநீதம், சசிவர்ண போதம், வைராக்கிய சதகம் முதலிய
நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறுவார்கள். அந்தச்
சாஸ்திரப் பயிற்சியை லக்ஷியமாகக் கொண்டே முதலில் இலக்கிய
இலக்கணங்களை அவர்கள் பயின்றார்கள்.

அவர்களுடைய வேதாந்த சாஸ்திர ஞானமும் அடக்கமும் சாத்விக
இயல்பும் சீலமும் தெய்வ பக்தியும் அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு
அலங்காரமாக விளங்கின. அவர்களாலே நான் சில விஷயங்களைத் தெரிந்து
கொண்டேன்.

குன்னத்தில் பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்த ஒருவர் முன்னே
குறிப்பிட்ட சார்வாய்க் குமாரசாமிக் கவிராயருடைய மாணாக்கர்; தமிழ்நூற்
பயிற்சியும் கவித்துவ சக்தியும் உள்ளவர்; மிக்க தைரியசாலி. அவர் எங்கள்
வீட்டிற்கு வேண்டிய நெய்யை மாதந்தோறும் தம் செலவில் வாங்கிக் கொடுத்து
உதவி வந்தார். அவரிடமும் சில தமிழ்ச் செய்யுட்களை நான் பாடங்கேட்டேன்.