பக்கம் எண் :

தருமவானும் லோபியும் 107

குன்னம் வந்தது

ஆறு மாதங்களுக்குப் பிறகு கஸ்தூரி ஐயங்கார் முதலியவர்களிடம்
விடை பெற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம்.
தருமத்திற் சலிப்பில்லாத அவ்வூரார் எங்களை ஆதரிப்பதிலும் எங்கள்பால்
அன்பு பாராட்டுவதிலும் சிறிதும் குறையவில்லை.

எனக்கு ‘மகாலிங்கையர் இலக்கணம்’ பாடஞ் சொன்ன தஞ்சை
ஸ்ரீநிவாஸையங்காரென்பவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை,
மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் என்னும் ஏழு நீதி நூல்களும்
அடங்கிய புஸ்தகம் ஒன்று கொடுத்திருந்தார். அப்புஸ்தகம் மத சம்பந்தமான
செய்யுட்களை மட்டும் நீக்கிப் புதுச்சேரியில் அச்சிடப்பட்டது; பதவுரை
பொழிப்புரையோடு தெளிவாகப் பதிப்பிக்கப் பெற்றிருந்தது. அதிலுள்ள
செய்யுட் களையும் உரைகளையும் படித்து ஆராய்ந்து மனனம் செய்து
கொண்டேன். பொன் விளைந்த களத்தூர் வேதகிரி முதலியார் அச்சிட்ட
நைடத மூலமும் உரையுமுள்ள புஸ்தகமும் நாலடியார் உரையுள்ள புஸ்தகமும்
கிடைத்தன. உரையின் உதவியால் இரண்டு நூல்களையும் ஒருவாறு பல முறை
படித்துப் பொருள் தெரிந்துகொண்டேன். அவ்விரண்டு நூல்களும் எனக்கு
மனப் பாடமாகி விட்டன. இடையிடையே சில சந்தேகங்கள் தோற்றின. கார்குடி
சென்று கஸ்தூரி ஐயங்காரிடம் அவற்றைக் கேட்டுத் தெளிந்து
கொள்ளலாமென்று எண்ணினேன்.

அன்னையாரின் அன்பு

என் கருத்தை அறிந்த தந்தையார் என்னை மாத்திரம்
அழைத்துக்கொண்டு கார்குடிக்குச் சென்றார். அங்கே நான்கு தினங்கள் இருந்து
கேட்கவேண்டியவற்றைக் கஸ்தூரி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்து
கொண்டேன். ஐந்தாம் நாட் காலையில் அவரிடம் விடை பெற்று நான் மட்டும்
ஒரு துணையுடன் குன்னத்திற்கு வந்தேன். தந்தையார் சில தினங்கள்
பொறுத்து வருவதாகச் சொல்லிக் கார்குடியில் இருந்தார்.

நான் குன்னத்திற்கு வந்து சேரும்போது என் தாயார் சில ஸ்திரீகளுடன்
ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் வேகமாக வந்து
என்னைத் தழுவிக் கொண்டார். கண்ணீர் விட்டபடியே, “என்னப்பா, நீ
ஊருக்குப் போனது முதல் நான் சாப்பிடவில்லை; தூங்கவில்லை. உன்
ஞாபகமாகவே இருக்