நாங்கள் வசித்து வந்த வீட்டினருக்கு உறவினர்; சுரோத்திரியதார்; நல்ல செல்வாக்குடையவர்; தமிழிலும் பழக்கமுள்ளவர். என் தந்தையாருக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று; இருவரும் சிநேகிதராயினர். அக்கனவான் என் தந்தையாருக்கு என் விவாகத்தைப்பற்றிய கவலை இருப்பதை நன்கு உணர்ந்து, “நீங்கள் களத்தூருக்கு வந்தால் விவாகத்திற்கு வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கும். பணம் வேண்டுமேயென்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லி அழைத்தார். தமக்குச் சங்கடங்கள் நேரும்போதெல்லாம் இவ்வாறு அன்பர்கள் உதவ முன் வருவதைக் கடவுளின் திருவருளாகவே எண்ணி மகிழும் தந்தையார் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டார். ராமையங்கார் தம் ஊருக்குச் சென்று சில தினங்களுக்குப்பிறகு எங்களை அழைத்து வரும்படி ஒரு வண்டியை அனுப்பினார். நாங்கள் அவ்வண்டியிற் சென்று களத்தூரை அடைந்தோம். எங்களுடன் சிறிய தந்தையாரும் சிறிய தாயாரும் வந்தனர். எங்களை வருவித்த ராமையங்கார் தனிகர். அவருக்கு ஒரு பெரிய மெத்தை வீடு உண்டு. அதில் ஒரு பாகத்தை ஒழித்துக் கொடுத்து எங்களை இருக்கும்படி சொன்னார். நாங்கள் அதில் தங்கினோம். எல்லா வகையான சௌகரியங்களும் அங்கே கிடைத்தன. களத்தூரின் அமைப்பு களத்தூர் ஜீவநதியாகிய வடவெள்ளாற்றின் கரையிலுள்ளது. பலவகை ஜாதியினரும் நிரம்பப் பெற்றது. முகம்மதியர்கள் கொடிக்கால் வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிற் சிலர் தமிழ்நூற் பயிற்சியுடையவர்களாக இருந்தனர். அவ்வூரில் ஓர் அக்கிரகாரம் உண்டு. அதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள், மாத்துவர்கள், தெலுங்கர்கள், ஸ்மார்த்தர்கள் என்னும் வகையினர் வாழ்ந்து வந்தனர். சிவ விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு ஆலயம் பிரபலமானது. துர்க்கை முதலிய தெய்வங்களின் ஆலயங்களும் உண்டு. பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன. களத்தூரைச் சார்ந்து ரஞ்சனகடிதுர்க்கமென்ற மலையரணும் ஊரும் உண்டு. அங்கே ஒரு நவாப் இருந்து வந்ததாகச் சொல்லுவார்கள். அவருக்குச் சொந்தமான நிலங்களும் மிகப்பெரிதான தோட்டமும் களத்தூரில் இருந்தன. அத்தோட்டத்தில் பல பழ விருட்சங்களும் புஷ்பச்செடிகளும் நிரம்பியிருக்கும். |